சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம்
சென்னை, ஜன.8 : எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் புத்தகங்களே புத்துணர்ச்சியைத் தருகின்றன என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 32-வது புத்தகக் காட்சியை, அப்துல் கலாம் தொடக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது.
அந்த வாழ்த்துச் செய்தியில் கலாம் கூறியுள்ளது:
32-வது புத்தகக் காட்சியில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், வாசகர்கள் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
நல்ல புத்தகங்கள் கற்பனை சக்தியை வளர்க்கும். நல்ல கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை வளர்க்கும். நல்ல சிந்தனை சிறந்த அறிவை பெருக்கும். சிறந்த அறிவு நம்மை மேம்பட வைக்கும்.
புத்தகங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. திருக்குறள் உள்ளிட்ட 3 புத்தகங்கள்தான் என்னை வழிநடத்திச் செல்கின்றன.
ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு காலக்கட்டத்தில் என்னுடைய உற்ற நண்பனாக இருக்கின்றன. நான் சந்தோஷத்தில் திளைக்கும்போது, என்னைக் கட்டுப்படுத்தி, நல்ல காரியம் செய்ய புத்தகங்கள்தான் உதவின.
வாழ்க்கையில் இன்னல்கள் வரும்போது இப்புத்தகங்கள் என் சோர்வை போக்கி, புத்துணர்ச்சி அளித்தன. தோல்வியை கடந்து வெற்றியடையச் செய்ய எனக்கு கற்று கொடுத்து உதவின.
எல்லோரும் 30 வயதுக்குள் உள்ள இளைய சமுதாயத்தை எழுதத் தூண்ட வேண்டும். இளைய சமுதாயம் நல்ல எண்ணங்களை உருவாக்கி பல லட்சியக் கனவுகளை எழுத்துமூலம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும்.
புத்தகக் காட்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது செய்தி என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரத்தை நல்ல புத்தகங்கள் படிக்க ஒதுக்குவீர்களானால், சில ஆண்டுகளுக்குள் நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாக வளர்வீர்கள்.
புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நண்பனாக திகழும். இந்த ஒரு சிறிய முயற்சி நாட்டில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முதற்படியாகும் என அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
AdiraiPost
அப்துல் கலாம்
சோர்வு
புத்தகம்
புத்துணர்ச்சி
சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்