9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது எப்போது?
தஞ்சாவூர், ஜன. 6: 9-வது உலகத் தமிழ் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
நாடு விடுதலை பெற்ற பிறகு, தமிழ் மக்களிடம் ஏற்பட்டு வரும் தாய்மொழி ஆர்வத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது உலகத் தமிழ் மாநாடு.
உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்' தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்த மன்றம் வரையறுத்துக் கொண்டது.
1966-ம் ஆண்டு, ஏப். 17-ம் தேதி முதல் 23 வரை கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தனது தமிழ்ப் பயணத்தை தொடர்ந்தது இந்த மன்றம்.
தொடர்ந்து 1968-ல் சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாடும், 1970-ல் பாரீஸில் (பிரான்ஸ்) 3-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 3 மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.
4-வது மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் யாழ்பாணத்திலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் (ஆப்பிரிக்கத் தீவு) 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன.
8-வது மாநாடு நிறைவு பெற்று இதுவரை 13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடைபெற்றன. அவரது மறைவுக்குப் பிறகு, 5-ம் மாநாட்டை தொடர்ந்து எடுத்து நடத்த போதிய சக்தியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையத் தொடங்கியது.
பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணம்.
மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
மேலும், 13 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
நமது பெருமையும், சிறப்பும் பழைமையோடு நின்றுவிடக் கூடாது. புதுமைப் பொலிவு பெருகி வரும் உலகில் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.
உலகளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். கடல் கடந்து பல நாடுகளில் வாழும் தமிழர்களுக்கிடையே ஒருமை உணர்வு வளர்க்கப்பட வேண்டும்.
உலகில் உள்ள தமிழுக்கும், தமிழர்களுக்கும் தாய்நாடாக விளங்குவது தமிழகம். தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் தமிழர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள், தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரின் முயற்சியுடன் விரைவில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்பதே உலகத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
கடந்த 13 ஆண்டுகளாக மாநாடு நடைபெறாததற்குக் காரணம் நிதி பிரச்னையே. ஆகவே, அரசியல் தலைவர்கள், வலுவான தமிழ் அமைப்புகள் தாராளமாக நிதியுதவி செய்து எவ்வித பாரபட்சமுமின்றி தமிழ் உணர்வையே முன்னிறுத்தி மாநாடு நடத்த முன் வரவேண்டும்.
1995-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ் மீது அளவற்ற பற்றுடன், தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது எப்போது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்