Breaking News
recent

குழந்தைகளைக் குறி வைக்கும் செக்ஸ் கிரிமினல்கள்!



நாடு முழுவதும் பாலியல் வன் முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கர்நாடகாவில் பெங்களூர் பாதுகாப்பில்லாத நகரமாக மாறி வருகிறது.
பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள் எனத் தொடர்ந்து பல சம்பவங்கள் அங்கே நடந்து வருகின்றன. அதுவும் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை பிரபல ஆங்கில நாளேடான ‘தி ஹிந்து’ இதழ் வெளியிட்டுள்ளது. அதைத் தூது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.
பெங்களூரில் 2012ம் ஆண்டில் பல்வேறு நீதிமன்றங்களால் வன்புணர்வு வழக்கில் மட்டும் 7 நபர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் முழுவதும் 2012ல் மட்டும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு வந்த வழக்குகளின் நிலவரம்:
மொத்தம் வழக்குகள் – 2076, தண்டிக்கப்பட்டவர்கள் – 65, விடுவிக்கப்பட்டவர்கள் – 363, நிலுவையில் உள்ளவை – 1648.
கர்நாடகாவில் 2012ல் வன்புணர்வு வழக்குகளின் சதவீதம்: குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது – 3.13 சதவீதம், குற்றவாளிகள் இல்லை என விடுவிக்கப்பட்டவர்கள் – 17.49 சதவீதம், வழக்குகள் நிலுவையில் உள்ளவை – 75.28 சதவீதம்.
பெங்களூர் நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 98 வழக்குகள் குழந்தைகளுக் கெதிரான பாலியல் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தந்தையே தன்னுடைய சிறிய மகளை வன்புணர்வு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் அந்தக் குழந்தையை தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
தற்பொழுது குழந்தைகளை வன்புணர்வு செய்வதில் இது போன்ற பெருநகரங்கள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. பெங்களூர் நகர காவல்துறை கடந்த செவ்வாய்க்கிழமை வரை பெண்களுக்கெதிரான பாலியல் வழக்குகள் 38 என பதிவு செய்துள்ளது. இதில் 10 வழக்குகள் வயதுக்கு வராத சிறுமிகள் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்றது.
காவல்துறையின் புள்ளிவிவரம், 98 வழக்குகள் குழந்தைகளுக்கெதிரானவை என்று கூறுகிறது. இது, கடந்த 2010ல் இருந்து 2013 வரை நடந்தவை. இதில், 2010ம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் 2011ம் ஆண்டு குற்றம் அதிகரித்துள்ளது.
2010ல் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2011ல் 47ஆக அது அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டின் ஜூலை வரை ஆகும்.
2012ல் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்புணர்வுகள் – குழந்தைகள் வன்புணர்வு, கூட்டு வன்புணர்வு, பெண்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி வன்புணர்வு என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறன. பெண்களின் அனுமதியோடு உறவில் ஈடுபடுபவர்கள் அவர்களை கல்யாணம் செய்து கொள்வதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் இப்படியான பொய்யான காரணங்களை கூறி தங்களுடைய தேவையை பூர்த்தி செய்கின்றனர்.
2010ல் இருந்து இந்த ஆண்டு ஜூலை வரை ஐந்து கூட்டு பாலியல் பலாத்காரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்றாவது வகையில் உள்ள காரணங்களால் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்குகள் முதன்மையாக உள்ளன. 2010ல் 36 வழக்குகளும், 2011ல் 49 வழக்குகளும், 2012ல் 59 வழக்குகளும், இந்த ஆண்டு 28 வழக்குகளும் மூன்றாவது வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
காவல்துறையின் நகர ரோந்துப் பணி துணை ஆணையர் ராகவேந்திர ஆருட்கர் அவர்கள் கூறியதாவது: “பெண்களுக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இதைத் தடுக்கத்தான் தீவிர ரோந்து சுற்றியும், சந்தேகப்படும் இடங்களை சோதனை செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”
பாலியல் பலாத்காரங்களைத் தடுத்து நிறுத்துவது, பெண்களின் பாதுகாப்புக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பலாத்காரங்களில் ஈடுபடுவோர் மீது முறையான விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுக் கொடுப்பது, பாலியல் குற்றவாளிகள் தப்பித்து விடாதவாறு நடவடிக்கை எடுப்பது போன்றவை இந்தக் குற்றம் குறைவதற்கு உதவிடும்.
அதே போன்று மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் முழுமையாக பாலியல் தொந்தரவுகளைத் தடுத்து நிறுத்த முடியும்
தற்போது மாநிலத்தின் நிலைமை:
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தகவல்கள்தான் மேலே நாம் பார்த்தவை.
கர்நாடகா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,150 வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்புணர்வில் ஈடுபடுவோர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைக்கிறது. குற்றவாளிகள் மீது அவர்கள் வெளிவராதவாவறு கடுமையான சட்டங்களில் வழக்கு பதிவு செய்தால்தான் மற்றவர்கள் இது போன்ற தவறுகளில் ஈடுபட அஞ்சுவார்கள்.
மேலும் இந்தக் குழு இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவோருக்கு முறையான இழப்பீடுகளையும், முழுமையான மருத்துவ உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. அத்தோடு காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஏனென்றால், இது போன்ற வழக்குகளில் இவர்களிடம் புரிந்துணர்வு இல்லாததால் வழக்குகளின் விசாரணைகள் தாமதமாவதாக இந்தக் குழு கூறியுள்ளது.
தமிழில் : நெல்லை சலீம்
நன்றி: http://www.thoothuonline.com
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.