Breaking News
recent

இலக்கியம் ஓர் இஸ்லாமிய பார்வை!

    மனித வாழ்வின் பூரணத்துவம் மூன்று அடிப்படைத் தேவைகளைப் நிறைவு செய்வதில் தங்கியுள்ளது. சமூகத்தில் வாழ்வதற்கும் வாழ்வுக்கான வசதிவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்குமான அறிவுத் தேவைகள் (Intellectual Needs) முதன்மையானவ.

     மனிதன் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்று பரிமாணங்களின் கூட்டு என்ற வகையில் ஆன்மீகத் தேவைகளும் இன்றியமையாதவை. வணக்கங் களும் வழிபாடுகளும் அதில் அடங்குகின்றன. மனிதன் உணர்வுகளால் உருவாக்கப்பட்டவன். அவற்றைச் சரியாக நெறிப்படுத்தி முறைப்படுத்தும் போதே பூரணத் துவமான மனிதனை உருவாக்க முடியும். உணர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் கலை இலக்கியப் படைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது.

    கலை இலக்கியத் தேவை மனித இயல்புடன் ஒன்றித்தது. இதனை Aesthetic needs என்பர். கலை இலக்கிய ரசனை உணர்வு களிலிருந்து விலகியிருப்பது அசாத்தியமானது. புவியீர்ப்பு சக்தியிலிருந்து விலகியிருப்பது போன்றது. ஒரு சமூகத்தின் இருப் பையும் அதன் உளப்பாங்கையும் விளக்குவதில் இலக்கியத்தின் பங்களிப்பே மகத்தானது.

    இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் இலக்கியத்தில் மிகுந்த சமூக ஆர்வம் நிலவியது. அதன் காரணமாக சமூகத்தில் கவிஞர் களுக்கு பெரிய இடம் வழங்கப் பட்டது. கவிஞன் பிறக்கும் கோத் திரங்கள் புகழ்ந்துரைக்கப்பட்டன. தமக்கிடையே இயற்றும் தரமான கவிதைகளை கஃபாவில் தொங்கவிட்டு சுவைக்கும் ரசனை உணர்வு அவர்களிடம் காணப்பட்டது. இதனால்தான் ஜாஹிலிய்ய அறேபியர்களுக்கு மத்தியில் இறங்கிய அல்குர்ஆனின் அற்புத இலக்கியநயம் அவர்களைப் பெரிதும் ஈர்த்தது என பேரறிஞர் மஹ்மூத் ஷாகிர் கூறுகின்றார்.

    இஸ்லாம் கலாசார ஆன்மீகத்தின் ஊற்றாக இருப்பது போன்றே இலக்கியத்தின் அமுத சுரபியாக வும் விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் கவிஞர்களைப் பாராட்டியதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்துள்ளார்கள். அக்காலத்தில் பிரபல்யமான கவிஞர்களுள் ஒருவரான ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கவிதைகளை செவிமடுத்த அண்ணலார், "நீர் கவிதை பாடும் போதெல்லாம் ஜிப்ரீல் உன்னைப் பலப்படுத்துவாராக" எனப் பிரார்த்தித்தார்கள்.

    மட்டுமன்றி ஹன்ஸா எனும் ஜாஹிலிய்ய பெண்கவியின் கவித்துவ ஆற்றல்களை சிலாகித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் இலக்கியநயம் நபி (ஸல்) அவர்கள், அவர்களது கவிதை மொழி வழக்குகளை முனைப்போடு செவிமடுக்கத் தூண்டியது. நபி (ஸல்) அவர்கள் பெண்களின் மொழியிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தினார்கள். ஹப்ஸா (ரழி) அவர்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுக்குமாறு ஷபா என்ற பெண்மணியை அனுப்பிவைத்தார்கள். இவ்வாறு இலக்கியத்தில் ரஸூல் (ஸல்) அவர்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அவதானிக்கலாம். ஆயினும், எல்லாவற்றையும் பற்றிய இஸ்லாத்திற்கு என்றொரு பார்வைஉள் ளது. அந்தப் பார்வையூடாகத் தான் கலையையும் இலக்கியத்தையும் நாம் விளங்கவும் உருவாக்கவும் வேண்டும். அதுவே இஸ்லாமிய இலக்கியமாகவும் கலையாகவும் இருக்க முடியும்.

    சமகால இஸ்லாமிய அறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் இஸ்லாமிய இலக்கியத்தை பின்வருமாறு வரைவிலக் கணப்படுத்துகின்றார்: மனிதனது உள்ளம் வாழ்க்கை, பிரபஞ்சம், அவனது வரலாறு, சமூகம் போன்றவற்றை இஸ்லாமியத் தளத்திலும் இஸ்லாமிய பிரக்ஞையுடனும் அதேவேளை, கலை உணர்வுடனும் விளக்குவதே இஸ்லாமிய இலக்கியமா கும். சிலர் நினைப்பது போன்று இஸ்லாமிய இலக்கியம் என்பது வெறுமனே மதம் சார்ந்த இலக்கியத்தை மாத்திரம் குறிக்காது. மதம் சார்ந்த இலக்கியம் என்பது அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புகழ்வதாக மாத்திரமே இருக்கும். ஆனால், இஸ்லாமியம் எனும்போது அது உலகம் தழுவிய, விரிந்த தளத்தில் மேற்கிளம்புகின்றது.

    இஸ்லாமிய இலக்கியத்தின் வரையறைகள் பற்றிக் கூறும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழக இலக்கியத் துறை பேராசிரியர் கலாநிதி மகாரிம் தியரி: இலக்கியப் படைப்பாளிகளின் சுதந்திரத்தை இரு வகையாகப் பிரித்து நோக்கு கின்றார்.

