ஸ்ரீ ராமச்சந்திராவில் "தலைமைச் செயலகம்'
சென்னை, பிப். 12: முதல்வர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, சிறிய "தலைமைச் செயலகமாக' தற்போது மாறியுள்ளது.
கடுமையான முதுகுவலி காரணமாக, முதல்வர் கருணாநிதி ஜனவரி 26-ம் தேதி ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல், கடந்த 15 நாள்களாக அமைச்சர்கள், அதிகாரிகள் அவரிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கின்றனர்.
மருத்துவமனையின் 7-வது மாடியில் முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு அருகிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு 4 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வரைச் சந்திக்கச் செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்துவிட்டுச் செல்வதற்காக இந்த அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மிகவும் முக்கிய முடிவுகள் குறித்து நிதியமைச்சர் அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரிடம் கூறி, அவர்கள் மூலமாக ஒப்புதல் வாங்கப்பட்டு வந்தது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தொடங்குகிறது. பேரவையில் அன்றைய தினம் நிதியமைச்சர் அன்பழகன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
முதல்வருக்கு முதுகுத் தண்டு அறுவைச் சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முதல்வரை சிறப்பு அறையில் சந்தித்து இரண்டு மணி நேரம் பட்ஜெட் குறித்து விவாதித்தனர். அப்போது நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் இறுதி வடிவம் கொடுத்து ஒப்புதல் அளித்தார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல்வருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, பார்வையாளர்கள் யாரையும் 10 நாள்களுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அரசு நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில், அமைச்சர் ஸ்டாலின் மூலமாகத் தொடர்ந்து முதல்வரின் ஒப்புதலைப் பெற, உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இன்று மீண்டும் சிறப்பு வார்டுக்கு...
முதுகுத் தண்டு வடத்தில் அறுவைச் சிகிச்சை முடிந்து முதல்வர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் நலமாக உள்ளார்.
புதன்கிழமை அவரைப் பரிசோதித்த தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஏ.ஜெய்ஸ்வால் கூறியது:
முதல்வர் தற்போது நவீன வசதிகள் கொண்ட பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். செய்தித்தாள்களைப் படிக்கத் தொடங்கியதுடன், தொலைக்காட்சிகளில் முக்கிய செய்திகளையும் பார்க்கிறார் என்றார்.
இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), 7-வது மாடியில் உள்ள வழக்கமான சிறப்பு சிகிச்சை அறைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
டாக்டர் ஏ.ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தில்லி புறப்படுகிறார். மீண்டும் ஒரு வாரம் கழித்து அவர் சென்னை வந்து முதல்வரை பரிசோதிப்பார். முதல்வரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்