பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான்னிர் ரஹீம்.
வாழ்வில் எந்த ஒரு விசயமாக இருப்பினும் நல்ல வழி காட்டுதல் இல்லாவிடின் பெறக்கூடிய நன்மைகளையும்,பயன்களையும் பெற முடியாது.கடலில் சென்றவர்களுக்கு எப்படி கரையில் உள்ள கலங்கரை விளக்கு வழி காட்டி சரியான திசையை சொல்வது போல், சமுதாயத்தில் ஏற்றம் பெற சரியான வழி காட்டி அவசியம்.
மன்னர்களுக்கு அமைசர்கள் இருந்ததுபோல்,அரசாங்கம் நடைபெற ஆலோசகர்கள் இருப்பதுபோல்,சமுதாயத்தில் குறிப்பாக நல்ல கல்வியை தேர்ந்தெடுக்க அதை படித்து பயன் பெற ஆதரவுடன் கூடிய வழிகாட்டி அவசியம் அது நம் சமுதாயத்தில் சரிவர அமையாதது நம் துரதிஸ்டம்.படிச்சி என்ன கிழிக்கப்போகிறான் ?படித்தது பொதும் பொழக்கிற வழியப்பாரு .
பொம்பள புள்ள படிச்சி இன்ன ஆகப்போவுது இந்த நாட்டையா கட்டி ஆளப்போகிறாள்? கால காலத்துல கல்யாணம் கட்டிகிட்டு குடும்பம் நடத்த போகிறவதானே?என்று மூத்தவர்களே நம் இளைய தலைமுறைக்கு தடை போடுகிற்தின் விளைவாக மாற்று மததில் படித்தவர்கள் அதிகமாகி ,நமக்கு வர வேண்டிய உரிமைகளும் ,சலுகைகளும் கை மாறிவிடுவதுடன் எதற்கு எடுத்தாலும் மருத்துவர்,வழக்கறிஞர்,காவல் துறை அதிகாரி,கிராம அலுவலர் என்று பலரிடம் பல்லை காட்டி நிற்க வேண்டிய சூழ்னிலைகளும்,சட்டம் ஒழுஙு நமக்கெதிராய் மாற்றப்படுவதும் அன்றாடம் நடக்கும் அவலங்கள்.
இவையெல்லம் கலைய கல்வி அவசியம் அதுவும் நம் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லி உள்ளன.பெருமானார் ரசூல் (ஸல்)அவர்களும் சொல்லியதுபோல் சீனத்து தேசம் சென்றேனும் கல்வி பயுலுங்கள் என்றதை ஆதார உதாரணமாக கொண்டு கல்வி கற்பது அவசியம் என கொள்வோமாக.அது ஏன் சீன தேசம் ?அந்த சொல் சொல்லும் காலம் அரபியா சீனத்துக்கு மிகத்தொலைவ நபிகளார் வாழ்ந்தது.,
ஆக, தூரா தேசம் சென்றாலும் கல்வி அவசியம் கற்க வேண்டியாதிவிடுகிறது! அதுவும் இஸ்லாம் போதிக்கும் வழியில் இஸ்லாத்துடன் கூடிய வகையில் நம் கல்வி அமைய வேண்டியது அவசியம்.மேலும் சிறு பருவத்திலிருந்தே இஸ்லாம் நெறிகளுடன் கூடிய ஆரம்ப கல்வி அவசியம் என்பதே நம் கொள்கை எண்ணமாக இருக்க வேன்டும். கல்வி கற்று விட்டால் என்ன ,என்ன நல் பண்புகள் நம் வாழ்வில் வரும் என்பதை இப்பொழுது சிறு வயதிலிருந்து ஆராய கீழே சில விளக்கங்கள்.
குழந்தைகள் குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்.
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும்.
இஸ்லாமியக் கல்வி:
"ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்ததாக வேறு எதையும் விட்டுச் செல்வது கிடையாது" [அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஆஸ்(ரலி); நூல்: திர்மிதீ].
கலாச்சாரச் சீரழிவு
காணும் திசையெங்கும் இப்போது ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு, தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமியக் கல்விதான் ஒரே தீர்வு.
