Breaking News
recent

அதிராம்பட்டினத்தில் ஒத்திகையா? ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை ஒடுக்கவேண்டும்


இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவாரங்கள், பாரதீய ஜனதா கட்சி இவற்றின் அன்றாட திருப்பணியே ஆங்காங்கே மதக் கலவரங்களை உருவாக்கி, அதன்மூலம் இந்து வெறியை ஊட்டிக் குளிர்காய்வதுதான்.


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் அடிக்கடி இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதைத் தங்களின் வழமையான பணியாகவே கொண்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் உள்ள ஏ.ஜே. பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது. கோட்டாட்சியரிடம் முறைப்படி புகார் கொடுக்கப்பட்டது. கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி அந்தச் சுவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமானதுதான் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

பொறுக்குமா விஷமிகளுக்கு?

மீண்டும் அந்தப் பள்ளிவாசல் சுவரினை மதவாதக் கும்பல் இடித்தது. இதனை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முசுலிம் அமைப்புகள் அறிவித்தன.

ஆர்ப்பாட்டத்தில் 4000 முசுலிம்கள் பங்கேற்றனர். இந்து முன்னணியின் கலவரங்களுக்குத் துணை போக விரும்பாத இந்துக்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன.

முஸ்லிம்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடாது என்று திட்டமிட்ட சங் பரிவார்க் கும்பல் போட்டி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

இரண்டு மீனவத் தெருக்களுக்கு இடையே நிலவி வந்த வாய்க்கால் தாவாவைப் பயன்படுத்தி கலவரத்திற்குக் கத்தியைத் தீட்டினர்.

வேண்டுமென்றே ஒரு கலவரத்தை உருவாக்குவதற்காகத் தீட்டப்பட்ட இந்தச் சதித் திட்டத்திற்கு, எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாது என்று காவல்துறையிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட தகவல் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. வகையறாக்களின் உள்நோக்கத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இந்துக்களும் ஆதரவு தராத நிலையில், பா.ஜ.க.வினரின் முயற்சி படுதோல்வியை அடைந்தது. தொடக்கத்தில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கு ஓரளவு ஆதரவு காட்டி வந்தவர்களும், இந்துக்களும் நாளடைவில் அவர்கள் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, ஆதரவினை விலக்கிக் கொண்டனர். இதன்மூலம் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கூட ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கலவரம் விளைவித்ததுண்டு. முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையையும்கூட அவமதித்தனர்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைமைகளே பின்பலமாக இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரச்சினைகளை உருவாக்கத் தீனிபோட்டும் வருகின்றன.

உளவுத் துறையும் இதன் விஷ ஊற்றைக் கண்டுபிடித்து, தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வட்டாரங்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கும் நிலையில், அதனைக் குறி வைத்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும்.

குறிப்பிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வியாபாரம் உள்ளிட்டவைகளில் செல்வாக்குப் பெற்றிருப்பது இயல்பானதே! அதனை ஏதோ இந்துக்களுக்கு எதிரான ஒன்று என்று திசை திருப்பி அப்பாவிகளைத் தூண்டிவிடும் விஷமத்தனத்திற்கு முஸ்லிம்கள் அல்லாதார் இரையாகக் கூடாது.

காவல்துறையும் கவனமாக இருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை சட்ட ரீதியாக ஒடுக்கவேண்டும் என்பதே நல்லிணக்கத்தை விரும்பும் பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாகும்.--------------------”விடுதலை” தலையங்கம் 30-3-2010
TAMILOVIA.

http://viduthalai.periyar.org.in/20100330/news05.html
VANJOOR

VANJOOR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.