Breaking News
recent

அரசியலில் ஒழுக்க புரட்சியை ஏற்படுத்துங்கள்




சென்னை , பிப்ரவரி -21

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மாணவர் சமுதாயம் அரசியலில் ஒழுக்க புரட்சியை உருவாக்க முன்வரவேண்டும், மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சமுதாய தலைவராக உயர்ந்து சிறந்தார்கள்|| என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக் கீம் சையது சத்தார் பேசினார்.

சென்னை மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் வெள்ளி (20.02.09) மாலை நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். ஜெய்னுல் ஆப்தீன் முன்னிலையில், புதுக்கல்லூரி, தியாகராய கல்லூரி, வைஷ்ணவா, பச்சையப்பன் மாநில கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இம்ரான் கிராஅத் ஓதினார், இக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ். ஏ. சையது சத்தார் பேசியதாவது:

வரலாற்று சிறப்பபுமிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் பேரவை ஆலோசனை கூட்டத்திற்கு பெருந்திரளாக வந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் முதலில் எனது பாராட்டுக்களை யும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது மற்ற அரசியல் கட்சிகளை போன்றதல்ல நூற்றாண்டு வரலாற்று சிறப்புடையது. இந்தியா சுதந்திர வேள்வியில் முழு அர்ப்பணிப்போடு பங்கேற்ற அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக். அதற்காகவே இந்த இயக்கம் 1906ல் துவங்கப்பட்டது. 102 ஆண்டு பெருமையுடையது இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம் என இந்திய தேசிய காங்கிரஸார் பெருமையோடு மார்தட்டுவது போன்றே முஸ்லிம் லீகினரும் மார்தட்டி பெருமைப்படும் அளவுக்கு தியாகங்களை செய்த இயக்கம் முஸ்லிம் லீக்.

இந்திய சுதந்திர போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்த முகம்மது இஸ்மாயில் என்ற மாணவர் தேசிய அரசியலில் ஈடுபட்டு சுதந்திரத்திற்காக உழைத்தவர். மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட அந்த முஹம்மது இஸ்மாயில் சாஹிபுதான் பின்னாளில் சமுதாய தலைவராக உயர்ந்து சமுதாயத்தை வழிநடத்திய காயிதே மில்லத் ஆக உயர்ந்தார்கள்.

1947-ல் சுதந்திரத்தின்போது நமது நாடு இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் பிரிந்த பின்னர் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு, அவர்களின் மத உரிமையை ஷரிஅத் சட்டத்தை பின்பற்றும் உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை உருவாக்கி வழிநடத்தினார்.

1948ம் ஆண்டு மார்ச் 10ம்தேதி இதே சென்னை யில் உள்ள ராஜாஜி ஹாலில் தான் முஸ்லிம் லீக் உருவானது. 60 ஆண்டுகால வரலாற்று பின்னணியுடைய முஸ்லிம் லீகினர் ஒழுக்கமும், நற்பண்பு நிறைந்தவர்களே.

இளமை பருவத்தில் நாம் எத்தகைய சிந்தனைகளை கொண்டிருக்கிறோமோ அதன் அடிப்படையில் நமது சமூகத்தின் இளைஞர்கள் மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இங்கு பேசிய மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்வது குறித்து பேசினார்கள். இது பாராட்டுக்குரியது. முஸ்லிம்களின் நோக்கம் ஒழுக்கமிக்க அரசியலை சமுதாயத்தை உருவாக்குவதுதான். ஏறக்குறைய 40 ஆண்டு காலமாக மாணவர் பருவத்திலிருந்தே நான் முஸ்லிம் லீகில்தான் உள்ளேன். எனது உடம்பில் ஓடுவது எல்லாம் முஸ்லிம் லீகில் வந்ததுதான். அதனால்தான் இங்கு பேசிய எனது மகன் மிகவும் உணர்வுபூர்வமாக யதார்த்தங்களை பேசினார்.

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களுக்கு பக்க துணையாக நின்று இஸ்லாமிய வளர்ச்சிக்கு உறுதுணைகளாக இருந்தவர்கள் இளைஞர்கள்தான் என்பதை வரலாறு நமக்கு வெளிகாட்டுகிறது. நல்ல ஓழுக்கமுடைய சிறந்த அரசியல் முன்மாதிரிகளை உருவாக்கும் வகையில் மாணவர் சமுதாயம் பாடுபடவேண்டும்.

இவ்வாறு பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் பேசினார்.
லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.