மலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை
திருச்சி, பிப். 12: மலேசிய சுற்றுப் பயணத்துக்கு தென்னிந்தியாவில் திருச்சியை மிக முக்கியமான மையமாக்குவதற்குக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரிய இயக்குநர் நூர் ஆரிப் முகமது நூர்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
"கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 5 லட்சம் பேர் மலேசியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இது கடந்த 2007 ஆம் ஆண்டைவிட 30.4 சதம் அதிகம்.
உலகம் முழுவதிலுமிருந்து 2.2 கோடி மலேசியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். உலக அளவில் மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பட்டியல் வரிசையில் ஆறாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.
சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 6 லட்சம் பேர் மலேசியாவுக்கு வருவர் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 41,000 இந்தியர்கள் மலேசியாவுக்கு வந்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் உலக அளவில் 2 கோடி பேர் வருவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இலக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்குக் காரணம். என்றாலும், இந்தியாவில் பொருளாதார பாதிப்பு இல்லாததால், இந்தியர்களின் வருகை அதிகமாக இருக்கும் என நம்புகிறோம்.
கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு திருச்சி ஒரு மையமாக இருக்கிறது. எனவே, திருச்சியை மலேசிய சுற்றுலாத் துறை முக்கியமானதாகக் கருதுகிறது.
மேலும், தென்னிந்தியாவில் திருச்சி மிக முக்கியமான சந்தை வாய்ப்பாக இருப்பதால், மேலும், மலேசிய சுற்றுலாத் துறை உள்ளூரில் உள்ள தனியார் சுற்றுலா முகவர்கள் உள்ளிட்டோருடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம், மலேசிய சுற்றுலாத் தலங்கள் பற்றி விவரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் மலேசியாவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டில் 1.1 பில்லியன் ரிங்கெட் (மலேசிய ரூபாய் மதிப்பு) வருவாய் கிடைத்தது. உலக அளவிலிருந்து வந்த பயணிகள் மூலம் ரூ. 46.1 பில்லியன் ரிங்கெட் வருவாய் ஈட்டப்பட்டது' என்றார் நூர் ஆரிப் முகமது நூர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்