தமிழ் நாளிதழ் உலகில் பெரியஅளவுக்கு விற்பனையாகி பரவலான வாசகர்களைக் கொண்டிருக்கக்கூடியவை தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்டவை.
இதில் நடுநிலை நாளேடு எனப்படும் தினமணி வெகு காலமாக பார்ப்பனிய சிந்தனையை மையப்படுத்தி செயல்படும் நாளிதழ் என்ற விமர்சனம் உண்டு. எனினும் உலகமய கால மாற்றத்தில் தினமணி விற்பனையில் சுருங்கி, அது இன்று தள்ளாடித் தளர் நடைபோட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்கும் தினமணி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், படித்த மேட்டுக்குடியினர் நாளிதழ் என்ற அதன் பழைய அடையாளத்தை அநேகமாக இழந்து விட்டது என்று சொல்லலாம். எனவே அந்த நாளிதழின் மூலம் நிகழ்த்தப்படும் அரசியல் செயற்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்கு உட்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும்.
தினகரன் கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம் காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள் தெளிவாக அறிவர். அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்ப அரசியல் சதிராட்டத்தில், தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும் பணியை தினகரன் செய்து வருகிறது. (உ.ம்) கலைஞரை பிராண்ட்டாக பயன்படுத்துவது, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அழகிரி, கனிமொழியை கழற்றி விடுவது. தினகரனைக் கூர்ந்து நோக்குவோர் இதை அறியமுடியும். ஆனால் இது மட்டுமே தினகரன் செய்யும் வேலை என்று நினைத்து விடக் கூடாது. இதனிலும் முக்கியமாக தினகரன் நவீன தாராளமயக் கொள்கையை மிக வலுவாக ஆதரித்து, இடதுசாரி முற்போக்கு சக்திகளை மிக இழிவாகக் காட்டி கீழே தள்ளும் வேலையை நன்கு திட்டமிட்ட முறையில் மிக, மிக கவனமாகச் செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் தினகரனையும் எடுத்துவைத்துப் பேசினால் இதை திட்டவட்டமாக நிரூபிக்க முடியும். இதுதான் நிரந்தர ஆபத்தானது. இதன் வாசகப் பரப்பு தமிழகத்தில் தினத்தந்தி, தினமலருக்கு அடுத்து மூன்றாமிடத்தில் தான் இருக்கிறது. (அதாவது விற்பனை அடிப்படையில் பிரதிகள் சற்று முன்பின் கூடுதலாக இருந்தாலும் வாசகர் வாசிப்பில் மேற்கண்ட இரண்டையும் அடுத்தது தான் தினகரன்.) எனவே ஒப்பீட்டளவில் தினகரனும் வரம்புக்கு உட்பட்டது தான்.
இப்போது தினமலர். இது தினமணி, தினகரனை விட ஆபத்தான நஞ்சேற்றும் காரியத்தைச் செய்து வருகிறது என்பதை பொதுவான முற்போக்கு நோக்கர்கள் அறிவர். தினகரன் செய்யத் தயங்கும் ஒரு விசயத்தை தினமலர் கூசாமல் செய்யும். அதுதான் மதவெறி நஞ்சேற்றுவது. பார்பனியத்தின் அரசியல், சமூக, கலாசாரக் கூறுகளை அதன் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் இடத்தில் தனிமனிதத்துவத்தை நிறுத்துவது, ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பழமையைத் திணிப்பது, உலகமகா யோக்கியனைப் போல் தனக்கு முன்னால் இருக்கும் எல்லா விசயங்களையும் மிக மிகக் கீழ்த்தரமாகத் தாக்குவது, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது என்பதை விட அறிவுரை சொல்லும் தொனியில் வெளிப்படுத்துவது என அதன் ஒவ்வொரு அம்சமும், பாங்கும் வர்ணாஸ்ரமத்தின் நவீன வெளிப்பாடு தான்.
எனவே இடதுசாரி, திராவிட இயக்கங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட எதிர்க் கருத்தாளன் தினமலர் என்று சொல்ல முடியும். கண்ணுக்குத் தெரிந்த எதிரி என்பதால் இதை நாம் அறிந்து வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது. அதேசமயம் அரசியலை புரிந்து கொண்ட அல்லது அறிந்து கொண்ட வாசகர் பரப்பு மிக மிகக் குறைவு எனும்போது அதற்கு அப்பால் அது சென்றடையும் வாசகர்கள் (பெரும்பாலும் கீழ் மத்திய தர வர்க்கத்தார்) எத்தகைய தாக்கத்துக்கு இரையாக்கப்படுகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்போது நாம் பேசப் போவது தினத்தந்தி பற்றி. தமிழ் நாட்டில் நாளிதழ் வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி படித்துத் தான் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று திரைப்பட நடிகைகள் சொல்வதைப் பலர் படித்திருப்போம். பொதுவாக தினத்தந்தியை ஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டு. ஆட்சியாளர்களை ஆதரித்தால் அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைப் பெறலாம் என்பது தான் இதற்கு பின்னணி என்பர். இந்த இதழ் நிகழ்த்தும் அரசியல் மிக மிக நுட்பமானது.
