Breaking News
recent

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்! ஏ.ஸி. அகார் முஹம்மத்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். 'இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்;கின்றது. ஒன்று இலட்சிய வாழ்வு, அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு என்றால் என்ன என்பதை கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இலட்சிய வாழ்வு ஒரு விளக்கம்

எப்படியும் வாழலாகாது இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று வாழுகின்ற, வாழ விரும்புகின்ற மனிதனை நாம் இலட்சிய வாதி என்றழைப்போம். அவரது வாழ்வு இலட்சிய வாழ்வாக மதிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் உலகம், வாழ்வு, மனிதன் பற்றிய தெளிவான பார்வையைப் பெற்று அந்த அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட மனிதனே இலட்சிய வாதி; அவன் வாழும் வாழ்வே இலட்சிய வாழ்க்கை.
உலகில் வாழும் மனிதர்களை மூவகையினராக பிரித்து நோக்கலாம். ஒருசாரார் உண்பதற்காகவும், குடிப்பதற்காகவும், சிற்றின்பங்களை அனுபவிப்பதற்காகவும் வாழ்வார்கள். இவர்கள் அறிவீனர்கள். மற்றொரு சாரார் வாழ்வதற்காக உண்பவர்கள், குடிப்பவர்கள். இவர்கள் புத்திசாலிகள். ஆயினும் இவர்களும் நாம் எதற்காக வாழ்கிறோம் என்பதனை சரியாக புரிந்து கொண்டவர்கள் அல்ல. இன்னுமொரு சாரார் இருக்கின்றனர் அவர்களோ வாழ்வதற்காக உண்பவர்கள், குடிப்பவர்கள் மட்டுமல்லர் ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதனையும் அறிந்து அந்த அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். இவர்களே இலட்சிய வாதிகள்;; தமது வாழ்கையை அர்த்தமுள்ள வாழ்வாக, இலட்சிய வாழ்வாக அமைத்துக் கொண்டவர்கள். பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் பற்றிய தெளிவுள்ளவர்களே இப்படி இலட்சிய வாதிகளாக, இலட்சிய வாழ்வு வாழ்பவர்களாக இருப்பார்கள். இந்த தெளிவில்லாதவர்கள் பெரும் குழப்பத்தில் தான் இருப்பரர்கள். இவர்கள் இலட்சிய வாதிகளாக, பிறரை இலட்சிய வாழ்வுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
புலம் பெயர் இலக்கியம் படைத்த அறபு கிறிஸ்தவ கவிஞரான ஈலியா அபூமாளியின் புலம்பலைக் கேளுங்கள். அவருடைய ஒரு கவிதை, அதன் தலைப்பு لستُ أدري'.' 'எனக்குத் தெரியாது' என்பதாகும். இந்தக் கவிதை வரிகளுக்கு இங்கே நான் தமிழ் வடிவம் தருகின்றேன்.
'எனக்குத் தெரியாது
நான் வந்தேன்
எங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது
ஆனாலும் வந்தேன.;

என் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன்
அதில் நடக்கலானேன்
நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்
நான் நடந்து கொண்டே இருப்பேன்.

எப்படி வந்தேன்?
எனது பாதையை எப்படி கண்டேன்?
எனக்குத் தெரியாது.
இந்த உலகின் நான் புதியவனா?

அல்லது,
பழையவனா?
நான் சுதந்திரமானவனா? அல்லது விளங்குகள் இடப்பட்ட கைதியா?
எனது வாழ்வில் என்னை நான் ஓட்டுகிறேனா?
அல்லது நான் ஓட்டப்படுகின்றேனா?
இவற்றையெல்லாம் தெரிய வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்
ஆனால் இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனது பாதை
இது நீளமானதா? அல்லது குறுகியதா?
இதில் நான் ஏறுகின்றேனா?
அல்லது இறங்குகின்றேனா?
அல்லது சுழிவாங்கப்படுகின்றேனா?
நான் பாதையில் செல்கிறேனா?
அல்லது நானும் பாதையும் நிற்க
காலம் தான் ஓடுகிறதா?
எனக்குத் தெரியாது.
நான் ஒரு மனிதனாக மாறுவதற்கு முன்னால்
எதுவாகவும் இருக்கவில்லையா?

