கொச்சியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மருமகனும், அல்ஹாஜ் எம்.எல்.செய்யித் இப்றாஹீம் எஸ்.கே. அவர்களின் சகோதரரும், ஜனாப் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம், ஹாஃபிழ் எஸ்.ஹெச்.முஹம்மத் ஸாலிஹ் என்ற எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோரின் தந்தையும், ஜனாப் எம்.எல்.அப்துர்ரஷீத், ஜனாப் எம்.ஏ.கே.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்று-வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாழ்க்கை குறிப்பு!
வணிகப் பெருங்குடியினராகிய சொளுக்கார் குடும்பத்தில் பிறந்த எஸ்.கே. அவர்கள் வளர்ந்தது இலங்கையில் கண்டி மாநகரில். அவருடைய தந்தை மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களை அதிபராகக் கொண்டு எஸ்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் அங்குதான் வணிகம் புரிந்தது. தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த எஸ்.கே. அவர்கள், கல்வி பயின்றது கண்டி மாநகரில் உச்சியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ட்ரினிட்டீ காலேஜ்.
ஏராளமான ஆங்கில, ஐரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டிருந்த அக்கல்லூரியில் மாணவர்களுள் கணிசமானவர் வெளிநாட்டினரே. ஆனால் அங்கே பயின்ற எஸ்.கே. அவர்கள், பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. உலகத்தின்பால் தனது கண்களைத் திறந்துவிட்டது திரித்துவக் கல்லூரிதான்... ஆனால் எதைப் பார்க்க வேண்டும்; எதை எப்படிப் பார்க்க வேண்டும்; எதைப் பார்க்கக் கூடாது என்பனவற்றைக் கற்றுத் தந்து என்னைப் பக்குவப்படுத்தியது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி என்று எஸ்.கே. அவர்கள் பின்னர் நினைவு கூறியதுண்டு .
அவர் கண்டியில் படித்தபோது அவருடைய சக கால மாணவர்களாக, வகுப்பறைத் தோழர்களாக இருந்தவர்கள் இலங்கை இராணுவத் தளபதி டென்ஸில் லக்ஷ்மன் கொப்பேகடுவ, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட காமினி திஸாநாயக்க ஆகியோர். அவரது மற்றொரு தோழர் அதே கல்லூரியில் அவருக்கு சீனியராக இருந்த சட்ட வல்லுனர் அல்ஹாஜ் ஃபாயிஸ் முஸ்தஃபா அவர்களாவார்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் வழிகாட்டுதலில், அதன் அமீர்களாக இருந்த மவ்லானா ஜெய்லானி ஸாஹிப், மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப், மவ்லானா தாஸீம் நத்வீ, மவ்லானா அஹ்மத் லெப்பை, மவ்லானா செய்யித் முஹம்மத் ஸாஹிப், அதில் முன்னோடிகளாக இருந்த மவ்லானா மவ்லவீ ரூஹுல் ஹக் ஸாஹிப், மவ்லானா அபூபக்கர் ஸாஹிப், மவ்லானா மவ்லவீ இப்றாஹீம் ஸாஹிப், மவ்லானா பி.டி.எம்.முஹ்யித்தீன் ஸாஹிப் ஆகியோருடன் நெருங்கி பழகினார். அந்தக் காலங்களில் ஆண் - பெண் இரு பாலருமடங்கிய இளைய தலைமுறையினருக்கிடையில் இஸ்லாமிய விளக்க வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார். அதில் உருவான பலர் இன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியோடு அவரது பயணம் தொடர்ந்தது. சென்னை மாநகரில் இருந்த காலங்களில், மவ்லானா மர்ஹூம் ஜெமீல் அஹ்மத் ஸாஹிப், மும்பை மாநகரில் இருந்தபோது மவ்லானா அல்லாமா மர்ஹூம் ஷம்சுத்தீன் பிலால் பீர்ஜாதா, டெல்லி மாநகரில் இருந்தபோது இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் 15க்கும் மேற்பட்ட பிரசுரமான நூல்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் கண்காணிப்பாளராக இருந்த மவ்லானா மர்ஹூம் முஹம்மத் யூஸுஃப் சித்தீக்கி, ஜமாஅத்தின் ஆங்கில சஞ்சிகையான Radiance இதழின் ஆசிரியர் அமீனுல் ஹஸன் ரிஸ்வீ மர்ஹூம் மற்றும் பேராசிரியர் அன்வர் அலீ கான் ஸோஸ் போன்றோரின் வழிகாட்டுதலில் தனது பயணம் தொடர்ந்ததாக பின்னர் நினைவுகூர்ந்தார் எஸ்.கே. அவர்கள்.
