அதிரைப்பட்டினம் ஏகத்துவக் கண்மணிகளே!
'தாருத் தவ்ஹீத்' அதிரைப்பட்டினத்தில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் இஸ்லாமிய நடுநிலையான பிரச்சார சபையாகும். அது, மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளது.
அதிரைப்பட்டினம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் (துலுக்கன்வயல்), இன்னும் கடலோர முஸ்லிம் கிராம மக்களும் பயனடையும் விதமாகப் பிரச்சாரத்தை நடத்திவந்தது.
கேபிள் டி.வி வழி நேரலை நிகழ்ச்சி மூலம் இஸ்லாமியக் கேள்வி பதில், மார்க்க அறிஞர்களை வைத்து நேரலை பயான், மற்றும் மார்க்கச் சொற்பொழிவு ஒலிபரப்பு, கேள்வி-பதில் நிகழ்ச்சி, அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிகழ்ந்துள்ளன.
இஸ்லாமிய நூல்கள் மட்டுமின்றி, பொது அறிவு நூல்களும் தின, வார, மாத இஸ்லாமிய மற்றும் பொது ஏடுகளும் படிக்க வசதியான நூலகம் சிறப்பாக நடந்துவந்துள்ளது.
களப் பிரச்சாரமாக, பொதுமக்கள் கூடுமிடங்களில் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைப்பது, இஸ்லாத்தில் இல்லாத நூதனங்களைக் கண்டித்து உணர்த்துவது ஆகியவை தாருத் தவ்ஹீதின் 'தஅவா' முயற்சிகளில் சிலவாகும்.
இலவச இரத்த தான முகாம் நடத்துவதற்கும், வரதட்சனை மாநாட்டை நடத்துவதற்கும், ஊடகங்களில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வரும் கருத்துகளுக்கு பதில் கொடுப்பதற்கும் 'உந்து சக்தியாக' இருந்துவந்துள்ளது.
தெருவிளக்கு எறியாமை, குடிநீர் வரத்தின்மை, சாக்கடை அடைப்பு போன்ற மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துள்ளது.
பேசுவது எப்படி? எழுதுவது எப்படி? என்றுகூடச் சில நேரங்களில் வல்லவர்கள் இங்கு வைத்துச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
இன்னும் எத்தனையோ ஆக்கப் பூர்வமான பிரச்சாரம், பொதுச் சேவைகள், சமுதாயச் சக்தியை உயர்த்தும் நடவடிக்கைகள் – இப்படிப் பல்வேறு சாதனைகளின் கூடாரமாக அதிரை தாருத் தவ்ஹீத் விளங்கியது அன்று.
சில காலம் செயல்பாடுகள் குறைவாயிருந்த நிலையை மாற்றி, தற்போது இதனை முழுமையாகச் செயல்படச் செய்வதற்காகத் தற்போதைய அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகம் முதல் கட்ட நடவடிக்கையாக இரண்டாம் தளத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை, தக்வாப்பள்ளியின் பின்புறமுள்ள தரைத்தளத்தில் (முன்பு எஸ்.டி.டீ.பூத் இருந்த இடத்தில்) மாற்றியிருக்கிறார்கள். இன்னும் மாற்றங்களும் பழைய வேகத்தைவிடக் கூடுதல் செயல்பாட்டை ஏற்படுத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தாருத் தவ்ஹீதின் சீரிய செயல் திட்டங்களில் பங்களிப்புச் செய்ய விழைவோர் அன்புடன் தொடர்பு கொள்ளக் கோரப்படுகிறார்கள்.
அதிரை அஹ்மத்
adiraiahmad@gmail.com
00 91 9894989230