அல்லது, ஏதாவது ஒன்றாக இருந்தேனா?
இந்த புதிருக்கு பதிலுண்டா?
அல்லது இது என்றும் புதிராகவே இருக்குமா?
எனக்குத் தெரியாது.
ஏன் எனக்குத் தெரியாது?
அதுவும் எனக்குத் தெரியாது.'

இவ்வாறு நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், நான் எங்கு செல்வேன், நான் இங்கு என்ன செய்ய வேண்டும் என்ற மனித வாழ்க்கையோடு தொடர்பான அடிப்படையான வினாக்களுக்கு விடை தெரியாமல் தடுமாறும் எத்தனையோ அறிஞர்களை, கலைஞர்களை, கவிஞர்களை, இலக்கிய வாதிகளைப் பார்க்கிறோம். இத்தகையவர்கள் இலட்சிய வாதிகளாகவோ, இலட்சிய வாழ்வு வாழ பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
இலக்கியமும் இலட்சியமும்
இனி கருப்பொருளின் இரண்டாவது சொற்றொடரை அவதானிப்போம், 'இஸ்லாமிய இலக்கியம்' என்பதே அச்சொற்றொடராகும். பொதுவாக இலக்கியம் என்பது கலை அழகுடன் அழகுணர்ச்சி ததும்ப எழுதியவற்றைக் குறிக்கும் என்பார்கள். இந்த வகையில் இஸ்லாமிய இலக்கியம் என்பது இஸ்லாமிய வரையறைகளையும், நெறிமுறைகளையும் பேணி அது சொல்லும் ஆன்மீக, தார்மீக, ஒழுக்க, பண்பாட்டு விழுமியங்களைக் கவனத்தில் கொண்டு உலகம், வாழ்வு, மனிதன் பற்றிய இஸ்லாமிய நோக்கை கலை உணர்ச்சி ததும்ப, தாக்கம் மிக்க வகையில் எழுதப்பற்றவற்றைக் குறிக்கும் என்று சொல்லலாம்;. இப்போது இலட்சிய வாழ்வுக்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன என்பதைக் கவனிப்போம், ஆரம்பமாக இலக்கியத்திற்கும், இலட்சியத்திற்கும் இடையிலான இறுக்கமான தொடர்பு புரியப்படல் வேண்டும்.
மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமாக வாழ்வதற்கும் துணை புரிவதே இலக்கியம் ஆகும். இலக்கியம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்குகின்றது. இலக்கை காட்டுவது இலக்கியம். மனிதர்கள் எந்த இலக்கை நோக்கி எத்திசையில் போக வேண்டும் என்பதைக் காட்டுவது இலக்கியம். இலக்கியம் என்பது இலட்சியம் என்று கூறுவார்கள் சிலர். இலக்கியம் என்ற சொல்லை இலக்கு  இயம் என்று பிரிக்கலாம் என்றும் சொல்வார்கள். சுருங்கக் கூறின் வாழ்வின் இலட்சியத்தைக் காட்டுவது இலக்கியம் என்று பொதுப்படையாகக் கூறலாம்.
இலட்சியங்கள் இல்லாத ஆக்கங்கள் இலக்கியங்கள் ஆகாது. அவ்விலட்சியங்களும் உயர்ந்தவையாக, சிறந்தவையாக இருக்க வேண்டும்; மனித வாழ்வை வளப்படுத்தக்கூடியதாய் அமைந்திருத்தல் வேண்டும். எவ்வளவு இனிய செற்றொடர்களைக் கொண்டிருந்தாலும் நல்ல குறிக்கோள்களை கொண்டிராத ஆக்கங்கள் உயர் இலக்கியப் படைப்புக்களாக கருதப்படுவதில்லை. இது பற்றி அல்லாமா இக்பாலின் பின்வரும் கருத்துக்கள் சிந்தனைக்குரியவையாகும்.