இந்தியாவில் 1975 அளவில் இந்திய முஸ்லிம் மாணவர் பேரவை (MUSLIM STUDENTS ASSOCIATION) அமைத்து, இந்தியா முழுவதும் அதற்காக சுற்றுப்பயணம் செய்தார். பிறகு இந்தியா முழுவதிலுமுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி செல்வாக்குக்குட்பட்ட அனைத்து இஸ்லாமிய மாணவ இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை (STUDENTS ISLAMIC MOVEMENT OF INDIA) அலிகர் பல்கலைக் கழகத்தில் 1976இல் அமைத்திட்ட ஐந்து நிறுவனத் தலைவர்களுள் எஸ்.கே.யும் ஒருவர். மற்ற நான்கு பேர் டாக்டர் அஹ்மதுல்லாஹ் சித்தீக்கீ, டாக்டர் முகீமுத்தீன், டாக்டர் ஸக்கீ கிர்மானீ, அமானுல்லாஹ் கான் ஆகியோர்.
1977இல் மீண்டும் இலங்கைக்கு வந்த எஸ்.கே. அவர்கள் அப்போது அமைந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன அரசில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த மர்ஹூம் முஹம்மத் அப்துல் பாகிர் மாகார் அவர்களுக்கு ஆலோசகராக இருந்து, அப்போது பாகிர் மாகாரின் செயலாளராக இருந்த நண்பர் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வருடன் பணியாற்றியதோடு, அஸ்வர் அவர்களோடு இணைந்து பாகிர் மாகார் அவர்கள் நிறுவிய உதயம் என்ற சமுதாய தமிழ் வார இதழில் பணியாற்றினார்.
1979இல் ஈரானியப் புரட்சி நடந்து, ஈரான் மன்னர் ஷா வெளியேற்றப்பட்டார். உலக நாடுகளிலிருந்த ஈரானிய தூதர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தண்டனைக்கு அஞ்சி லண்டனில் தஞ்சம் புகுந்தனர். அப்படி அனாதையாக்கப்பட்ட தூதரகங்களில் ஒன்று இலங்கையிலிருந்த ஈரான் தூதரகம்.
அந்நேரத்தில் அமைந்த ஈரானிய இஸ்லாமிய அரசு தனது இலங்கை தூதரகத்திலிருந்த இரண்டாம் நிலை அதிகாரியான அஸ்கர் தஸ்மாய்ச்சிக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தது: அடுத்து ஒரு முழுமையான தூதர் நியமிக்கப்படுகிற வரை அந்தப் பொறுப்பை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிடம் ஒப்படைத்து, அப்போதைய அமீர் மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப் அவர்களின் ஆணையின்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப், ஈரானிய தூதரகப் பணிக்கு எஸ்.கே. அவர்களை விட்டுத் தருமாறு அப்போதைய சபாநாயகர் அல்ஹாஜ் பாகிர் மாகாரிடம் கேட்டார். அனுமதி வழங்கிய அல்ஹாஜ் பாகிர் மாகார் அவர்கள், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் ஈரானின் தூதரகத்துக்காக ஒதுக்குமாறு எஸ்.கே.யைப் பணித்தார். எஸ்.கே. அவர்களும் கிட்டத்தட்ட ஒரு தூதர் போன்றே ஈரானிய தூதரகத்தில் பணியாற்றினார். அப்போது நிறைய அரசு அதிகாரிகள், அந்நிய நாட்டு தூதுவர்கள் ஆகியோரையும், மிக அதிகமாக ஊடகத்தாரையும் சமாளிக்கின்ற பொறுப்பை மிகவும் திறமையுடன் செய்து, அல்ஹாஜ் பாகிர் மாகார், மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஆகிய இருவரின் பாராட்டுக்களையும் பெற்றார். அப்போது இலங்கை முழுவதும் பயணித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் எஸ்.கே. இருந்தார். பிறகு ஈரானிலிருந்து இலங்கை வந்த அதிகாரிகளும் கூட சிறிது காலம் எஸ்.கே. அவர்களின் வழிகாட்டுதலிலேயே பணியாற்றினர்.