ஆளும்கட்சி பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும் முன்பெல்லாம் இவர்கள் செய்வது முன்னுரிமையை மாற்றிக் கொள்வது தான். அதாவது ஆளும்கட்சி செய்திகளை முதல் பக்கத்தில் அல்லது வாசகர்களின் பார்வைக்கு எளிதில் படும் வண்ணம் இடம் பெறச் செய்து, எதிர்க்கட்சிகள் செய்திகளை ஏதோ ஒரு மூலையில் போட்டிருப்பார்கள். எதிர்க்கட்சி செய்திகளை பின்னுக்குத் தள்ளுவார்களே அல்லாது போடாமல் விட்டுவிடமாட்டார்கள். ஆனால் தற்போது தினத்தந்தியின் இந்த செயல்பாட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
எந்தச் செய்தி எந்தப் பக்கத்தில் வர வேண்டும், எந்தப் படம் இடம் பெற வேண்டும், எது வரக்கூடாது என்பது உள்பட தமிழக முதல்வரின் கடைக்கண் பார்வைக்கேற்பத் தான் தினத்தந்தி வெளிவருகிறது. இது போகிற போக்கில் சேற்றை வாரிவீசும் குற்றச்சாட்டு அல்ல. தமிழகத்தின் சற்றேரக்குறைய ஒரு கோடி வாசகர்களை - அதுவும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தமிழர்களைச் - சென்றடையும் நாளிதழ் என்பதால் கூர்ந்து கவனித்து, தொடர்ந்து படித்து வருவதால் இந்த மதிப்பீட்டை முன்வைக்கிறேன்.
அதற்கு ஒரேயொரு நிரூபணம் இன்றைய (நவம்பர் 27) தினத்தந்தி நாளிதழ். நீராராடியா தொலைபேசி உரையாடல் பதிவு பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அது திமுகவை அப்பட்டமாக அம்பலப்படுத்துவதாக உள்ளது. இந்த செய்தி தினத்தந்தியில் இடம் பெறவேயில்லை. அதாவது சற்றேரக்குறைய ஒரு கோடிப் பேரிடம் இந்த தகவல் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுகவை யாரும் வீழ்த்த முடியாது என்ற கருணாநிதியின் செய்தி வாசகர் கவனத்தை ஈர்க்கும் இடத்தில் உள்ளது.
திமுக எதிர்ப்புணர்வு அல்லது அதிமுக ஆதரவு உணர்வு என்ற அடிப்படையில் இதைச் சொல்லவில்லை. இங்கு வலியுறுத்திக் கூற விரும்புவதெல்லாம், நான்கு முன்னணி நாளிதழ்களில் தினத்தந்தி நிகழ்த்தும் இத்தகைய அரசியல் செயல்பாடு தான் மிகுந்த விளைவை ஏற்படுத்தக்கூடியது என்பதுதான்.
நன்றி:மாற்று
நல்ல பகிர்வு,
பதிலளிநீக்குஅரசியல்தனம் பத்திரிக்கைதுறையில் ரொம்ப அதிக என்பதை போட்டு உடைத்துள்ளது இந்த விமர்சனம்.
தேடிப்பிடித்து வெளியிட்ட அதிரை போஸ்ட்டுக்கு மிக்க நன்றி.
Good post. I never liked Dinamalar and Dinamani, in fact I hated Dinamani for their font and excessive use of sanskrit words. My father was ADMK and uncle was DMK.. so always read only two of them.
பதிலளிநீக்குnalla arumayaana aayvu.
பதிலளிநீக்குvaazhthukkal
unmai
பதிலளிநீக்குசெய்திகள் மிகவும் அருமை இது போன்ற செய்திகளை வலைத்தமிழ் என்ற இணையதளத்திலும் நான் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கும் பயன்படும் என்று நம்புகின்றேன் http://www.valaitamil.com/news-category154.html
பதிலளிநீக்கு