'இலட்சிய மற்ற கவிதை உயிரற்றது. அதன் வேகம் அணையும் நெருப்பை ஒத்தது. சிறந்த கலைஞன் இயற்கையைப் பயன்படுத்தி தன் இலட்சியத்தை வெளியிடுகிறான்; புது உலகை படைக்கின்றான்; நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுகின்றான்.'

'பொருளின் யதார்த்த நிலையை உணராத கலை கலையன்று. நித்திய வாழ்வு பெறுவதே அனைத்து கலைகளினதும் இறுதி இலட்சியமாகும். மூஸாவின் அற்புத ஊன்று கோளின் சக்தியற்ற கலை பயனற்ற கலையாகும். கலையின் இலட்சியம் மனிதனின் ஆளுமையைக் கட்டியெழுப்புவதாகும். வாழ்வினை அழகு படுத்தாத, அதற்கு இலட்சியம் ஒன்றினை வழங்காத கலை கலையன்று.'
இலக்கியத்திற்கும் இலட்சிய வாழ்விற்கும் இடையிலான தொடர்பை டாக்டர். இலக்குவனார் கீழ்வருமாறு அருமையாக விளக்குகிறார்.
'இலக்கியத்தின் பொருள் வாழ்வு
வாழ்வின் பொருள் இலக்கியம்.
குறிக்கோளை இயம்புதல் இலக்கியமாகும்.
வாழ்வின் ஓவியம் இலக்கியமாகும்.

'கலை கலைக்காக'  (Art for art’s sack) எனும் கொள்கை பொருத்தமானதல்ல. பொழுது போக்கிற்காகவும், மக்கள் படித்து சுவைப்பதற்காகவுமே இலக்கியம் படைக்கப்பட வேண்டும்; இலக்கியம் என்பது சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும்; அது எத்தகைய ஆபாசங்களாக இருந்தாலும் சரி; ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி; உள்ளதை உள்ளவாறு எடுத்துச் சொல்வதே இலக்கியம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் ஆபாசத்திற்கும் அசிங்கத்திற்கும் யதார்த்த இலக்கியம் என்று பெயரும் சூட்டிக்கொள்கிறார்கள். ஒரு கவிஞனுடைய, எழுத்தாளனுடைய கடமை மூடி மறைப்பதல்ல் யதார்த்தமாக உள்ளதை உள்ளவாறு அப்படியே பிரதிபலிப்பதாகும் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். இலக்கியத்தில் உருவம் தான் முக்கியம், உள்ளடக்கம் அல்ல என்பதும் இவர்களது வாதமாகும். உண்மையில் இத்தகையவர்களது எழுத்துக்கள் இலட்சிய வாழ்விற்கு வழியமைப்பதற்குப் பகரமாக மனித சமூகத்தை குட்டிச்சுவராக்குபவையாகவே இருக்கும். அல்லாமா இக்பாலுடைய ஒரு கருத்து இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
'ஒரு ஒழுக்கங்கெட்ட இலக்கியவாதியினால் சமூகத்திற்கு ஏற்படுகின்ற பேரழிவு ஜென்கிஸ்கானின் இராணுவத்தால் ஏற்பட்ட பேரழிவைவிடப் பயங்கரமானதாகும்.'
காலத்தால் அழியாத, உலகம் போற்றும் இலக்கியங்கள் எல்லாம் மனித வாழ்விற்கு வழிகாட்டிய இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்களில் சிறப்புற்று விளங்கும் புறநாநூற்றை எடுத்துக்கொள்வேம். அதன் பாடல்களிலே அரசியல் முறைகளும், அரசியல் நீதிகளும் சொல்லப்படுகின்றன் மக்கள் வாழ வழிகாட்டும் அறிவுறைகள் சொல்லப்படுகின்றன. மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு இன்பமாக வாழ்வதற்கு வழிகூறும் பாடல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் கூறும் அறங்கள் அனைத்தும் மக்கள் வாழ்விற்கு வழிகாட்டுபவையாகும். மனித வாழ்விற்குத்தேவையான அரிய கருத்துக்களை அள்ளி அள்ளி தருவதனால் தான் திருக்கறள் உலகம் போற்றும் இலக்கியமாக கருதப்படுகிறது. சிலப்பதிகாரமும் உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் ஓர் இலக்கியப்படைப்பாகும். அரசியலில் தவறு செய்த ஆட்சியாளர்கள் தப்பிக் கொள்ள முடியாது முதலான உயர்ந்த கருத்துக்களை அது சொல்கின்றது.