    1. கட்டுப்பாடும் எல்லைகளுமற்ற அத்துமீறிய சுதந்திரம்: இது பின்நவீனத்துவ கோட்பாட் டின் அடிப்படைகளில் ஒன்று. இதன் மூலம் ஒரு படைப்பாளி தார்மீக சரிவுகளுக்கும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் துணை போகின் றான். மனித னின் அடிமட்ட உணர்ச்சிகளுக்கு தீனி போடும் தொழிலையே இத்தகையோர் செய்கின்றனர். கீழ்த்தரமான இவ் வகை இலக்கியங்கள் மனிதனின் பண்பாட்டுப் பெறுமானங்களை தகர்த்தெறிகின்றன.

    2. உண்மையான படைப்புச் சுதந்திரம்: சுதந்திரம் என்பது எவ்வித எல்லைகளும் அற்றது என்று இலக்கியவாதிகள் அர்த்தம் கொள்ளக் கூடாது. எந்த வொரு சுதந்திரத்திற்கும் பொறுப்புணர்வு உள்ளது. எனவே, விழுமியங்களின் எல்லைகளுக்குள்ளே மனித சமூகத்தின் மேம்பாடு பற்றி சிந்திப்பதே உண்மையான இலக்கியமாக முடியும். வரையறைகளைக் கடந்து படைப் பிலக்கியங்கள் உருவாக்கப்படும் போது அதுவே சமூகக் கட்டுக் கோப்பினை சிதைக்கும் கருவி யாக மாறிவிடுகின்றது. இத்தகைய அர்த்தமற்ற சுதந்திரத்தை வேண்டுபவர்களையே அல்குர்ஆன் கவிஞர்கள் வழிகேடர் களைப் பின்பற்றுகின்றனர் எனக்கண்டிக்கின்றது.

    இலக்கியப் படைப்புக்களை பண்பாட்டு வரையறைக்குள் படைக்கும்போது அது ஒரு வணக்கமாகக் கருதப்படுகின்றது. படைப்பாற்றலில் புதிய கலா உத்திகளைக் கையாள்வதற்கு இஸ்லாம் தடைவிதிக்கின்றது என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, அடிப்படையான வரை யறைக்குள் எவ்வகையான புதிய கலா உத்திகளையும் இலக்கிய வடிவங்களையும் கையாள்வ தற்கு இஸ்லாம் விரிந்த களத்தை திறந்து வைத்திருக்கிறது.

    அறபுலகத்தின் மிகப் பெரும் கவிஞர் நஜீப் அல் கைலானி இவ்வுண்மையை பின்வருமாறு வர்ணிக்கிறார்: இஸ்லாமிய கவிஞனின் இரண்டு கால்களும் பூமியில் ஆழப் பதிந்திருக்கும். அவனது இலட்சியங்களோ கார்த் திகை விண்மீன்களைத் தொடும் என்கிறார். இந்த வீரியமுள்ள வியாக்கியானமே ஓர் உண்மை யான இஸ்லாமிய கவிஞனை படம்பிடித்துக் காட்டுகின்றது. இஸ்லாமியக் கவிதைகளில் வெறும் கற்பனைகளும் உணர்ச்சி களும் மாத்திரமன்றி உண்மையும் சத்தியமும் கலந்திருக்கும் என்பதையே இவ்வார்த்தைகள் காட்டுகின்றன.

    இப்பின்னணியில் இஸ்லாமிய இலக்கியம் பின்வரும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று அறபுலகத்தின் மற்றொரு இலக்கியவாதியான அப்துல் முன்இம் அல் கப்பாஜி வரையறை செய்கிறார்.

    1. உணர்வு ரீதியான அனுபவங்கள்.

    2. இஸ்லாமிய உணர்வுகளின் சாரம்

    3. யதார்த்தமான கருப்பொருள்

    4. தெளிவான வார்த்தைகள்

    5. கற்பனையும் உருவகமும்

    6. புதிய கலா உத்திகள்

    இவ்வாறான பண்புகளைப் பிரதிபலிப்பதே இஸ்லாமிய இலக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.

    உண்மையில் இஸ்லாமிய போக்குள்ள நாவல்களிலும் கவிதைகளிலும் நாடகங்களிலும் இஸ்லாமிய பாரம்பரியம், கலாசாரப் பண்புகள், இஸ்லாமிய உணர்வலைகள் விரவிக்காணப்படும். வாழ்க்கை என்பது நோக்கமும் இலட்சியம் கொண்டது என்ற கருத்து அவற்றில் இழையோடும். விரக்தி நம்பிக்கையீனம் என்பதற்குப் பதிலாக நம்பிக்கையும் விசுவாசமும் விரவிக் கிடக்கும். பிரபஞ்சம் மனிதன், வாழ்வு ஆகிய முப்பெரும் யதார்த்தத்தை தொட்டுப் பேசும்.

    பள்ளிவாயல்களும் கஃபதுல்லாஹ்வும், மஸ்ஜிதுல் அக்ஸாவும் இஸ்லாமிய கதைகளிலும் கவிதைகளிலும் அடிக்கடி வரும். அல்லாஹ்வும் அவனது அருளும் அவற்றின் கருப்பொருளாக அமையும். உதாரணங்கள், உவமானங்கள் கற்பனைகளில் எல்லாம் இஸ்லாத்தின் கருத்துக்களே பிரதிபலிக்கும். இதுதான் இஸ்லாமிய இலக்கியம்.
நன்றி:மீள்பார்வை
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.