குழந்தைகளுக்குப் பிள்ளைப் பருவத்திலேயே தொழுகையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடவேண்டும்.
"குழந்தை ஏழு வயதை எட்டி விடும்போது, தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்தும் தொழுகையைத் தவறவிட்டால், அடியுங்கள். மேலும், படுக்கையைத் தனித்து அமையுங்கள்" [அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்].
"நிச்சயமாகத் தொழுகையானது, மானக்கேடான, கேவலமான செயல்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்றது" எனத் திருமறை குர்ஆன் (29:45) கூறுகின்றது.
நமக்கெல்லாம் பேரருளாக இறைவனால் வழங்கப் பட்டுள்ள திருமறை குர்ஆன் பற்றிய கல்வியையும் நபி(ஸல்) அவர்களின் நல்வாழ்க்கை பற்றிய வரலாற்று அறிவையும் குழந்தைகளின் மனதில் பதியுமாறு எடுத்துரைத்து, அவர்களை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய வார்ப்பில் வடித்தெடுக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்" [நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].
மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் கல்வி போன்ற துறைகளில் தம் பிள்ளைகளைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று அதீத அக்கறை எடுக்கும் முஸ்லிம் பெற்றோர் பலர், தம் பிள்ளைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளாகிய திருக்குர்ஆனைப் பற்றியும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே என்று நினைப்பதில்லை.
"அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்" [அறிவிப்பாளர்: அனஸ்(ரலி); நூல்: இப்னுமாஜா].
ஏழு வயதில் குழந்தைகளைத் தொழுமாறு ஏவக் கடமைப் பட்ட பெற்றோர், தம் எழுபது வயதில் கூடத் தொழுகையை மறந்து திரிகின்ற அவல நிலை, நம் கண்ணெதிரே காணப் படுகின்றது.
பெற்றோர், தம் மக்களைக் கண்காணித்து, எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தம் பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் அவர்களின் நண்பர்களைப் பற்றியும் ஓய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குத் தம் பிள்ளைகள் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
தீய பழக்கங்களின்பால் தம் பிள்ளைகள் செல்வது தெரிய வந்தால் அவர்களை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் தடுத்து, நேர்வழியின் பக்கம் திருப்ப வேண்டும்.
"ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கின்றது. பெற்றோர்களே அக்குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள்" [நூல்: புகாரீ]. ஆகவே தாய் மார்கத்துடன் கூடிய கல்வி கற்பது அவசியம் என்பது இதன் வழி தெரிந்து கொள்ளலாம்.
எனவே, பிள்ளைகளின் அறிவை இஸ்லாமியக் கல்வியின் மூலம் வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். மேலும், குழந்தைப் பருவத்திலேயே இஸ்லாமிய நெறி சார்ந்த கல்வியைக் குழந்தைகளுக்குப் புகட்டுதல் வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் காணப்படக்கூடிய அவலமான குணம் யாதெனில், பெற்றோர்களை மதிக்காத தன்மை. இது தற்கால உலகப்படிப்பின் விளைவால் ஏற்படுகிறது. இன்றைய உலகக் கல்வியின் விளைவு என்னவெனில், படிக்கக் கூடிய மாணவர்களில் பெரும்பாலோர், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அக்கிரமம், பாவங்கள் நிகழ்ந்தாலும் அதைக் கண்டும் காணாமல் 'நமக்கேன் வம்பு?' என்ற அலட்சிய நிலைதான், இன்றைய நவீன தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது.
தீர்வு:
இதற்கு ஒரே பரிகாரம், குழந்தைகளுக்கு உலகக்கல்வி கற்பிப்பதோடு நின்று விடாமல் 'தீனிய்யாத்' எனும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியும் கற்றுக் கொடுக்க வேண்டும். எத்தனை உயர் பட்டப்படிப்புகள் படித்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்த இஸ்லாமியக் கல்வியைப் பயிலாமல், 'படிப்பு' பூர்த்தியடையாது.
