Breaking News
recent

அல்லாஹ்வின் அங்கீகாரம் உண்டா?


அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் நம்மை முஸ்லிம் என்றும் நாம் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் என்றும் சொல்லி இருக்கும்போது,இன்று நம்மிடையே புதிது புதிதாக உலாவரும் பெயர்களைக் கொண்டு தாங்களை அழைத்துக் கொள்ளும் முறை சரிதானா? இதுபற்றி சிந்திக்கவே அந்நஜாத்தில் வெளிவந்த இக்கட்டுரை இங்கு சிறு தொடராக தரப்படுகிறது.கருணையாளன் அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வானாக.
------------------------------------------------


தர்கா, தரீக்கா, மத்ஹபுகள் பெயரால் ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களிலிருந்தும், காதியானிகளிலிருந்தும், தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு தங்களை ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித் அஹ்ல ஹதீஸ் என இவர்களாக தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

இவர்களிடம் சத்தியத்தை நேர்வழியை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்மையிலேயே இருக்குமானால், அவர்கள் ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு கீழ்வரும் செய்திகளைப் படித்துப் பார்த்து எந்தக் கருத்து குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறது? குறைந்த பட்சம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு நெருக்கமாக இருக்கிறது, முரண் இல்லாமல் இருக்கிறது என்ற முடிவுக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

காதியானிகள், தர்கா, தரீக்கா, மத்ஹபுகாரர்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்கள் எல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது, நம்மை வேறுபடுத்திக் காட்ட 'ஸலஃபி', JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் போன்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அவர்கள் கோபப்படாமல் சிறிது சிந்திக்க வேண்டும். அவர்களது பெற்றோர்கள்! அவர்களுக்கு சூட்டிய அப்துஸ்ஸலாம், உமர், முஸ்தஃபா, கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன் போன்ற பெயர்கள் போலவே, இன்று கபுரு வணங்கிகள், அத்துவைதத்தை சரி காணும் சூஃபிகள், காதியானிகள் (ஏன்? சபரி மலைக்கு மாலை போடுகிறவர்களும், திருப்பதிக்கு காவடி தூக்குகிறவர்களும் கூட) இன்னும் அனைத்து வழிகெட்ட கூட்டங்களிலும் அதேபோல் அதே பெயர்களை உடையவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களை அப்பெயர்களால் அழைத்துக் கொள்கிறார்கள். எனவே தங்கள் பெயர்களை மாற்றி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று இப்பிரிவினைவாதிகள் என்றாவது எண்ணியிருக்கிறார்களா? கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தங்களது பெயர்களை சொல்லுவதையே சரி காண்கிறார்கள். இத்தனைக்கும் அவை அவர்கள் பெற்றோர்கள் சூட்டிய பெயர்கள் மட்டுமே.

இப்போது சிந்தியுங்கள், 'முஸ்லிம்' என்ற பெயர் அல்லாஹ் இந்த உம்மத்திற்குச் சூட்டிய பெயர். (பார்க்க அல்குர்ஆன் 22:78) அல்குர்ஆன் 41:33-ல் அல்லாஹ் தெளிவாக பிரசாரபணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்வதையே விரும்புகிறான். 'முஸ்லிம்' அல்லாத நிலையில் மரணிக்காதீர்கள் என்றும் கட்டளை யிட்டுள்ளான். (பார்க்க அல்குர்ஆன் 2:132, 3:102)

courtesy:அந்நஜாத்
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.