Breaking News
recent

சிறுபான்மை கல்லூரிகள் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறலாம்

சிறுபான்மை கல்லூரிகள் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறலாம்
விரைவில் சட்ட திருத்தம்


சென்னை, டிச.27-

சிறுபான்மை கல்லூரிகள் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் இணைப்பு அங்கீகாரம் பெறும் வகையில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆணையத் தலைவர் நீதிபதி சித்திக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத் தலைவர் நீதிபதி எம்.ஏ.சித்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். திருவல்லிக்கேணி டி.அகமது அலி பர்பியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் பாதிரியார் அருள்ராஜ், முஸ்லீம் கல்வி அறக்கட்டளை செயலாளர் கே.அப்துல் சத்தார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் சாதிக் உள்பட ஏராளமான முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

கோரிக்கைகள்

கல்வி கட்டணம் வசூலிக்காத அனைத்து தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். சிறுபான்மை வகுப்பு மாணவர்கள் தங்கள் தாய்மொழியை முதல் வகுப்பில் இருந்து படிக்கும் வகையில் மும்மொழி கல்வி திட்டத்தை கொண்டுவர வேண்டும், பள்ளி தொடங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் தளர்த்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தலைவர் நீதிபதி சித்திக் பேசியதாவது:-

சிறுபான்மை கல்லூரிகள் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் இணைப்பு அங்கீகாரம் (அபிலியேஷன்) பெறும் வகையில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்கான சட்ட மசோதா வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.

பல்வேறு சலுகைகளை பெறும் இந்த கல்வி நிறுவனங்கள் போதிய எண்ணிக்கையில் சிறுபான்மை வகுப்பினரை சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

கண்டிப்பாக குறைந்தபட்சம் இத்தனை சிறுபான்மை வகுப்பு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு விண்ணப்பிக்கும்போது 3 மாதம் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை என்றால் தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர்கள் கருதிவிடலாம்.

இவ்வாறு நீதிபதி சித்திக் கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.