உலகில் வாழும் மக்கள் பட்டினி கிடத்தல் கூடாது; எல்லா மக்களும் உணவுண்டு இன்புற்று வாழ வேண்டும். அறங்களிலே சிறந்தது பசியால் வாடுவோருக்கு உணவளித்துப் பாதுகாப்பதுதான். இக்கொள்கையை வலியுறுத்துகிறது மணிமேகலை. கம்பராமாயாணத்தின் மூலக்கொள்கை 'அறம் வெல்லும்; பாவம் தோல்வி காணும்' என்பதாகும்.

மேலே நான் உதாரணங்களாக குறிப்பிட்ட இலக்கியங்கள் சமண மத, புத்த மத, இந்து மத இலக்கியங்களாகும். இவற்றில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கருத்துக்களோடு எமக்கு முழுமையான  உடன்பாடு இல்லாதபோதும் இவை பல பொதுவான மனித விழுமியங்களைச் சுமந்திருக்கின்றன.

இலக்கைக் காட்டுவதே இலக்கியம்.  குறிக்கோளைக் கொண்டிராத எழுத்துக்கள் இலக்கியங்கள் ஆகா. குறிக்கோள்களும் நல்ல குறிக்கோள்களாக இருக்க வேண்டும்; மக்களுடைய வாழ்க்;கைக்கு துணைசெய்யக் கூடியனவாக இருக்க வேண்டும். இனி இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம் வழிகாட்டும் பாங்கினை சற்று கலந்துரையாடுவோம்.

இலக்கியம் என்பது இலட்சியத்தோடு படைக்கப்பட வேண்டும் எனும் கருத்தை இஸ்லாம் அதிகம் வழியுறுத்துகிறது. அல் - குர்ஆன் கவிஞர்கள் என்ற தலைப்பிலான அத்தியாயத்திலே இலட்சியமற்ற கவிஞர்களை, எவ்வித நோக்கமும் இல்லாமல் வெறும் சொற்களை வைத்து விளையாடுகின்ற கவிஞர்களைக் கண்டிக்கிறது.

'  ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون'

'நபியே ! இந்தக் கவிஞர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டுத் தடுமாறித் திரிவதை நீக்கள் பார்க்கவில்லையா ?. மேலும் அவர்கள் தாம் செய்யாததையே சொல்கின்றனர்' -)26:225 – 226)
எனவே இலக்கியம் என்பது இலட்சியத்தோடு கூடியதாகவும், பயனுடையதாகவும் இருக்கவேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இம்ரஉல் கைஸ் என்றொரு கவிஞன் இருந்தான். இவன் இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன். அழகிய அறபு நடையில் சிறப்பான கவிதைகளைப புனைந்தவன். ஆனால், அவனது கவிதைகளிலே ஆபாசமும், விரசமும் கொட்டிக் கிடக்கும். இதனால் தான் இம்ரஉல் கைஸ்ப் பற்றி உமர் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
'அவன் கவிஞர்களின் கவிஞன்;;. ஆனால் மக்களை நரகத்திற்கு அழைத்துச்சென்ற தலைவன்.