இஸ்லாமியக் கல்விதான், தனிமனித ஒழுக்கம், சிறந்த கூட்டு வாழ்வு, பொதுநலநோக்கு, தொலைதூரப் பார்வை, ஆதரவற்றோர் அரவணைப்பு, இறை கடமைகளை நிறைவேற்றல், மனித உரிமைகள் பேணல் போன்ற உயர்தரமான பண்பு நலன்களைப் போதிக்கிறது. மேலும்,
"ஒருவன் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் பயனுள்ள இஸ்லாமியக் கல்வியானது, அவன் இறந்த பின்பும் அவனுக்குத் தொடர்ந்து நன்மைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்" என்பது நபி(ஸல்) அவர்களின் நல்லுரையாகும் [நூல்: முஸ்லிம்].
இறைப்பற்றையும் நபி நேசத்தையும் குழந்தைகளுக்கு இளமை முதலே போதித்திட வேண்டும். 'மம்மி-டாடி' என்று குழந்தைகளால் அழைக்கப்படுவதைக் கேட்டு பெற்றோர் பூரித்துப் போகின்றனர். இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி தீனுல் இஸ்லாத்தை மட்டம் தட்டுகிறது. எனவே இது குறித்து முஸ்லிம் சமுதாயம் அக்கறை எடுத்து, சிறார்களுக்கு ஆரம்பத்திலேயே இஸ்லாமியக் கல்வியைப் போதிக்க வேண்டும்.
ஒரு குழந்தை வளரும் சூழல், அதன் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ, அதே போன்று ஒருவன் மாணவனாக இருந்து பெறும் அறிவும் அவனது வாழ்க்கையில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த வல்லது. எனவே, மாணவப் பருவத்தின் போது அவர்களிடம் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் இஸ்லாமியக் கல்வி மூலம் ஏற்படுத்தினால் அவர்களது ஆளுமையை நெறிப்படுத்த முடியும்.
ஏகத்துவம் பற்றிப் பேசும் அல்குர்ஆன் வசனங்களின் கருத்துகள், நம் பிள்ளைகளின் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். அவர்களது பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணி போன்று பதியும்படியாகச் செய்துவிட வேண்டும். குழந்தைகள் உயர்ந்த ஒழுக்க சீலர்களாக, நற்குணங்கள் வாய்க்கப்பெற்றவர்களாக ஆகவேண்டுமென்றால், அவர்களது ஆரம்பக்கல்வி இஸ்லாமாக இருந்தால்தான் சாத்தியம்.
இஸ்லாம் சுமத்தும் பொறுப்புகளும் கடமைகளும் ஆண்களுக்கு மட்டும் உரித்தானவையல்ல, பெண்களுக்கும் சமூகச் சேவையில் பங்களிப்பு உண்டு. ஆண்களைப் போலவே பெண்களும் உயரியதொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டு இருக்கின்றார்கள். சில சிறப்பான துறைகளில் ஆண்களை விடப் பெண்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகின்றது.
சமூகத்தின் இன்னொரு அங்கமான பெண்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை, அதாவது தான் சார்ந்த சமூகம் மட்டுமின்றி, ஏனைய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் வேறுபாட்டை உணர்த்திக் காட்டுவதன் மூலம், இஸ்லாத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் பாலம் அமைக்கும் பெரும் பணியைச் செய்யக் கூடியவர்களாக முஸ்லிம் பெண்கள் திகழ வேண்டியது கட்டாயமாகும்.
எங்கெல்லாம் முஸ்லிம் பெண்கள் சமூகமளிக்கின்றார்களோ, அங்கு சமூகச் சீர்திருத்தத்தைக் காண முடியும். வழிகாட்டியாக, கல்வியறிவு ஊட்டுபவளாக, தன் சொல்லாலும் செயலாலும் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக் கூடியவளாக அவள் இருப்பாள்.
ஒரு முஸ்லிம் பெண், தனது வழிகாட்டியாக குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது அறிவுரைகளையும் தன் வாழ்வியல் நெறிகளாக ஏற்றுக் கொண்டு செயல்படுவதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் சீர்திருத்தக் கூடியது என்பதை முழுமையாக உணர்ந்தவளாகவும் இருக்க வேண்டும்.
