Breaking News
recent

மேலவையில் இடஒதுக்கீடு தேவை

தமிழக அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறோம்.


பொதுவாக மேலவை என்பது அறிவு ஜீவிகள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகசேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள் இடம் பெற்று அரசுக்கு நல்ல ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் ராஜ்யசபாவின் (மாநிலங்கள் அவை) நோக்கமும் அதுதான்.

ஆனால், இதன் நோக்கம் அரசியல்வாதிகளால் திசைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், முதுமை அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், கட்சியின் அதிருப்தியாளர்கள் போன்றவர்களுக்கான நியமன அவையாக தரம் குறைக்கப்பட்டு விட்டது.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 1986&ல் கலைக்கப்பட்ட தமிழக மேலவை மீண்டும் கலைஞர் அரசால் உருவாக்கப்பட போகும் நிலையில் இது தமிழகத்திற்கு பயன் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதே நேரம்; இது அரசுக்கு ஜால்ரா அடிப்பவர்கள், சினிமா துறையினர், வாய்ப்பு கிடைக்காத அரசியல்வாதிகள், கட்சியின் அதிருப்தியாளர்கள் இடம்பெறும் வகையில் போய்விடுமோ என்ற அச்சமும் மேலோங்கி இருக்கிறது. அமையப்போகும் மேலவைக்கு மத்திய அரசின் அங்கீகாரம் தேவை. அநேகமாக, மத்திய அரசும் எதிர்க்காமல் அனுமதி வழங்கிவிடும். எனவே, புதிய அவையில் அறிஞர்கள், ஆற்றல்மிக்க ஏழை அரசியல்வாதிகள், பலதுறை வித்தகர்கள், சமூக சேவகர்கள் இடம் பெறுதல் அவசியம்.

தமிழ்நாடு முன்பு சென்னை மாகாணமாக இருந்தபோது, சென்னை மாகாண சட்டப் பேரவையில் 215 உறுப்பினர்கள் இருந்தார்கள். இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒன்று, ஆங்கிலோ இந்தியர்களுக்கு 2, ஐரோப்பியர்களுக்கு 3, இந்திய கிறிஸ்தவர்கள் 8, தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் 6, நிலச் சுவான்தார்கள் 6, பல்கலைக்கழகம் 1, தொழிலாளர் பிரதிநிதிகள் 6, பெண்கள் 8, முஸ்லிம்களுக்கு 28 என அந்த இடங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. சட்டமன்ற மேலவையிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. சட்ட மேலவையில் அதிகபட்சமாக 56 உறுப்பினர்கள் இருந்தனர். 35 பொது உறுப்பினர்களும், ஏழு முஸ்லிம் உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், 3 இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர்.

இப்போது தமிழக அரசு கொண்டு வரப்போகும் மேலவையில் சிறுபான்மையினருக்கு மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப உரிய அரசியல் இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும். இதில் பல துறைகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு குறைந்தது 7 இடங்கள் கிடைக்கும் வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரப்போகும் மேலவையில் 63 உறுப்பினர்கள் இடம் பெறவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் சமூகநீதி தவிர்க்க முடியாதது. இனியும் சிறுபான்மை மக்கள் அரசியலில் எடுபிடிகளாக இருக்கமாட்டார்கள் என்பதை கலைஞர் அரசு உணர வேண்டும்.
 நன்றி: தமுமுக இணையதளம்  
நிர்வாகி

நிர்வாகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.