Breaking News
recent

டிபாசிட் இழப்பில் பா.ஜ., முதலிடம்.

லக்னோ : உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளுமே டிபாசிட் இழந்துள்ளன. குறிப்பாக, அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சி பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. உ.பி., மே.வங்கம், கேரளா, ராஜஸ்தான், இமாச்சல், அசாம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், உ.பி.,யில் ஒரு லோக்சபா தொகுதிக்கும் கடந்த 7ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.
உ.பி.,யில் பெரோசாபாத் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகர் ராஜ் பப்பாரும், அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவும் போட்டியிட்டனர். ராஜ் பப்பார் 85 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முலாயம் சிங்கின் குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிட்டவர் தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலசாலா, இசவுலி, ஹய்ன்சார் பஜார், ஜான்சி, பத்ரவுனா ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடிக் கட்சி தனது டிபாசிட்டை இழந்தது. சுயேச்சை வேட்பாளர் அஜய் ராய் வெற்றி பெற்ற கொலசாலா தொகுதியில் காங்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பா.ஜ., அனைத்துமே தோல்வியைத் தழுவின என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கின் தாயார் மோகினிதேவி, காங்கிரஸ் சார்பில் பத்ரவுனா தொகுதியில் போட்டியிட்டார். 28 ஆயிரம் ஓட்டுகள் மட்டும் பெற்று டிபாசிட் இழந்தார். இதே போல ஜான்சி, ராரி, எட்டாவா, லலித்பூர் தொகுதிகளிலும் காங்கிரஸ் டிபாசிட்டை இழந்துள்ளது.
பா.ஜ., போட்டியிட்ட தொகுதிகளில் பத்ரவுனா, கொலசாலா, ராரி, எட்டாவா, லலித்பூர், பொவயான், ஹய்ன்சார் பஜார் ஆகிய ஏழு தொகுதிகளில் டிபாசிட் இழந்தது.
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இசவுலி தொகுதியில் அதிகபட்சமாக 59 சதவீத ஓட்டுகளையும், பிற தொகுதிகளில் 21 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடந்த 11 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஆலோசனை: உத்தரபிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி மொத்தம் ஐந்து தொகுதிகளில் டிபாசிட்டை இழந்துள்ளது, அக்கட்சித் தலைமைக்கு கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. "தேர்தல் தோல்வி மக்கள் அளித்த தீர்ப்பு, ஏற்றுக் கொள்கிறோம்' என்று உதட்டளவில் பேட்டி அளித்தாலும், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதை முலாயம் சிங் உணர்ந்துள்ளார்.
இதனால், இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து ஆராய்ந்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு, அக்கட்சியின் பார்லிமென்ட் குழுவின் கூட்டம், லக்னோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் முலாயம்சிங் யாதவ், கட்சியின் மாநிலத் தலைவர் அகிலேஷ் யாதவ், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ், சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் அகமது ஹாசன் ஆகியோரும், பெரோசாபாத், பர்தானா, எட்டாவா தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய கட்சி வேட்பாளர்களும் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் தோல்வியை சரிக்கட்டவும், கட்சியின் இமேஜை வளர்க்கவும் இக்கூட்டத்தில் சில கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி:தினமலர்.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.