வாழ்வின் இருண்ட பக்கங்களில் வசித்துக் கொண்டு, அறியாமைக் காலச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை இஸ்லாத்தின் தூதுத்துவத்தின் பக்கம் அழைப்பதன் மூலம், தன்னுடைய சமூகப் பொறுப்பை முழுமையாக உணர்ந்து செயல்படும் உன்னதமான பெண்மணியாக இறைவனால் கண்ணியமளிக்கப்படுகின்றவளாக மாற்றம் பெறுகின்றவளாக அவள் ஆகி விடுகின்றாள்.
வரலாற்றின் உன்னதமான பக்கங்களை நிறைத்துக் கொண்டிருக்கும் ஏராளமான சாதனைப் பெண்களைப் பற்றி குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் இன்றளவும் இயம்பிக் கொண்டிருப்பதை, அவர்களது சாதனைகளை உலகத்துப் பெண்களுக்கு உதாரணங்களாகக் காட்டி இருப்பதை நாம் வாசித்துப் பார்க்க முடியும்.
எவ்வாறு ஓர் ஆண் மகன் தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுது, இறைவனின் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி வைக்கப்படுவதைப் போலவே பெண்களும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுது குற்றம் சாட்டப்படுவார்கள்.
இஸ்லாத்தைப் பற்றியும் தன்னைப் படைத்தவனின் கட்டளைகள் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்துள்ள பெண், பெண்களின் சந்திப்புகளின் பொழுது அவற்றைத் தவறாது கடைபிடிக்கக் கூடியவளாகவும், அதனைப் பிற பெண்களுக்கு எடுத்தியம்பக் கூடியவளாகவும் அவள் இருப்பாள்.
இதன் மூலம் இஸ்லாத்தின் ஒழுக்க விழுமியங்களை பிற மக்களுக்கு எடுத்துக் கொண்டு செல்லும் பாலமாக அவள் இருப்பாள், இறைவனின் நெருக்கத்தை அதன் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியவளாகவும் அவள் இருப்பாள்.
முஸ்லிம் பெண்கள் நன்னடத்தை கொண்டவர்களாக இருப்பதோடு, நட்புடன் பழகக் கூடியவர்களாகவும் இரக்கமனப்பான்மை மிக்கவர்களாகவும் கனிவாகப் பேசக் கூடியவர்களாகவும் இன்னும் சமயோசிதமாக நடக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர்களோடு நட்புடன் பழகக் கூடியவர்களாக இருப்பதோடு, அதன்மூலம் மற்றவர்களும் இவர்களை நேசிக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
இஸ்லாமும் அதன் கொள்கைகளும் பிற மதத்தவர்களுக்கு ஏடுகளின் மூலம் அறிமுகமானதைவிட, பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் அறிமுகமாகி உள்ளன. பிற மதத்தவர்களுடன் பண்பாடான முறையில் பழகுவதன் மூலம், இஸ்லாத்தைப் பற்றியதோர் அறிமுகத்தை அவர்களுக்கு ஊட்ட முடிந்திருக்கின்றது, அதன் மூலம் இஸ்லாமிய வழிகாட்டலை அவர்களுக்குப் படிப்பினையாக வழங்க முடிந்திருக்கின்றது என்பது வரலாறு.
இவ்வாறான பழக்கவழக்கங்கள் இஸ்லாத்தின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த உலகத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடித்திடும் நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற மறுமை நாளிலே அவருக்கு நற்கூலியைப் பெற்றுத் தரக் காத்திருக்கின்றன. மனிதனின் நற்பண்புகளைக் காட்டிலும் வேறெதுவும் மறுமை நாளிலே அதிக எடை கொண்டதாக இருக்காது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளிலே இறைநம்பிக்கை கொண்டவனின் எடைத் தட்டுகளில் உள்ளவைகளில் நற்பண்புகளைத் தவிர வேறெதுவும் அதிக எடை கொண்டதாக இருக்காது. நிச்சயமாக, வீணான பேச்சுக்களையும், கெட்ட பேச்சுக்களையும் பேசுவோர்களை அல்லாஹ் வெறுக்கின்றான்".
