Breaking News
recent

சிகிச்சை தேவைப்படும் தென்காசி அரசு மருத்துவமனை!

சிகிச்சை தேவைப்படும் தென்காசி அரசு மருத்துவமனை!

தென்காசி, ஜன. 1: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தென்காசியில் புதிய பஸ்நிலையம் அருகே 33 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியால் இம் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது.

இம் மருத்துவமனைக்கு சிவகிரி, செங்கோட்டை, மேக்கரை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். 240 படுக்கைகள் கொண்ட இம் மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக தினந்தோறும் குறைந்தபட்சம் 1800 முதல் அதிகபட்சம் 2200 பேர் வரையிலான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு மாதத்திற்கு 140 முதல் 180 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், இம் மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை என்ற அந்தஸ்திலிருக்கும் இங்கு பொதுமருத்துவர் கிடையாது. அறுவைசிகிச்சை நிபுணர், பல் டாக்டர், மயக்கமருந்து, எலும்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் மருத்துவர், நுண்கதிர் பிரிவு மருத்துவர், பால்வினை நோய் மருத்துவர்களும் கிடையாது.

சுமார் 20 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் வார விடுப்பு, நீதிமன்றம், அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு சிறப்பு முகாம்கள் என சென்றதுபோக, தினசரி பணியில் 5 அல்லது 6 டாக்டர்களே உள்ளனர்.

இவர்களே சிசேரியன், பிரேத பரிசோதனை போன்றவற்றையும் மேற்கொள்கின்றனர்.

எனவே, இங்கு கூடுதலாக எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்களையும், துறைவாரியான மருத்துவர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும்.

சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால், விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இல்லை.

மேலும், போதிய செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்றவர்களை உடனடியாக நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.

தீக்காயம் அடைந்தவகளுக்கான தனி சிகிச்சை கட்டடம், தொற்றுநோய் சிகிச்சைக்கு தனி கட்டடம், மருந்து கிடங்கு, மற்றும் நிர்வாக கட்டடம் இல்லாமல் இம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியின் அப்போதைய உறுப்பினர் அண்ணாமலை, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2004-05ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்த ரூ.2 லட்சம் செலவில் வெளிநோயாளிகளுக்கான கட்டண கழிப்பறையும், குளியலறையும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது.

இதேபோல, தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். அப்பாத்துரை தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்த ரூ.10 லட்சம் செலவில் ரத்த வங்கி கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது. ஆனால், இந்த இரு கட்டடங்களும் எந்தவித பயன்பாடுமின்றி மூடியே கிடக்கின்றன.

அதிகாரிகள் பதில்: இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்டண கழிப்பறையை பராமரிக்க நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், அதை இலவச கழிப்பறையாக பயன்படுத்துவதற்கு அரசின் அனுமதி கோரி மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ரத்த வங்கி முழுமையாகச் செயல்பட வேண்டுமானால், அக் கட்டடத்தில் ஏ.சி. வசதி உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்குரிய தொகை செலுத்தப்பட்டுவிட்டது. அந்த வசதிகள் செய்யப்பட்டவுடன் ரத்த வங்கி செயல்பட துவங்கும் என்றனர்.

மேலும், இம் மருத்துவமனையில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு சாதாரண மக்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.