Breaking News
recent

மீத்தேன் திட்டம்: ஜூலை 27-ல் வேலைநிறுத்தம்

மீத்தேன் வாயு அகழ்வுத் திட்டத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் ஜூலை 27-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்கத்தின் அமைப்பாளர் க.கா.இரா. லெனின் தெரிவித்தது:
காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்திய பிறகும் கூட அந்த நிறுவனம் தஞ்சாவூரில் முகாமிட்டு 50 கிராமங்களில் நிலம் வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுத்தால் வளங்கள் பாழ்பட்டுவிடும். குடிப்பதற்குத் தண்ணீர் கூட கிடைக்காது. 1,850 அடி ஆழத்துக்குத் தோண்டி 30 ஆண்டுகளுக்கு மீத்தேன் வாயுவும், 100 ஆண்டுகளுக்கு நிலக்கரியும் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வங்கக் கடல் தண்ணீர் ஊருக்குள் புகும் அச்சம் உள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜயந்தி நடராஜன் ஜூலை 25-ம் தேதிக்குள் தடை விதிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
 தமிழக அரசு நியமித்துள்ள ஆய்வுக் குழுவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரை இடம் பெறச் செய்ய வேண்டும்.  ஆய்வுக் குழுவினர், காவிரிப் பாசனப் பகுதியில் நேரடியாகச் சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் லெனின்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.