Breaking News
recent

வெளிநாடுவாழ் இந்தியரை மணக்க விரும்பும் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

வெளிநாடுவாழ் இந்தியரை மணக்க விரும்பும் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


நாகர்கோவில், மார்ச் 7: வெளிநாடு வாழ் இந்தியரை மணக்க விரும்பும் கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்த மங்கையர் மங்களம் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் விக்டோரியா கவுரி நாகர்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மங்கையர் மங்களம் அமைப்பு 2004-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சேவைப் பணிகளை செய்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டத்தின் பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 33. இதில் 26 வழக்குகளில் மங்கையர் மங்களம் சேவை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அவற்றில் 8 பிரிந்த குடும்பங்கள் நீதிமன்றத்தில் குடியுரிமை உத்தரவு பெறப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. 6 வழக்குகளில் கோரப்பட்ட பரிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2008-ல் மங்கையர் மங்களம் சார்பில் செண்பகராமன்புதூரில் குடும்ப வன்முறை குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் 5-ல் 3 பெண்கள் தினமும் உடல் ரீதியான, மன ரீதியான, பொருளாதார ரீதியான குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதில் 3-ல் 2 பெண்கள் குடிகார குடும்பத் தலைவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள்.

எனவே தேசிய குழந்தைகள் தினமான கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் அமைதி திரும்ப மார்ச் 9-ம் தேதி இந்துக் கல்லூரி கலையரங்கில் மாலை 4 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

வெளிநாட்டு மோகத்தால், வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞர்களை மணந்துகொள்ள இன்றைய யுவதிகளிடம் மோகம் அதிகரித்துள்ளது. தமது மகள்களை வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களுக்கு முழுமையாக விசாரிக்காமல் பெற்றோரும் மணம் முடித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் கணவர்களால் பல பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வாழும் கணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பெண்கள் குறைந்த பட்சம் 25 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று இந்திய வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் சென்னை மற்றும் கன்னியாகுமரி. வெளிநாட்டில் வேலை என்றாலே கை நிறைய ஊதியம் என்பது தவறான அபிப்பிராயம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பிரச்சினை அதிகரித்து வருவதால் வரும் மாதங்களில் வெளிநாடு வாழ் இந்தியரை மணக்க விரும்பும் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்டத்தின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தவுள்ளோம். தீர விசாரிப்பதே மெய் என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் விக்டோரியா கவுரி.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.