50 லட்சம் புத்தகங்கள் அணி வகுக்கும் சென்னை புத்தக கண்காட்சி நாளை ஆரம்பம்
அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஜன.7-
50 லட்சம் புத்தகங்கள் அணி வகுக்கும் சென்னை புத்தக கண்காட்சி நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகிறது. இந்த கண்காட்சியை முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார்.
50 லட்சம் புத்தகம்
32-வது சென்னை புத்தக கண்காட்சி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகிறது. இம்மாதம் 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தொடங்கிவைக்கிறார்.
50 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறும் இந்த பிரமாண்ட கண்காட்சிக்காக 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில், 588 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 512 நிறுவனங்கள் தங்கள் புத்தகங்களை விற்பனைக்காக வைக்கின்றன.
புத்தக கண்காட்சி நடைபெறும் 11 நாட்களும், தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. மேலும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு இலவசம்
தினமும் மதியம் 2.30 மணி முதல் குழந்தைகள் பற்றிய உலக புகழ்பெற்ற குறும்படங்கள், இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புத்தக கண்காட்சியை காண நுழைவு கட்டணம் ரூ.5 ஆகும். 12 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மாணவர்களுக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.
புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் சலுகை விலையில் கிடைக்கும். மேலும், கண்காட்சியில், சர்க்கரை நோய்-ஆஸ்துமா நோய் கண்டறியும் முகாம், ரத்ததான முகாம் ஆகியவையும் நடத்தப்பட உள்ளன. தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். வார இறுதி நாட்களில் காலை 11 மணியில் இருந்தே கண்காட்சியை காணலாம்.
மேற்கண்ட தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்