Breaking News
recent

லட்சியத்தை எட்டுவது எப்படி?


தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.
ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.
வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.
நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.
கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.
நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.
மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே "நெகட்டிவ்" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்
நன்றி:DinaMini.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.