Breaking News
recent

தங்கசாலை தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு

நூறு ஆண்டு பழமைவாய்ந்தது-1 1/2 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்
தங்கசாலை தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு


சென்னை, டிச.9-

ஏறக்குறைய 1 1/2 லட்சம் பேர் பயன்பெறும், சென்னை தங்கசாலையில் உள்ள நூறு ஆண்டு பழமைவாய்ந்த தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மக்கள் எதிர்ப்பை மீறி

சென்னையில் சமீப காலமாக பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கட்டிடம் மற்றும் அதன் சொந்தக்காரர்களை காரணம் காட்டி, மக்கள் மத்தியில் பழகிப்போன பகுதியில் உள்ள தபால் நிலையங்களை தபால் துறையினர் தொலைதூர பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையிலும், தபால் துறை இது போன்று தொடர்ந்து செயல்படுவதாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மீண்டும் மாற்றும் முயற்சி

இந்த நிலையில், வடசென்னையில் இதயம் போன்ற தங்க சாலையில் உள்ள தபால் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றும் முயற்சியில் தபால் துறை இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி செ.பழனி கூறியதாவது:-

தங்கசாலை அரசு அச்சகத்தின் அருகில் 100 ஆண்டு பழமைவாய்ந்த தபால் நிலையம் உள்ளது. இதன் மூலம் கொண்டித்தோப்பு, ஏழுகிணறு, பென்சில்லேன், மூலகொத்தளம், வால்டாக்ஸ் சாலை, யானைக்கவுனி, தங்கசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 11/2 மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

ஓய்வூதியம் பெறுவோர்

அரசு அச்சகத்தில் பணியாற்றுபவர்களும், இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுமாக ஏறக்குறைய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அஞ்சலகத்தில் வைப்பு நிதி செலுத்தியும், மாதாந்தி சேமிப்புக்கணக்கில் பணம் செலுத்தியும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய வட்டியைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். மணியார்டர், டெலிபோன் பில் செலுத்துவது என்று பல்வேறு சேவைகளுக்கு இந்த தபால் நிலையத்தையே நம்பி உள்ளனர்.

இந்த தபால் நிலையத்தில் மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஸ்டாம்பு விற்பனை மட்டும் நடக்கிறது. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரவு-செலவு நடப்பதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் நிலை

மக்களுக்கு பயன்தரும் வகையில் செயல்படும் இந்த தபால் நிலையத்தை திடீரென வேறு பகுதிக்கு ஏறக்குறைய 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரிநாராயணபுரம் அஞ்சலகம் செயல்படும் வளாகத்துக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு அருகிலேயே சவுகார்பேட்டை அஞ்சல் நிலையமும் உள்ளது. தங்கசாலையில் தற்போதுள்ள தபால் நிலையத்தில் இருந்து இரண்டுமே சமதூரத்தில் தான் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தங்கசாலைத்தெருவில் வயதானவர்களும், பெண்களும் தபால் நிலையத்துக்கு எளிதாக செல்லவே முடியாது. பென்ஷன் பெறுவோரின் நிலை கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

தங்கசாலை தபால் நிலையக்கட்டிடத்தின் வயது நூறு என்பதை காரணம் காட்டி அந்த தபால் நிலையத்தின் மூலம் பயன்பெறும் மக்களின் நிலையை தபால் துறை கணக்கில் கொள்ளவேண்டும்.

மாற்றக்கூடாது

எனவே, தற்போதுள்ள அஞ்சல் நிலையத்துக்கு அருகிலேயே மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடத்திலோ அல்லது தனியார் கட்டிடத்திலோ தபால் நிலையத்தை அமைக்க வேண்டும். மக்கள் தேவைக்கான அஞ்சல் நிலையத்தை கட்டிடத்தை காரணம் காட்டி வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது. இதே கருத்தை இந்தப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு செ.பழனி கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.