Breaking News
recent

சுனாமியின்போது மாயமான குழந்தைகளை 4 ஆண்டுகளாக தேடும் பெற்றோர்கள்

சுனாமியின்போது மாயமான குழந்தைகளை 4 ஆண்டுகளாக தேடும் பெற்றோர்கள்
உருக்கமான தகவல்கள்

சுனாமி பேரலையில் காணாமல் போன குழந்தைகளை 4 ஆண்டுகளாக தேடும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு முறையாவது கண்ணில் காட்டுங்கள் என்று உருக்கமாக கூறினார்கள்.

சுனாமி பேரலை

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை அந்தமான் நீக்கோபார் தீவு, தமிழ்நாடு என்று தென் கிழக்கு ஆசிய நாடுகளை கடுமையாக தாக்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், சென்னையில் மட்டும் 300-க்கு மேற்பட்டவர்களும் பலியானார்கள்.

மாணவர்கள் கதி என்ன?

இந்த சம்பவத்தில் சிக்கி உயிர் பிழைத்த 2 மாணவர்களின் கதி என்ன என்பது இன்னும் மர்மமாக உள்ளது. இவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது இறந்துவிட்டார்களா என்பதை இன்னும் உறுதி செய்யமுடியவில்லை.

இருந்தாலும் காணாமல் போன தங்கள் குழந்தைகள் எங்கே? எங்கே என்று கடந்த 4 ஆண்டுகளாக தேடும் பெற்றோர்களின் நிலையை பார்க்கும் போது நமது கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

சுனாமி பேரலையில் அந்தமானில் இருக்கும் நிக்கோபார் தீவில் காணாமல் போன ஒரு மாணவனின் பெயர் அரவிந்த் சீனிவாசன் (வயது 13) மற்றொரு மாணவியின் பெயர் அபூர்வா குமாரி (9).

இவர்களின் தந்தை நிக்கோபார் தீவில் விமான படையில் ஊழியர்களாக பணி புரிந்து வந்தனர். சுனாமி பேரலை தாக்கியபோது உயிர் பிழைக்க நிக்கோபார் தீவில் இருந்து அனைவரும் மேடான பகுதியை நோக்கி ஓடினார்கள். அப்போது வெங்கட்ராமன் தனது மகன் அரவிந்த் சீனிவாசனை நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் படி அனுப்பிவைத்தார். மோட்டார் சைக்கிளில் சென்றபோது சுனாமி அலையில் சிக்கிக்கொண்டனர்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற சந்தோஷ் என்பவர் பலியாகி விட்டார். இந்த பகுதியில் நீச்சல் தெரிந்த சிலர் அரவிந்த் சீனிவாசனை காப்பாற்றி இருக்கிறார்கள். இதேபோல ரவிசங்கரின் மனைவி மம்தா மற்றும் மகள் அபூர்வா குமாரி மகன் ஆரிய சங்கர் (வயது11/2) ஆகியோர் ஒரு லாரியில் மேடான பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆதாரம் உள்ளது

அப்போது சுனாமியில் சிக்கியதில் 11/2 வயது குழந்தை ஆரிய சங்கர் பலியானான். உயிர் பிழைத்த மம்தாவும் அவரது மகள் அபூர்வ குமாரியும் தனித்தனியாக வேறு, வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றுவிட்டனர். சுனாமி அலையில் இருந்து மீட்கப்பட்ட ஏராளமாக பேருடன் அபூர்வா குமாரி, அரவிந்த் சீனிவாசன் ஆகியோரை நிக்கோபார் தீவில் இருந்து சிறிய கப்பலில் போர்ட்பிளேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அங்குள்ள நிர்மலா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி நிவாரண முகாமில் தங்கி உள்ளனர். இந்த சுனாமி முகாமில் 12 நாட்கள் தங்கிஇருந்தபோது 2 மர்ம ஆசாமிகள் வந்து குழந்தைகளின் மாமா என்று கூறி அழைத்து சென்றுள்ளனர்.

இது பற்றிய விவரங்களை சுனாமி முகாமிற்கு சென்று பெற்றோர்கள் விசாரித்த போது தெரிய வந்துள்ளது. சுனாமி நிவாரண முகாமில் தங்கி இருந்ததற்கான பெயர் விவரமும் அங்கு பதிவாகி உள்ளது. இதற்கு ஆதாரமான சான்றிதழை அபூர்வா குமாரி, அரவிந்த் சீனிவாசன் ஆகியோரின் பெற்றோர்களிடம் சுனாமி முகாம் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

கண்களில் காட்டுங்கள்

இது குறித்து ரவிசங்கர், வெங்கட்ராமன் ஆகியோர் கூறியதாவது:-

எங்களின் குழந்தைகள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களை பார்த்ததாக பலர் எங்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே சுனாமி முகாமில் இருந்து மர்ம நபர்கள் கடத்தி சென்று இருக்கலாம் என்று கருதுகிறோம்.

எங்கள் குழந்தைகளை ஒரிசா, கொல்கத்தா, போர்ட்பிளேர் ஆகிய பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக தேடிவருகிறோம். குழந்தைகள் பிரிவால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மீண்டும் எங்களிடம் தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு முறையாவது கண்களில் காட்டினாலே போதும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.