Breaking News
recent

கைம்பெண்ணை கதற வைக்கலாமா?

நான் புதியவள். என்ன விஷயங்கள் இதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு பரிச்சயமில்லை. எனினும், என்னுடைய அதாவது ஒரு பெண்ணுடைய கோணத்திலிருந்து, நம் சமுதாயத்தை நோக்கிய என் பார்வைகளை, இதில் பதியலாம் என்பது என் எண்ணம்.

நான் ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்பெண்ணுக்கு வயது 25 தான் இருக்கும். 16 வயதில் திருமணம். ஒரே ஒரு ஆண்குழந்தை. நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள். மிக அழகாக குடும்பம் நடத்தி வரும் வேளையில், கணவன் தொழிலில் நஷ்டமடைந்ததால் கொஞ்சம் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு வந்தார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு கடிதம் போட்டுவிட்டு, ஒரு லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.

2,3 நாட்கள் கழித்துத்தான் விஷயம் தெரிந்தது வீட்டுக்கு. உடல் மிகவும் அழுகி விட்டதால், யாரும் பார்க்கக்கூட இல்லை, அப்படியே கொண்டு சென்று அடக்கம் செய்து விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இளம் மனைவி, அவர் சாவை நம்பும் மனநிலையிலேயே இல்லை. அதுவும் 3 நாட்கள் முன்பு சிரித்துப் பேசியபடி, ஊருக்கு சென்றவர், இன்று இல்லை என்று சொன்னால், எப்படி இருக்கும்?

இந்நிலையில், அப்பெண்ணின், நகைகளையெல்லாம், கழட்டிவிட்டனர். அப்பெண் கதறுகிறாள், கெஞ்சுகிறாள். கடைசியில், அவள் கழுத்தில் கட்டியிருந்த கருகுமணியை, கழட்ட விடவே மாட்டேன் என்று, துணியால் இறுகப் பற்றிக் கொண்டு கண்ணீர் வடிக்கிறாள். யாரும் அவள் பேச்சை கேட்பதாயில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க, பெற்ற தாய் கூட முன்வரவில்லை. சாஸ்திரமாம் சம்பிரதாயமாம். எங்கே இருக்கிறது இந்த சம்பிரதாயம் நம் மார்க்கத்தில்?

கதறக் கதற அவள் கருகுமணியை கழட்டிவிட்டனர். மூன்று நாட்கள் சென்றதும், கருகுமணி தவிர, எல்லா நகைகளையும், திருப்பிக் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்கள். ஆனால், அப்பெண்ணின் இதயம் மரத்துப்போய், அவற்றை அணிந்து கொள்ள மறுத்து விட்டார்.

நான் கேட்பது? என்ன கொடுமையடா இது? கருகுமணி தான் கணவனா? குத்பா என்னும் பிரசங்கம் ஓதிவிட்டால் திருமணம் முடிந்ததே... அதன் பிறகு இந்த மணியெல்லாம் ஒரு அடையாளம் தானே! அப்படி இருக்கும் போது, அதை அப்படி வம்பு பண்ணி கழட்டத்தான் வேண்டுமா? சிறிது மனம் ஆறியபின், அவள் விரும்பினால் அணியட்டும், விரும்பாவிட்டால் தானே கழட்டிக் கொள்ளட்டும் என்று விட்டு விடலாமே?! ஈவு இரக்கமில்லாத ஜென்மங்கள் திருந்துவது எப்போது?

இன்றும் அப்பெண், இது நடந்து முடிந்து சுமார் 10 வருடங்கள் ஆகிவிட்டது, தன் ஒரே மகனுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல், எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

சமுதாயத்தினரே, சற்று சிந்தித்துப் பாருங்கள்!

-சுமஜ்லா.
SUMAZLA/சுமஜ்லா

SUMAZLA/சுமஜ்லா

2 கருத்துகள்:

  1. கருகமணி என்ற சம்பிரதாய முறையே இஸ்லாத்தில் இல்லை. அதே போல் குத்பா ஓதினால் திருமணம் முடிந்ததாக அர்த்தமாகி விடாது. மணமகளும், மணமகனும் சாட்சி, மற்றும் வலி (பெண்ணின் பொறுப்பாளி) முன்னிலையில் திருமணம் முடித்துக் கொள்கின்றோம் என்று சொன்னாலே திருமணம் முடிந்து விட்டது. குத்பாவெல்லாம் இங்கு தேவையே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எனினும் கருகமணி என்பது ஊர்பழக்கம் தான்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.