முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
சென்னை, ஜன_23_
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாவித்தார்.
சமூகநீதிக் காவலரும், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு வழங்கிட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொண்டவரும், இந்திய அரசியலில் அரசியல் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவரும், தமிழக மக்களின் ஆழமான அன்புக்கும் பாசத்துக்கும் உரியவரும், கவிஞரும், ஓவியரும், தேசிய முன்னணியின் பிதாமகரும், முன்னாள் பிரதமருமான வி.பி.சிங் அவர்கள் தமது 77_வது அகவையில் 27.11.08 அன்று இயற்கை எய்தியது குறித்து இப்பேரவை பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
பொதுத் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் 1969_ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971_ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 1980_ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 1983_ம் ஆண்டுமுதல் 1987_ம் ஆண்டு வரை மீண்டும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 1989_ம் ஆண்டு இந்தியாவின் ஏழாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அவர் பிரதமராக இருந்தபோது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திடக் காரணமாக இருந்தார். சென்னை வெளிநாட்டு விமான தளத்திற்கு அண்ணா பெயரையும் உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தவுடன், அதனை ஏற்று அந்த மேடையிலேயே அதற்கான அறிவிப்பு செய்தார். ராஜ பரம்பரையிலே பிறந்திருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் மறைந்தாலும் அவரது மேதைமைத் தன்மையும், உயர்தனிச் சிறப்பும், சீரிய செயல்பாடுகளும் சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் த தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் முகத்தானும் மறைந்த இம்மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்