லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஏன் பதவி விலக வேண்டும்? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
லிபரான் கமிஷன் அறிக்கையை ஆராயந்தால் அதில் ஜெயலலிதாவும் சிக்கிக் கொள்வார். ஏனெனில் அதன் இறுதியில் ""அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஜாதி, மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தண்டிக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும். இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாட்டின் சகல பகுதிகளிலும் மாநில நடுவர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பின்போது கரசேவையை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆதரித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம் கூடி பொருத்தமான நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதனை அப்போதைய மார்க்கிஸ்ட் பொதுச்செயலாளர் சுர்ஜித் கொண்டு வந்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ""டிசம்பர் 6-ம் தேதி பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சில அமைப்புகள் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள கரசேவை நடைபெறுவதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்'' என்று பேசினார். அவரது பேச்சு 24-11-1992"தினமணி' நாளிதழில் வெளியானது.
""சிறுபான்மையினரைப் போல பெரும்பான்மையினரும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை பிரதிநித்துவப்படுத்துவதாக உள்ளது'' என்று கரசேவையை ஆதரித்து தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்போது லிபரான் கமிஷன் அறிக்கை கசிவு என்று கூறி அந்தப் பழியை ப. சிதம்பரம் மீது போட்டு அவரை பதவி விலகச் சொல்கிறார்.
இதுபோன்ற விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் அரசு வெளியிடுவதற்கு முன்பே எதிர்க்கட்சிகளால் வெளியிடப்படுவதும் உண்டு.
திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை 24-11-1981-ல் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் வெளியிட்டேன்.
அது பற்றி 13-2-1982-ல் சட்டப் பேரவையில் பேசிய நான், அறிக்கை எவ்வாறு வெளியானது என்பது குறித்து ஆராயாமல் அதில் கூறியுள்ளது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றேன். அதற்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நீதிகேட்டு நெடும் பயணம் நடத்தினோம்.
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று சிதம்பரத்தை பதவி விலகச் சொல்கிறார் ஜெயலலிதா. பால் கமிஷன் அறிக்கை வெளியானதற்கு பொறுப்பேற்று அன்றைய முதல்வரோ அல்லது அமைச்சர்களோ பதவி விலகினார்களா? என்பதையும் அவர் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
""சிறுபான்மையினரைப் போல பெரும்பான்மையினரும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை பிரதிநித்துவப்படுத்துவதாக உள்ளது'' என்று கரசேவையை ஆதரித்து தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா.
பதிலளிநீக்கு24-11-1992"தினமணி' நாளிதழில் வெளியானது.