பல்கலைக்கழக விரிவுரையாளர் மீதான மாணவிகளின் பாலியல் புகார்
விசாரணை அதிகாரியை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பல்கலைக்கழக விரிவுரையாளர் மீதான மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணை அதிகாரியை நியமனம் செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.
மாணவிகள் புகார்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி. இவர் பாலியல் தொந்தரவு செய்வதாக சில மாணவிகள் பல்கலைக்கழகத்திடம் ஏற்கனவே புகார் செய்தனர். இதையடுத்து அந்த புகார் தொடர்பாக உண்மைகளை கண்டறிய பல்கலைக்கழகம் சார்பில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி துணைவேந்தரிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் இந்த விசாரணையை எதிர்த்து பழனிச்சாமி தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நான் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில் ஒருவர் சாட்சியம் அளிக்கும்போது மேலும் இருவர் அவருக்கு உதவி செய்தனர். எனவே முறைகேடான முறையில் நடந்த இந்த விசாரணையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பாக விசாரணைக்கு வந்தது.
முறையாக நடக்கவில்லை
விசாரணை முடிவில் நீதிபதி தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-
இந்த புகார் தொடர்பாக விசாரணை அதிகாரி ஒரு சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும்போது மேலும் இருவரின் உதவியை அந்த சாட்சி பெற அனுமதித்து உள்ளதாக மனுதாரரின் வக்கீல் கூறுகிறார். சாட்சி கூண்டுக்கு வெளியே இருப்பவர்களிடம் இருந்து உதவியை பெற்று சாட்சி அளிப்பவர் பதில் அளிப்பதை விசாரணை அதிகாரி எப்படி அனுமதித்தார் என்று புரியவில்லை. ஒரு புகார் தொடர்பான உண்மையை கண்டுபிடிக்கத்தான் விசாரணை நடக்கிறது. ஆனால் அந்த நோக்கம் இந்த விசாரணையில் தடைபட்டு போய்விட்டது.
மேலும் மனுதாரர் பழனிச்சாமி, தன் மீதான புகார் குறித்த விளக்கத்தை பதிவு தபாலில் விசாரணை அதிகாரிக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துள்ளார். விசாரணையின் போது எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் அது முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே மனுதாரர் மீதான புகார் குறித்து மீண்டும் ஐகோர்ட்டு வக்கீல் எம்.வி.இளங்கோ விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன். ஏற்கனவே நடந்த விசாரணையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, அந்த அறிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அவர் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்