Breaking News
recent

ஆம்பூர் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.83 லட்சம் ஒதுக்கீடு

ஆம்பூர் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.83 லட்சம் ஒதுக்கீடு
நகரசபை தலைவர் தகவல்


ஆம்பூர்,ஜன.1-

ஆம்பூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று நகரசபை தலைவர் நஜீர்அகமது கூறினார்.

நகரசபை கூட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் நஜீர்அகமது தலைமை தாங்கினார். துணை தலைவர் தமிழரசி, பொறியாளர் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

என்.எஸ்.ரமேஷ்:- மாதந்தோறும் நகராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

டெபாசிட் கட்டணம் குறைக்க வேண்டும்

நூர்ஜகான்:- தெருக்களில் உள்ள குடிநீர்பைப்புகளை துண்டித்து விட்டனர். இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு கஷ்டப்படுகின்றனர். பொதுமக்கள் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவற்குரிய டெபாசிட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை குறைத்தால் எல்லாத்தரப்பு மக்களும் குடிநீர் இணைப்பு பெறுவார்கள்.

(இந்த கோரிக்கைக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.)

தலைவர்:- குடிநீர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் கட்டணத்தை குறைப்பதற்கு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பணிகள்

பி.ஆர்.சி.சீனிவாசன்:- மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்.

சுரேஷ்பாபு:- காமராஜர் நகர் பகுதிக்கு மின்விளக்கு, சாலை வசதி அமைத்து தரவேண்டும்.

கலிமுல்லா:- ஒருவருடத்திற்கு முன்பு எனது வார்டுக்கு ஒதுக்கிய பணி இதுவரை நடைபெறவில்லை.

ரபீக்அகமது:- நகராட்சியில் என்ஜினிரியரிங் பிரிவு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் திட்டங்கள் நிறைவேற்ற முடியும். டெண்டர் போட்டு பலமாதங்கள் ஆகியும் வேலை நடைபெற வில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆவேசமாக பேசினார். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சக்கரபாணி:- பணியை எடுக்கும் காண்டக்டர்கள் பணியை முடிப்பதற்கு முன்வருவது இல்லை. இதற்கு காரணம் என்ன? ஒரு டெண்டர் எடுத்தால் எத்தனை நாட்களுக்கு வேலை செய்து முடிக்க வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

கூட்டத்தில் ஆம்பூர் நகராட்சியை தரம் உயர்த்திய தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து நஜீர்அகமது நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.83 லட்சம் ஒதுக்கீடு

ஆம்பூர் நகரில் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு ரூ.83 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஆம்பூர் நகரில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்தால் 2 நாளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மேலும் டெண்டர் எடுத்து பணியை முடிக்காத காண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இக்பால்அகமது, தனபால், பிரேம்குமார், திருநாவுக்கரசு, சாமுவேல்செல்ல பாண்டியன், தனலட்சுமி உள்ளிட்ட பலர் பேசினர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.