சென்னை புழல் பகுதியில் உள்ள காளித் தெருவை சேர்ந்தவர் இவர், இந்த சாமியார்(?) தங்களை கெட்ட வார்த்தையால் திட்டினால் தங்களுக்கு மிகப்பெரிய யோகம் வந்து விடும், தங்களது துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்று நம்பி தினந்தோறும் இவரிடம் வந்து திட்டு வாங்கி செல்கின்றனர் மக்கள்.
இந்த சாமியாரைக் காண காலையிலேயே இவர் வீட்டு வாசலில் திரளான பக்தர்கள் கூடி விடுகின்றனர்.
பல கோடீஸ்வரர்கள், சின்னத்திரை நடிகர், நடிகையர்கள் கூட இவரின் பக்தர்களாக உள்ளனராம்.இந்த சாமியாரைப் பற்றி அவரின் பக்தர்கள் என்ன கூறுகிறார்கள் பார்ப்போம்.
இந்தப் புழல் பகுதிக்கு இந்த சுவாமிகள்(?) வந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது,இந்த நான்கு ஆண்டுகளில் சாமியார் ஒரு முறை கூட குளித்ததில்லை, பல் துலக்கியதில்லை.
சாமியார் எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை, சூடம் பத்தி போன்ற எந்த பொருளையும் வைத்திருப்பதும் இல்லை.
தினந்தோறும் மூன்று வேளை கோழி, ஆடு, மீன் போன்ற மாமிச உணவுகளை மட்டுமே விரும்பி உண்ணுவார்.
சாமியார் தினமும் மூன்று பாட்டில் பீர் , இரண்டு குவாட்டர் பாட்டில் நெப்போலியன் பிராந்தி குடிப்பார்.
சாமியார் வாயைத் திறந்து பக்தர்களுக்குப் பலன் எதுவும் சொல்வதில்லை,
திட்டுவதைத் தவிர யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.ஒரு ரூபாய்த் தாளை இரண்டாகக் கிழித்து அதில் 9,12,18,21 என்று ஏதாவது ஒரு எண்ணைக் குறித்துத் தருவாராம்.அந்த எண்ணை எண் சித்தர்கள் என்று அழைக்கப் படும் ஜோசியர்களிடம் கொண்டு சென்று பக்தர்கள் பலன் கேட்டுக் கொள்ள வேண்டுமாம்(?).சாமியார் நல்ல மனநிலையில் இருந்தால் பக்தர்களை காதில் கேட்க முடியாத அளவுக்கு ஆபாசமான கெட்ட வார்த்திகளால் திட்டுவராம்.
அப்படி அவர் திட்டி விட்டால் திட்டு வாங்கிய அந்த பக்தருக்கு மிகுந்த அதிர்ஷ்டமாம்.சில நேரம் சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு சாலையில் போவோர், வருவோரையும் திட்ட ஆரம்பித்து விடுவாராம்.
வாகனங்களில் செல்வோர் இப்படி சாமியார் திட்டுவதைக் கேட்டதும் தங்கள் வாகானத்தை நிறுத்தி விட்டு அவரிடம் நன்றாக அருளாசி(?) பெற்று விட்டு மனநிறைவுடன்(?) செல்வார்களாம்.சில சமயங்களில் பக்தர்களை நோக்கி சாமியார் கல்லைத் தூக்கி வீசித் தாக்குவாராம்.
அப்படிக் கல்லடி படும் பக்தர்கள் மிகுந்த பாக்கியவான்களாம்.அப்படி அவர் வீசும் கற்களை எடுத்து நன்றாக பக்தியுடன் உற்றுப் பார்த்தால் அதில் ஏதாவது ஒரு கடவுளின் உருவமோ, அல்லது ஏதாவது விலங்கின் உருவமோ அல்லது ஒரு பொருளின் உருவமோ தெரியுமாம்.
எந்தக் கல்லை எடுத்து உற்றுப் பார்த்தாலும் அப்படி ஏதாவது ஓர் உருவத்தை நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியும் அல்லவா?.இப்படி கல்லால் அடித்து அருள்(?) தருவதால் கல்கட்டி சாமியார் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாராம்.
