Breaking News
recent

கடலூர் - மின்வெட்டு: மாணவர்கள் அவதி

மின்வெட்டு: மாணவர்கள் அவதி


கடலூர், பிப். 10: கடலூரில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருப்பதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு முன் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்தது. தொழில் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். தற்போது மின்வெட்டு தளர்த்தப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து இருக்கிறது. வீடுகளுக்கு மின் வெட்டு இல்லை என்றும் அரசு தெரிவிக்கிறது.

ஆனால் கடலூரில் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப் படுகிறது. கடலூர் புதுப்பாளையம், திருப்பாப்புலியூர், முதுநகர் பகுதிகளில் பகல் 12 முதல் 2 மணி வரையிலும், செம்மண்டலம் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரையிலும், மஞ்சக்குப்பம் காலை 10 முதல் பகல் 12 மணி வரையிலும் மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இது தவிர காலை, மாலை வேளைகளில் திடீரென மின் சப்ளை துண்டிக்கப்படுவதும், 10 அல்லது 15 நிமிடங்களில் மீண்டும் வருவதுமாக உள்ளது.

பொதுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் 9-ம் தேதி தொடங்கி விட்டன. இயற்பியல் செயல்முறைத் தேர்வுக்கு பயன்படுத்தப்படும் பல கருவிகளுக்கு மின்சாரம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அத்தகைய வசதி இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் செயல்முறைத் தேர்வுகள், மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்படுவதாக, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் நூர்பாஷா, பொருளாளர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். மின்வெட்டு காரணமாக வர்த்தக நிறுவனங்களும் தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருவதாக, வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கிராமப் புறங்களில் வீடுகளுக்கு தினமும் 2 முதல் 4 மணி நேரம் வரையிலும் மின் சப்ளை துண்டிக்கப்படுவதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் காட்டுமன்னார்கோவில் கண்ணன் தெரிவித்தார். விவசாயத்துக்குத் தொடர்ந்து மின்வெட்டு அமலில் இருப்பதாகவும் அவர் தெர்வித்தார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.