ஆந்திராவில் ஆசிட் வீச்சில் காயமடைந்த என்ஜினீயரிங் மாணவி சாவு
ஐதராபாத், ஜன.1-
ஒரு தலைக்காதல் விவகாரத்தால் ஆசிட் வீசப்பட்ட ஆந்திர மாணவி ஸ்வப்னிகா பரிதாபமாக மரணமடைந்தார்.
மாணவிகள் ஆசிட் வீச்சு
ஆந்திர மாநிலம் வாரங்கல் பவானி நகரைச் சேர்ந்தவர் ஸ்வப்னிகா. இவரும், தோழி பிரணீதாவும் அங்குள்ள கிட்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பி.டெக் படித்து வந்தனர்.
கடந்த மாதம் 10-ந்தேதி இருவரும் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராமராம் என்னுமிடத்தில் இவர்களது ஸ்கூட்டரை வழிமறித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் ஸ்வப்னிகா, பிரணீதா இருவர் மீதும் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஸ்வப்னிகாவின் முகமும், உடலின் மற்ற பகுதிகளும் 50 சதவீத அளவிற்கு வெந்து போய் விட்டது. பிரணீதாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சுட்டுக்கொலை
இதனிடையே, ஆசிட் வீசியவர்களில் ஒருவரான சீனிவாசராவும் (25) அதே கல்லூரியில் ஸ்வப்னிகாவுடன் படித்து வந்தவர் என்றும், அவர் ஒருதலையாய் ஸ்வப்னிகாவை காதலித்ததும் தெரிய வந்தது.
தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் நண்பர்கள் சஞ்சய் (22), அரிகிருஷ்ணா (24) உதவியுடன் ஸ்வப்னிகா, பிரணீதா இருவர் மீதும் சீனிவாசராவ் கொலை வெறியுடன் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஆசிட் வீசிய மூவரையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். பின்னர், கடந்த 13-ந்தேதி போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றபோது மூவரையும் போலீசார் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
பரிதாப சாவு
இந்த நிலையில், ஸ்வப்னிகாவின் உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது உடல் நலம் முன்னேற்றம் அடையவில்லை. கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை முறையில்தான் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று ஸ்வப்னிகாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி காலை 5.30 மணிக்கு ஸ்வப்னிகா மரணமடைந்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் சொந்த ஊரான வாரங்கலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆசிட் வீச்சில் காயமடைந்த இன்னொரு மாணவியான பிரணீதாவின் உடல் நலம் வேகமாக முன்னேறி வருவதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்