Breaking News
recent

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா

http://arivili.blogspot.com/2009/02/icici.html
சும்மா இருக்கும் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களுக்குக் கடன்களைத் தந்து விட்டுப் பின்னர் அவர்களைச் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்கி, அதன் மூலம் தாங்கள் லாபம் சம்பாதிக்க முயலும் இது போன்ற பொறுப்பற்ற வங்கிகளின் செயல்களைத் தட்டிக் கேட்பது எப்படி?

வங்கிகளில் வாங்கிய கடனுக்கான் தவணைத் தொகைகளைக் கட்டத் தவறும் வாடிக்கையாளர்களைக் குண்டர்களைக் கொண்டு மிரட்டியும், அடித்தும் தங்கள் பணத்தை வசூல் செய்கின்றன வங்கிகள் இப்போதெல்லாம்.

வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டாவிட்டால் பின்னர் அவர்கள் அதனை வசூல் செய்ய, இது போன்ற காரியங்களில் இறங்கத்தான் செய்வார்கள், இதை எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது? என்று கூட சிலர் வாதிடலாம்.

ஆனால் இந்த வங்கிகளின் அத்துமீறல்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்று கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்தான் இந்த விசயத்தில் வங்கிகளின் திருவிளையாடல்கள் என்னென்ன என்பது புரியும்.

இப்பொழுதெல்லாம் வங்கிகளில் கடன் பெறும் எண்ணமே இல்லாதவர்களைக் கூட அலைபேசியில் அழைத்து வங்கிகளின் சார்பில் தேனொழுகப் பேசும் இளம்பெண்கள் மூலம் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசி அவர்களைக் கடன் பெற வைப்பதும்,

முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்தும், சில முக்கியமான் அத்தகவல்களை மறைத்தும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதும்,

முடிந்தவரை வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறக்க முயல்வதும் வங்கிகளுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

அலைபேசி(CELLPHONE) வைத்திருக்கும் நம்மில் பெரும்பாலானோருக்கு தினமும் ஒரு அலைபேசி அழைப்பாவது வங்கிகளில் இருந்தோ அல்லது வங்கிகளின் முகவர்களாகச் செயல்படும் நபர்களிடம் இருந்தோ கண்டிப்பாக வந்து விடுகிறது அல்லவா?

(1) உங்களுக்கு வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன், தனிநபர் கடன் போன்ற எந்த விதமான கடனாக இருந்தாலும் நாங்கள் குறைந்த வட்டி விகிதத்தில், உடனடியாக ஏற்பாடு செய்து தருகிறோம். என்றோ,

(2) உங்கள் வங்கிக்கணக்கில் வரவு,செலவுகள் நன்றாக இருப்பதால் உங்களை எங்கள் வங்கியின் சிறந்த வாடிக்கையாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு சிறப்புச் சலுகையாக கடன் வழங்கத் தீர்மானித்துள்ளோம் என்றோ,

(3) நீங்கள் ஏற்கனவே எங்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை முழுவதையும் உரிய காலத்தில் முறையாகத் திருப்பிச் செலுத்தியதால் இப்போது அந்தக் கடன் தொகையைப் போல மூன்று மடங்கு உங்களுக்குக் கடன் வழங்கத் தயாராக உள்ளோம் என்றோ,

(4) உங்கள் கடன் அட்டையில் நீங்கள் செய்து வரும் வரவு செலவுகள் வங்கிக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததால், அதை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு கடன் வழங்க வங்கி தயாராக உள்ளது என்றோ,

(5) உங்களுக்கு எங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருந்தாலே போதும், இலவசமாக கடன் அட்டை வழங்குகிறோம் என்றோ

-ஏதாவது ஒரு கவர்ச்சி கரமான சலுகைத் திட்டத்தை நமக்குத் தர விரும்புவதாகச் சொல்லி ஆசைகாட்டி வலை விரித்து அப்பாவி வாடிக்கையாளர்களை சிக்க வைக்கக் கூடிய அழைப்புகளாகவே இருக்கும்.

