என் நன்மைக்காக எதையும் செய்யவில்லை : ராஜினாமா செய்த ஷோபா சொல்கிறார்.
பெங்களூரு : "என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியது ஒரு தலைப்பட்சமானது; நான் அமைச்சராக இருந்தபோது எதையும் என் நன்மைக்காக செய்யவில்லை' என, கர்நாடக மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முன்னாள் அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்கள் இடையே சில நாட்களாக பிரச்னை நீடித்தது. பின்னர் இதில் சமரசம் ஏற்பட்டது. எனினும், தன் எதிர்ப்பாளர்களை திருப்திபடுத்த, கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஷோபாவை, அமைச்சரவையில் இருந்த நீக்கினார். ஷோபா எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட யஷ்வந்த்பூரில், கட்சி வட்டாரத்தை தாண்டி, பா.ஜ., தொண்டர்கள், பொது மக்கள் என பலரும் ஷோபாவின் பணிகளை புகழ்கின்றனர். அவர் கல்லாரி நாட்களிலேயே, பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றுள்ளார். பா.ஜ.,வில் சேர்வதற்கு முன், அவர் ஆர்.எஸ்.எஸ்.,ல் இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு நெருக்கடியான சூழ்நிலையில், சங்க் பரிவார் மற்றும் பா.ஜ., கட்சி எதுவும் முன்னாள் அமைச்சர் ஷோபாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
தன்னை கேபினட் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து, ஷோபா பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி:
* பதவி விலக சொன்னதற்கு என்ன காரணம் என கட்சியினரிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு, கட்சி தலைமை என்ன பதிலளித்தது?
அந்த கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
* கட்சியின் இந்த முடிவை உங்களிடம் தெரிவித்தது யார்?
பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் சதானந்த கவுடா, கடந்த திங்களன்று காலை என்னை அழைத்து, கட்சியின் முடிவை தெரிவித்தார். எனினும், மனரீதியாக இதற்கு தயாராக இருந்ததால், இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
* கட்சியின் மத்திய தலைவர்கள் உங்கள் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
ஆமாம். என் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். முடிவுகள் எப்போதும் ஒருதலைப்பட்சமானதாக இருக்க கூடாது. கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கூட, சட்டம் அவர்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கிறது.
* நீங்கள் மற்ற துறைகளின் நடவடிக்கையில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகின்றனரே?
அது போன்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அமைச்சர் ஒருவர், அவரது துறையில் செய்யப்பட்ட பணி மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு நான் காரணம் என்பதற்கான ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். நான், எதையும் என் நன்மைக்காக செய்யவில்லை.
* கடந்த 18 மாதங்களாக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். அமைச்சரவையில் திறமை வாய்ந்தவராக யாரை கருதுகிறீர்கள்?
முதல்வர் எடியூரப்பா கேபினட் அமைச்சரவையை நடத்தி செல்லும் திறமை மற்றும் தகுதி வாய்ந்தவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்ந்த அமைச்சரவை கூட்டங்களில், பெரியளவில் எவ்வித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. அமைச்சரவையில் அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்பட்டு, ஒரு மனதாக அனுமதி வழங்கப்படும்.
* அரசியலுடன் வர்த்தகர்களின் கூட்டணியாலேயே, பா.ஜ., கட்சியில் தற்போதைய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கருதுகிறீர்களா?
வர்த்தகம் என்பது தொழில், ஆனால், அரசியல் என்பது சேவை. மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை. ஜனநாயக சுரண்டல் தடுக்கப்பட வேண்டும். அதிக சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே இது நடைபெறும். எனினும், எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்கும் திறன், பா.ஜ., கட்சிக்கு உள்ளது. இவ்வாறு ஷோபா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்