1981இல் இந்தியா திரும்பி, டில்லி மாநகரின் அனைத்திந்திய இஸ்லாமிய மாணவரியக்கத்தின் நிறுவனமாகிய ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன் பதிப்பகத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தார். இந்திய தேசிய மொழிகள் பதினைந்திலும் நூற்களை வெளியிட்ட பெரிய நிறுவனமது.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் 1985இல் சஊதி அரேபிய அரசின் சார்பில், மஜம்மஅல் மலிக் ஃபஹத் லி தபாஅ அல் முஸ்ஹஃபிஷ் ஷரீஃப் - அதாவது, புனித வேதமாம் அல்குர்ஆனை அரபு மொழியில் பல அளவு வடிவங்களிலும் பதிப்பித்து மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவும், புனித வேதத்தை அனைத்து மொழியிலும் பதிப்பிப்பதற்காகவும் மன்னர் ஃபஹதால் நிறுவப்பட்டு, ஷெய்க் அப்துர்ரஹ்மான் அல்அகீல் என்பவரால் இயக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அச்சகமாகும். அது மதீனா மாநகரின் மையப்பகுதியில் இருந்த அந்த பெரும் அச்சு வளாகத்தில் ஆங்கிலப் பிரிவில் பணியாற்றிட ஷெய்க் அவர்களாலேயே அழைக்கப்பட்டு, சஊதி அரசின் விருந்தினராக ஹஜ்ஜையும் முடித்து, பேராசிரியர் ஸலீம் கியானீ, அறிஞர் ஹபீபுர்ரஹ்மான், அறிஞர் ழியாவுத்தீன் அர்பல் ஆகியோருடன் அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களுடைய ஆங்கில தஃப்ஸீரில் திருத்தங்கள் செய்து, காலத்திற்கேற்ப நவீன விளக்கங்களைத் தருகின்ற பொறுப்பில் சிறப்பாக பணியாற்றினார் எஸ்.கே.
அந்த திருத்தப்பட்ட அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களின் அந்த ஆங்கில தஃப்ஸீர்தான் இன்று உலகெங்கும் புழக்கத்திலுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும். அன்ஸாரிகளின் வம்சவழி வந்த ஷெய்க் அப்துர்ரஹ்மான் பின் அகீல் அவர்களோடு இணைந்து புனித வேதமாகிய திருக்குர்ஆனில் பணியாற்றிய அந்த அரும்பெரும் வாய்ப்புதான் தனது அனுபவங்களில் உச்சகட்டம் என்று பின்னர் எஸ்.கே. நினைவுகூர்ந்தார்.
1992இல் அவருடைய நண்பர் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வர் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவால் அழைக்கப்பட்டு, வக்ஃப் மற்றும் இஸ்லாமிய சமய கலாச்சார அமைச்சராக பணியமர்த்தப்பட்டபோது, அவருக்கும் ஆலோசகராக இருந்து இலங்கையில் சமுதாயப் பணியைச் செய்வதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் எஸ்.கே. அக்காலத்தில், இலங்கை அரசின் சிறப்பு விருந்தினராக மீண்டும் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார் அவர்.
அதன் பிறகு நாடு திரும்பி, டில்லி மாநகரில் சிறிது காலம் இருந்துவிட்டு, சொந்த ஊராகிய காயல்பட்டினம் திரும்பினார். அங்கு மார்க்கப் பணியில் ஈடுபட்டு, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் என்ற அமைப்பு உருவாகவும், ஆயிஷா சித்தீக்கா என்ற மகளிர் கல்லூரி அமையப்பெறவும் அவருடைய ஒத்துழைப்பை நல்கினார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டாக்டர் ஜாகிர் நாயக் சென்னை வந்தபோது, அவருக்கு எஸ்.கே. அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி அவரின் ஆங்கில உரையாடல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்றுக்கொண்டார். பல குறுந்தகடுகள் தற்போது வெளிவந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்