Breaking News
recent

சிங்கப்பூரில் சாதனை படைத்த ராமநாதபுரம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிங்கப்பூரில் சாதனை படைத்த ராமநாதபுரம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

ராமநாதபுரம், டிச. 18: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான கருத்தரங்கில் படைப்புகள் சமர்ப்பித்து தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் கூட்டமைப்பு ஆகியன இணைந்து உலக அளவிலான 13-வது பயோ மெடிக்கல் தொழில்நுட்ப கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் நடத்தின.

இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி முடிய நடைபெற்ற கருத்தரங்கில் உலகம் முழுவதிலும் இருந்து 64 நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் 900-க்கும் மேற்பட்ட படைப்புகளை சமர்ப்பித்தனர். இவற்றில் 300 மட்டும் இறுதிப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டிக்காக தேர்வான கட்டுரைகளை ஆய்வு செய்த நடுவர் குழுவினர் சிறந்த படைப்பாக ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயிலும் எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் ஏ.அகமது மொய்தீன், எம்.பாலநாகராஜன் ஆகிய இருவரது கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டது.

இவர்களுக்காக கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு முதல்வர் முகம்மது ஷெரீப் தலைமையும் துணை முதல்வர் எம்.பெரியசாமி முன்னிலையும் வகித்தனர். செயலர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

அவர் பேசியது:

மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இரு மாணவர்களுக்கும் போட்டியில் பங்கேற்க தேவையான நிதியை கல்லூரியே ஏற்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற சாதனைகளை நிகழ்த்துவோருக்கு நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

வரும் ஜனவரி மாதம் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த 4 ஆம் ஆண்டு மாணவர் செய்யது சுல்தான் அலாவுதீன் உலக அளவில் நடைபெற உள்ள ராக்கெட் வடிவமைப்பு பற்றிய தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்க சீனா செல்வதாகவும் தெரிவித்தார்.

துறைத் தலைவர்கள் ஜி.மகேந்திரன், எஸ்.ராஜசேகர் உள்பட கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.