Breaking News
recent

அதிரை கல்லூரி, பள்ளிகளில் குரூப்–4 தேர்வு 4 மையங்களில் நாளை நடைபெறுகிறது!

அதிரையில்  நாளை (25-8-13-ஞாயிறு)  குரூப்–4 தேர்வு நடைபெற இருக்கிறது. இமாம் ஷாஃபி பள்ளி(ஷிஃபா மருத்துமனை அருகில்) காதர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகள், காதர் முகைதீன் கல்லூரி ஆகிய இடங்களில் இத் தேர்வு நடைபெறும்.

தஞ்சை மாவட்டம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் குரூப்–4 தேர்வு நாளைநடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த தேர்வு 92 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 45 ஆயிரத்து 358 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த தேர்வு நடத்துவது குறித்து கலெக்டர் பாஸ்கரன், தேர்வுக்கூட முதன்மை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தஞசாவூர் வட்டத்தில் 31 மையங்களில் 19 ஆயிரத்து 184 பேரும், திருவையாறு வட்டத்தில் 8 மையங்களில், 2 ஆயிரத்து 955 பேரும், ஒரத்தநாடு வட்டத்தில் 6 மையங்களில் ஆயிரத்து 966 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 19 மையங்களில் 11 ஆயிரத்து 123 பேரும், பாபநாசம் வட்டத்தில் 4 மையங்களில் ஆயிரத்து 935 பேரும், திருவிடைமருதூர் வட்டத்தில் 3 மையங்களில் ஆயிரத்து 61 பேரும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 17மையங்களில் 5 ஆயிரத்து 452 பேரும், பேராவூரணி வட்டத்தில் 4 மையங்களில் ஆயிரத்து 682 பேரும் ஆக மொத்தம் தஞசாவூர் மாவட்டத்தில் 92 மையங்களில் 45 ஆயிரத்து 358 பேர் குரூப் 4 தேர்வினை எழுதுகிறார்கள்.
விடைத்தாள்
தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் உரிய காவல் துறை பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 6 மணியளவில் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்கள் மற்றும் இதர பொருட்கள் தங்கள் தேர்வு மையத்திற்கு உரியதுதானா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் அறைக்குள் அலைபேசி, கால்குலேட்டர் மற்றும் இதர மின்னணு கருவிகள் தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. 10.30 மணிக்கு மேல் வரும் தேர்வாளர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது. நுழைவுச்சீட்டின்றி வரும் தேர்வாளர்கள் தாங்கள் தேர்விற்கு விண்ணப்பித்ததற்கான பதிவு எண் அல்லது விண்ணப்ப எண் கொண்ட ஆவணங்களை அளிக்கும்பட்சத்தில் தேர்வெழுத அனுமதிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் இருக்கை அமைக்க தேவையான நடவடிக்கைகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும். பார்வையற்ற தேர்வாளர்களுக்கு கூடுதலாக 1/2 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தேர்வு நடைபெறுவது வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், பயிற்சி கலெக்டர் ராகுல்நாத், கோட்டாட்சியர்கள் காளிதாஸ் (தஞசாவூர்), சங்கரநாராயணன் (கும்பகோணம்), முருகேசன் (பட்டுக்காட்டை), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) குணசேகரன், நடராஜன் (கணக்கு), முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு, தேசிய தகவல் மைய இயக்குனர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.