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்

தூய இஸ்லாமிய இலக்கியமே இலட்சிய வாழ்விற்கு துணை புரிய வல்லது. ஒரு முஸ்லிமின் படைப்பு என்ற ஒரே காரணத்தினால் ஓர் இலக்கியம் இஸ்லாமிய இலக்கியமாகாது. அதாவது முஸ்லிம் இலக்கியங்கள் எல்லாம் இஸ்லாமிய இலக்கியங்களாக அமையும் என்பதில்லை, வரலாறு நெடுகிலும் முஸ்லிம் பேர்தாங்கிகள் படைத்த எத்தனையோ இலக்கியங்ககள் ஜாஹிலிய்ய எழுத்துக்களாக இருப்பதைக் காணலாம். சல்மான் ருஸ்தி, தஸ்லீமா நஸ்ரின் போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். உலகப் புகழ்பெற்ற அறபு இலக்கிய மேதைகளான நஜீப் மஹ்பூள், தாஹா ஹுஸைன் போன்றோரின் எழுத்துக்களில் பெரும் பகுதி இஸ்லாமிய இலக்கியமாகக் கொள்ளத் தக்கவையல்ல.
இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி நிலவும் ஒரு பிழையான அபிப்ராயத்தை இங்கு சுட்டிக்காட்டி உண்மை நிலையை விளக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.இஸ்லாமிய இலக்கியம் என்றால் அது இஸ்லாம் மார்க்கம் பற்றியும், அதன் நம்பிக்கைகள், கிரிகைகள், வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் முதலானவை பற்றியும் முஸ்லிம் ஆளுமைகள், வரலாற்றுப் புருஷர்கள் போன்றோர் பற்றியும் மாத்திரமே பேசும் என சிலர் நினைக்கின்றனர். இது உண்மையல்ல. நாம் ஏலவே குறிப்பிட்டது போல உலகம், வாழ்வு, மனிதன் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நின்று உலகம், வாழ்வு, மனிதன் பற்றி கலையழகுடன் அழகுணர்ச்சி ததும்ப எழுதப்பட்ட எல்லா ஆக்கங்களும் இஸ்லாமிய இலக்கியங்கள் என்ற வட்டத்திற்குள் வரும்.
எனவே ஒரு இஸ்லாமிய இலக்கியவாதி ஆடும் மயிலையும், குதிக்கும் மானையும், வீழும் அருவியையும் பற்றிப் பேசுவார்; காலைக்காட்சியையும், மாலை மாட்சியையும் பற்றிப் பாடுவார். அவர் தான் படைக்கும் இலக்கியத்திலே இயற்கையைப் படம் பிடித்துக் காட்டுவார்; காலத்தின் கோலத்தைப் பற்றி, மனித வாழ்வின் போராட்டங்களைப் பற்றி, அவர் பேசுவார்; ஒரு வரலாற்று நாயகனை வைத்த ஒரு நாவலைப் படைப்பார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசும் அவருடைய ஆக்கங்கள் இஸ்லாமிய இலக்கியம் என்ற வட்டத்துக்குள் வைத்து நோக்க முடியுமானவையாகும். ஒரேயொரு நிபந்தனை மாத்திரம் பேணப்பட வேண்டும் அவரிடம் சீரிய இஸ்லாமிய நோக்கு இருத்தல் வேண்டும். அவரது கருத்துக்களும் எழுத்துக்களும் அந்நோக்கினடியாய் பிறந்திருக்க வேண்டும்.
மறுபக்கத்தில் ஒரு படைப்பாளி நபியைப் பற்றி அல்லது நபியுடைய ஒரு போராட்டத்தைப் பற்றி அல்லது ஓர் அடிப்படை மார்க்க நம்பிக்கையைப் பற்றிப் பேசுவார். ஆனால் அவரிடம் மேற்குறிப்பிட்ட இஸ்லாமிய பார்வையும் கண்ணோட்டமும் இல்லாத போது அவரது படைப்பு ஓர் இஸ்லாமிய இலக்கியமாக கொள்ளப்பட மாட்டாது.
இஸ்லாமிய இலக்கியம் தொடர்பாகப் பேசும் போது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய மற்றுமொரு உண்மை யாதெனில் இஸ்லாமிய இலக்கியத்தின் மூலாதாரமாக, ஊற்றுக் கண்ணாக, வழிகாட்டியாக இருப்பது உயர் தெய்வீக இலக்கியமான புனித அல் - குர்ஆன் ஆகும். அல் - குர்ஆன் ஒரு பக்கத்தில் பிரபஞ்சம், மனிதன், வாழ்வு பற்றி சரியானதும் முழுமையானதுமான கண்ணோட்டத்தை முன்வைத்து மனித சமூகத்தின் இலட்சிய வாழ்விற்கு வழிகாட்டுகிறது. மறுபக்கத்தில் அது தனது இலட்சிய வழிகாட்டலை கலையழகுடன் அழகுணர்ச்சித் ததும்ப அற்புதமாக முன்வைக்கின்றது. உண்மையில் இலட்சிய வாழ்விற்கு இலக்கியம் எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதற்கு அல் - குர்ஆனே போதுமான சான்றாதாரமாகும்.
மொழி ஆர்வலர்களாகவும், இலக்கியப் பிரியர்களாகவும் இருந்த மனிதர்கள் வாழ்ந்த ஒரு சமூகத்தில் தான் அல் - குர்ஆன் ஆரம்பமாக  இறக்கியருளப்பட்டது. அல் - குர்ஆனின் அற்புத வசனங்களை செவியுற்ற அந்த மக்கள் மெய்மறந்தார்கள்;. அல் - குர்ஆனுடைய வசனங்களை செவிமடுத்த குறைஷிக் கவிஞன் அல் வலீத் இப்னுல் அல் - முகீரா உணர்ச்சித் ததும்பக் கூறிய வசனங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவையாகும்.

