இஸ்லாமிய வங்கி முறையே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு: தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி
சென்னை, ஜன. 9: உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இஸ்லாமிய வங்கி முறையே தீர்வாக அமையும் என்று கத்தார் நாட்டில் உள்ள தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.சீதாராமன் (படம்) கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த சீதாராமன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வங்கித்துறையில் சர்வதேச அளவில் தோஹா வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்திய பொருளாதாரம் சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு நிலையாக இல்லாத காரணத்தால்தான் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது டாலர் மதிப்பு நிலையாக உள்ளது. உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம்.
உலகில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இஸ்லாமிய வங்கி முறையே சரியான தீர்வாக அமையும். இம்முறையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் உலக நாடுகளுக்கு சாதகமானதாக இருக்கும்.
தோஹா வங்கிக் கிளைகளை இந்தியாவில் தொடங்குவது குறித்த தொடக்க நிலை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார் சீதாராமன்.
தூய தமிழில் பேசிய சீதாராமன்
தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றும் சீதாராமன் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அவ்வூரில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1979-ம் ஆண்டு வணிகவியலில் பட்டம் பெற்றவர்.
20 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் வசித்து வரும் இவர், 6 ஆண்டுகளாக தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தூய தமிழில் உரையாடினார் சீதாராமன்.
AdiraiPost
இஸ்லாமிய வங்கி
தோஹா வங்கி
பொருளாதாரம்
இஸ்லாமிய வங்கி முறையே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு: தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்