கெட்ட வார்த்தையால் திட்டுவதால் கெட்ட வார்த்தைசாமியர் என்றும்,ஒரு பீர் பாட்டிலை அப்படியே ஒரே மூச்சில் குடித்து விடுவதால் பீர் சாமியார் என்றும்,எப்பதுமே அழுக்குத் துணிகளுடனே காட்சி தருவதால் கோணிச் சாமியார் என்றும் பல பெயர்களால் அழைக்கப் படுகிர்றாராம்.
சாமியார் திட்டும் ஆபாசமான கெட்ட வார்த்தைகளை நாம் மொழி பெயர்த்துப் புரிந்து கொள்ள வேண்டுமாம்,சாமியார் திட்டும் ஒரு குறிப்பிட்ட கெட்ட வார்த்தைக்கு, திட்டப்படும் அந்தப் பக்தர் சிவலிங்கத்தை வணங்க வேண்டும் என்பது பொருளாம்.
ஆத்தா என முடியும் கெட்ட வார்த்தைகளால் சாமியார் திட்டினால் அம்மனை வழிபட வேண்டும் என்று பொருளாம்.இது போல சாமியார் திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்களாகவே ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதில் ஒரு பக்தர் இன்னும் ஒருபடி மேலே போய் இந்த சாமியாருக்கு இரண்டு கிரவுன்ட் இடத்தைக் காணிக்கையாகக் கொடுத்து விட்டாராம்.
இதெல்லாம் பார்த்தால் என்ன தோன்றுகிறது,பல நாட்கள் குளிக்காமல், பல் துலக்காமல் சரியாகப் பேசக் கூட இயலாத அளவுக்கு மன நிலை பாதிக்கப் பட்ட ஒருவரை சாமியார் என்று கூறிக் கொண்டு அவர் செய்யும் அர்த்தமற்ற காரியங்களுக்கு இவர்களாகவே அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு அந்த நபரால் தங்கள் வாழ்வில் ஏற்றம் கிடைக்கப் போவதாக எண்ணிக் கொள்ளும் இந்த மக்களை என்னவென்று சொல்வது.
உழைப்பின் மூலம் மட்டுமே உண்மையான முன்னேற்றம் கிடைக்கும் என்பதை மறந்து விட்டு குறுக்கு வழிகளில் வாழ்வில் முன்னேற வேண்டும் என எண்ணி இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர் இவர்கள்.மூட நம்பிக்கைகளில் சிக்கி பல ஆண்டுகளாக முன்னேறாமல் இருந்த நமது தமிழ் சமுதாயத்திற்கு , இப்போதுதான் சமூக அந்தஸ்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத் தகுந்த அளவு சுதந்திரம் பெற்று முன்னேற வழி கிடைத்து உள்ளது.
ஆனால் அது போன்ற பொன்னான வாய்ப்புகளையும் வீணடித்து விட்டு இது போன்ற அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் எப்படி முன்னேறுவது?.
இந்தக் குறிப்பிட்ட நபர் விவகாரத்தில் அவர் மக்களை ஏமாற்றவில்லை,மக்கள் தாங்களாகவே வழிய சென்று அந்த நபரை ஒரு சாமியார் என்று உருவகப் படுத்திக் கொண்டுள்ளனர்.மக்களிடம் மூட நம்பிக்கைகளும், உழைக்காமல் முன்னேற முயலும் தவறான ஆசைகளும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் குறு மனங்களும், தேவை இல்லாமல் அடுத்தவர் மேல் தோன்றும் போட்டி, பொறாமைகளும் நிறைந்து இருக்கும் வரை இந்த பீர் பாட்டில் சாமியார் போன்ற பல சாமியார்கள் உருவாக்கப் பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்....
மக்கள் இக்தகைய மூட நம்பிக்கைகளை விட்டொழித்து என்று மாறப் போகின்றனரோ தெரியவில்லை.............
நன்றி:அறிவிழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்