பிறரிடம் பண்பாடான முறையில் நடந்து கொள்வது என்பது இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாக இருக்கின்றது என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது. யார் பிறரிடம் நற்பண்பாடுடன் நடக்கின்றார்களோ, அவர்கள் இறைநம்பிக்கையைப் பூரணமாகப் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் :
"இறைநம்பிக்கையாளர்களில் மிகச் சிறந்தவர் யரென்றால், பிறரிடம் நல்ல முறையில் பண்பாடாக நடந்து கொள்பவரே".
ஒரு முஸ்லிம் பெண்மணி தன்னைச் சார்ந்த சமுதாயத்தவர் அனைவரிடமும் வாய்மையுடன் நடந்து கொள்வாள். ஏனென்றால் அவள் இஸ்லாமிய அடிப்படையின் கீழ் வாழக் கூடியவள்; அதனைக் கற்றறிந்தவள். அவள் கற்றறிந்திருக்கின்ற அவளது மார்க்கப் போதனைகள் யாவும் அவளை வாய்மையுடன் வாழவே பயிற்றுவித்திருக்கின்றன.
அவ்வாறு வாழ்வதே அவளுக்கு உற்சாகம் அளிக்கின்றது. அதேநேரத்தில் பொய்யாக நடப்பதும் பேசுவதும் தீமையானது; கெட்டது. உண்மையில் வாய்மை என்பது நல்லவற்றை நோக்கிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு சென்று, இறுதியில் சுவனத்தை அதன் பரிசாகப் பெற்றுத் தரும், ஆனால் பொய்மையோ தீமையின் பக்கம் அழைத்துச் சென்று இறுதி இருப்பிடத்தை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்". (புகாரீ 6094)
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
எனவே, முஸ்லிம் பெண்ணானவள் எப்பொழுதும் வாய்மையாகப் பேசுவதை விரும்பக் கூடியவளாக இருக்க வேண்டும். இன்னும் அவள் தனது சொல்லாலும் செயலாலும் அதற்குச் சான்று பகர்பவளாக இருந்து, இறைவனுடைய விருப்பத்திற்குரிய நல்லடியாளாக மாற முயற்சி செய்ய வேண்டும். இதனை உண்மையில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கக் கூடிய - வாய்மையையே தன் வாழ்வில் கடைபிடித்து வருகின்ற பெண்மணிகளால் மட்டுமே சாதிக்க முடியும்.
அத்தகைய பெண்மணிகளைத் தான் அல்லாஹ் தனது பதிவேட்டில் வாய்மையாளர்கள் - சித்தீக்கீன் என்று பதிவும் செய்கின்றான்.
உண்மையான, சத்தியத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் பெண்ணானவளின் தோற்றமும் ஆளுமையும் பண்புகளும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றக் கூடியவள் என்று அவளை இனங்காட்டக் கூடியதாக இருக்கும். இத்தகைய பெண்மணிகள் தவறான தகவல்களைப் பரப்புவதில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதொன்று என்று அவர்கள் அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
"பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்"
இன்னும் தவறான சாட்சியங்கள் கூறுவதும், இஸ்லாத்தில் ஹராமாக - தடுக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. இது ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையதல்ல. அது அவளது கண்ணியத்தைச் சீர்குலைத்து விடும்; அவளது நன்மதிப்பையும் கெடுத்து விடும்; அவளை திரித்துக் கூறுபவளாகப் பிறர் தூற்றுவர். இன்னும் சமூகத்தில் எந்தவித பெருமதியும் இல்லாதவளாகவும் மாறி விடுவாள் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்).
முடிவுரை:
இறைவனுடைய அடியார்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து வித காரியங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். அதற்கு பகுத்தறியக்கூடிய அறிவு அவசியம் அதை தருவது கல்வியே! மனிதனையும் ,விலங்குகளையும் வேறுப்படுத்துவது.
நம்முடைய சமூகப் பொறுப்புகளை உள்ளபடி உணர்ந்து, அனைவருடனும் அழகிய பண்பாடுகளோடு பழகி, உன்னதச் சமுதாயம் உருவாவதற்கு நாம் அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்; அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
--தபால் காரன்.--
ROYAL SON 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்