வங்கிகளின் சார்பாக இது போன்ற அலைபேசி அழைப்புகளை செய்யும் இளம்பெண்களிடம் வாடிக்கையாளர்கள் , "இல்லை! எனக்கு இப்பொழுது கடன் எதுவும் தேவை இல்லை" என்று சொன்னால் கூட அவ்வளவு எளிதில் அவர்களை விட்டு விட மாட்டார்கள்.

"இப்பொழுது இருசக்கர வாகனம் தானே வைத்துள்ளீர்கள் இந்த வாகனக் கடன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புத்தம் புதிய கார் ஒன்றினை வாங்கினால் உங்கள் குழந்தைகளும் மனைவியும் மகிழ்வார்கள் இல்லையா? உங்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களுக்குப் பெருமையாக இருக்குமே! இந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்" என்றோ

"எத்தனை நாள்தான் வாடகை வீட்டில் இருந்து துன்பப்படுவீர்கள், உங்களுக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும், எங்கள் வங்கியின் இந்தக் கடன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் சொந்த வீட்டை வாங்கிக் கொண்டு பின்னர் மாதத் தவணையின் மூலம் எளிதாக கடனைத் திருப்பிச் செலுத்தலாமே" என்றோ,

என்றெல்லாம் எதை எதையோ சொல்லி வாடிக்கையாளர்களுக்கு ஆசைகாட்டி அல்லது நம்மை சமாதானப்படுத்தி அவர்கள் வாடிக்கையாளருக்குத் தர விரும்பிய கடனை, அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவையே இல்லை என்றால் கூட அவரின் தலையில் கட்டி விடுவார்கள்.

சமயங்களில் மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பங்கள் இது போன்ற கடன் வாய்ப்புகளால் தங்களது வாழ்க்கைக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதே என்று எண்ணி இது போன்ற கடன்களை தாங்களாகவே விரும்பியும் வாங்குகிறார்கள்.

கடன் பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர் சம்மதித்த பின்னர், வங்கியின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரை நேரில் சந்தித்து கடன் விண்ணப்பப் படிவம் என்று ஒரு படிவத்திலும், கடன் ஒப்பந்தப் பத்திரம் என்ற ஒன்றிலும் கையொப்பம் பெற்றுக் கொள்வார்.

பெரும்பாலும் கடன் ஒப்பந்தப் பத்திரம் என்பதில் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெறும் போது, முக்கியமான குறிப்புகளான கீழ்க்காணும் எந்த விவரங்கள் பற்றியும் வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் சொல்வதுமில்லை அதே நேரத்தில் விண்ணப்பப் படிவத்தில் இந்த முக்கிய விவரங்களை பூர்த்தி செய்வதுமில்லை.

மொத்தக் கடன் தொகை எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

மறைமுகக் கட்டணங்கள் என்னென்ன?

கடனுக்கான அடமானங்கள் என்னென்ன?

ஒரு மாதத் தவணை எவ்வளவு? மொத்தத் தவணை மாதங்கள் எத்தனை?

ஒரு மாதத் தவனைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அல்லது செலுத்தத் தவறினால் அபராதம் எவ்வளவு?

செலுத்தத் தவறிய தவணைகளுக்கு வட்டி விகிதம் எவ்வளவு?

கடனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் வங்கி என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும்?

இதைப் போன்ற மிக முக்கியமான அதே நேரத்தில் மிக ஆபத்தான விவரங்கள் எதையும் விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யாமல், வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக் கொள்வதைப் போல, வாடிக்கையாளர்களிடம் கிட்டத்தட்ட 30 முதல் 40 கையொப்பங்கள் வரை பெற்றுக் கொள்கின்றன இந்த வங்கிகள்.

இதனுடன் வீட்டுக் கடனாக் இருந்தால் வீட்டின் பத்திரங்கள், வாகனக் கடனாக இருந்தால் அந்த வானகத்தின் உரிமைச் சான்றிதல் மற்றும் அடமானப் பதிவு போன்றவற்றையும் தங்கள் கடனுக்கான உத்திரவாதமாகப் பெற்றுக் கொள்கின்றன வங்கிகள்.

