ஜனவரி 8-ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார்
சென்னை, ஜன.5: 32-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார்.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் ஆர்.எஸ். சண்முகம் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
32-வது சென்னை புத்தகக் காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகக் காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார்.
இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில், 588 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 512 நிறுவனங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்காக வைக்கின்றன.
லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான நூல்கள் வாசகர்கள் பார்வைக்கு வைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளின் புத்தகங்களும், மலேசியா உள்பட பல வெளிநாட்டு பதிப்பாளர்களின் நூல்களும் காட்சியில் கிடைக்கும்.
எல்லா தரப்பு வாசகர்களும் திருப்தியடையும் வகையில் இலக்கியம், அரசியல், சுயமுன்னேற்ற நூல்கள், பக்தி, சமையல், அறிவியல், வரலாறு, குழந்தைகள் நூல்கள் என எல்லாவிதமான நூல்களும் கிடைக்கும்.
கலைநிகழ்ச்சிகள்: காட்சி நடைபெறும் 11 நாட்களிலும் தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறும். தினமும் மாலை நேரத்தில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
குறும்படம்: அறிவுஜீவிகள் மற்றும் கலையுணர்வு மிக்க வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 2.30 மணி முதல் குழந்தைகள் பற்றிய உலகப் புகழ்பெற்ற குறும்படங்கள், இந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்படும்.
தினமணி பரிசு: புத்தகக் காட்சிக்கு வருவோருக்கான நுழைவுக் கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்டோருக்கு கட்டணம் இல்லை.
நாள்தோறும் டிக்கெட்டுகள் குலுக்கப்பட்டு, வாசகர்களுக்கு பல பரிசுகளும், தினமணி நாளிதழ் வழங்கும் ஆண்டு சந்தாக்களும் பரிசாக வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசம்: பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும், புத்தகக் காட்சிக்கு அதிக மாணவர்கள் வர வேண்டும் என்பதாலும் மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும்.
மருத்துவ முகாம்: புத்தகக் காட்சி மட்டுமல்லாது, சேவை நோக்கோடு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் சென்னை மோகன் நீரிழிவு மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படும். அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஆஸ்துமா நோய் அறியும் முகாம் நடைபெறும். அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்படும்.
இந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்காக 5 லட்சம் சதுர அடி பரப்பில் கார் பார்க்கிங், 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் சிற்றுண்டி உணவு விடுதி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்