இவையும் போக தொகையும் தேதியும் குறிப்பிடப்படாமல் கையொப்பம் இடப்பட்ட ஐந்து காசோலைகளையும் பெற்றுக் கொள்கின்றன இந்த வங்கிகள்.

சில வாடிக்கையாளர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருந்து இது பற்றிக் கேள்வி கேட்டால் கூட பூர்த்தி செய்யப்படாத விவரங்கள் வங்கி அலுவலர்களால் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று கூறி அவர்களை சமாளித்து விடுவார்கள் இந்த விற்பனைப் பிரதிநிதிகள்.

அப்புறம் என்ன? தொலைபேசியில் பெண் கொடுத்த வாக்குறுதிகளையும், விற்பனைப் பிரதிநிதி கொடுத்த வாக்குறுதிகளையும் நம்பி நீட்டிய இடத்தில் எல்லாம் கையொப்பம் இட்டுக் கொடுத்த வாடிக்கையாளருக்கு வங்கி விரும்பினால் - அந்த வாடிக்கையாளரின் மீது தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் - கடன் வழங்கும்.

பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு என்ன வட்டி விகிதம் என்பதும் , மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பதும் வங்கி சொல்லும் போதுதான் தெரிகிறது.

பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் கடனுக்கான மாதத் தவணைகளை முறையாகத் திருப்பிச் செலுத்தும் வரை அமைதியாகவே இருக்கின்றன. ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலோ தவணைகள் கட்டத் தவறும் போதுதான் வங்கிகளின் சுயரூபம் வெளிப்பட ஆரம்பிக்கிறது.

தவறிய தவணைத் தொகைக்கு அபராதமாகப் பெரும் தொகையைக் கட்டச் சொல்வது, செயல்பாட்டுக் கட்டணம், தண்டத் தொகை என்றெல்லாம் எதைஎதையோ சொல்லி முடிந்த அளவு பணத்தைக் கறக்க முயல்வது இக்தகைய வங்கிகளின் வாடிக்கை.

வாடிக்கையாளர்களிடம் வாங்கிய காசோலைகளையும், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப் படிவத்தில் வாங்கியுள்ள கையொப்பங்களையும் காட்டி வாடிக்கையாளர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் முயற்சிகளில் இறங்குகின்றன வங்கிகள்.

இப்போதெல்லாம் வங்கிகள் இன்னும் ஒருபடி மேலே போய், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன்களை வசூலிக்கக் குண்டர்களைப் பயன்படுத்தவும் முனைகின்றன. வங்கிகளால் அனுப்பப்படும் ரவுடிகள் செய்யும் அட்டகாசகங்களும் அட்டூழியங்களும் அளவில்லாதவை.

வங்கிகளால் அனுப்பப்படும் இது போன்ற குண்டர்களின் மிரட்டலாலும் - இவர்கள் செய்யும் வன்முறைகளால் அண்டை வீட்டார் முன்னிலையில் ஏற்பட்ட தலைக் குனிவாலும் - இதனால் சமூகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தாலும் - மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குக் கூட வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவதுதான் வேதனையின் உச்சம்.

சும்மா இருக்கும் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களுக்குக் கடன்களைத் தந்து விட்டுப் பின்னர் அவர்களைச் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்கி, அதன் மூலம் தாங்கள் லாபம் சம்பாதிக்க முயலும் இது போன்ற பொறுப்பற்ற வங்கிகளின் செயல்களைத் தட்டிக் கேட்பது எப்படி?

வங்கிகளின் இதுபோன்ற அத்துமீறல்களைக் கண்டித்து உச்சநீதி மன்றமே பலமுறை ஆணைகள் பிறப்பித்த பின்னர் கூட வங்கிகளின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை, வாடிக்கையாளர்களுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை, மக்களாகிய நாமெல்லாம் விழிப்புடனும் சுய கட்டுப்பாட்டுடனும் இருந்து கொள்வதே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகத் தெரிகிறது..................
லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.