والله إن له لحلاوة وإن عليه لطلاوة وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق وإنه ليعلو ولا يعلى عليه
செழிக்க முளைத்த மரமது மேற்பாகம்
சுவைக்க இனிக்கும் கனியது கீழ்ப்;பாகம்
செவிக்குத் தெவிட்டாத தேனது  என்றும்
விழிப்பாவைக்கு விருந்தாகும் இன்பம்
விஞ்சாததை எதுவும் என்றும்'

அல்- குர்ஆனின் சொக்க வைக்கும் சொல் அலங்காரத்தையும், இலக்கிய நயத்தையும் வியந்த மற்றொரு ஜாஹிலிய்யக் கால கவிஞனே உத்பா இப்னு ரபீஆ ஆவான். நபியர்களிடம் இருந்து சில அல்-குர்ஆன் வசனங்களைக் கேட்ட அவன் தன் சமூகத்தாரிடம் வந்து, முஹம்மத் ஓதுகின்ற சில வசனங்களை நான் செவிமடுத்தேன். அவை கவிதையும் அல்ல மந்திரமும் அலல சூனியமும் அல்ல அனைத்திலும் வேறுபட்டவை எனக் கூறினான்.
அல் - குர்ஆன் அழகுணர்ச்சிக்குக் கொடுக்கும் அழுத்தத்திற்கு ' தேன்' என்ற அத்தியாயத்தில் 'வரும்' ஐந்தாம் ஆறாம் வசனங்கள் சிறந்த சான்றுகளாகும்.

والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ، ولكم فيها جمال حين تريحون وحين تسرحون ﴾ سورة النحل – 5-6
'மேலும் கால்நடைகளை உங்களுக்காக அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்கு குளிரைத் தடுக்க கூடிய மிதமான சூடு – கதகதப்புண்டு; வேறு பயன்களும் உங்களுக்கு உண்டு. மேலும், அவற்றில் இருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். நீங்கள் அவற்றை மாலையில் ஓட்டி வரும் பொழுதும் - மேய்ச்சலுக்காக- காலையில் ஓட்டிச் செல்லும் பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழகும் இருக்கிறது.
அல் - குர்ஆன் அழகு, அலங்காரம், கவர்ச்சி, ஈர்ப்பு முதலான கருத்துக்களை தரும் 'ஜமால்', 'ஸீனா', 'ஹஸன்' 'அஹ்ஸன்' போன்ற கருத்தாழமிக்க சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறது.
'அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான்' என்ற நபி மொழி இறைவனின் இயற்பண்பாகவிருக்கும் அழகுணர்ச்சியை எடுத்துச் சொல்கிறது. அல்லாஹ்வின் அழகுணர்ச்சிக்கு மிகப் பெரிய சான்றாக அவன் இறக்கியருளிய வேதம் அல் - குர்ஆனின் வசனங்கள் காணப்படுகின்றன.

தூண்களில்லாமல் உயர்த்தப்பட்ட வானம், விரிக்கப்பட்ட பூமி, நடப்பட்ட மலைகள், வானத்தை அலங்கரிக்கும் விளக்குகளை ஒத்த நட்சத்திரங்கள், புழுதியைக் கிளப்பி தீப்பொறியைப் பறக்கச்செய்து ஓடும் குதிரைகள், பறிப்பவர்களுக்கு வளைந்து அருகில் தொங்கும் பேரீட்சப் பழக்குலைகள், பார்வைக்கு ஒன்று போலும், ரசனையில் வௌ;வேராகவுமுள்ள 'ஒலிவும் மாதுளையும், வெள்ளையும் சிவப்புமான மலைகள், சுத்தக் கறுப்பு நிறமுடைய மலைகள், நிறங்கள் மாறுபட்ட கால் நடைகள். இவை அல் - குர்ஆன் குறிப்பிடும் சில இயற்கைக் காட்சிகளாகும்.
அல் -குர்ஆனி அழகுணர்ச்சியைத் தூண்டும் சுவனலோகத்துக் காட்சிகளையும் அற்புதமாகப் பேசுகின்றது. சிப்பிக்குள் மறைக்கப்பட்ட முத்துக்களை ஒத்த சமவயதுடைய கன்னிப் பெண்கள், பானங்கள் நிறைந்த கிண்ணங்கள், குவளைகள், முள்ளற்ற இலந்தை மரம், குலைகள் தொங்கும் வாழை மரம், நீண்ட நிழல், ஓடிக் கொண்டிருக்கும் சுனைகள், உயர்ந்த ஆசனங்கள், வரிசையாக வைக்கப்ட்ட தலையணைகள், விரிக்கப்பட்ட கம்பளங்கள். இவை அல் குர்ஆன் சொல்லும் சுவனலோகத்தின் சில காட்சிகளாகும்.
அல் -குர்ஆனின் இலக்கிய நயத்தைப் பற்றி பேசும் போது அதன் வசனங்களில் இழையோடியிருக்கும் சங்கீத ஒழுங்கையும், ஓசை நயத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அல் -குர்ஆனின் வசனங்களை ஈடுபாட்டுடன் ஓதும் ஒருவர் அல்லது கவனமாக செவிமடுக்கும் ஒருவர் அதன் சங்கீத ஒழுங்கை உணர்வார் ஓசை நயத்தை அனுபவிப்பார்.
அல் -குர்ஆனின் இலக்கிய இன்பத்தை யதார்த்த பூர்வமாக அனுபவிக்க விரும்பினால் அறபு மொழியின் தேவை இன்றியமையாததாகும். அல் - குர்ஆனின் மொழிபெயர்ப்புக்கள் அதன் மேலோட்டமான கருத்துக்களை விளங்கத்துணை புரிந்தாலும் அதன் இலக்கிய நயத்தை விளங்கிக் கொள்ள அவை துணை புரிய மாட்டாது.
அல் குர்ஆன் கூறும் கதைகள், உரையாடல்கள், உதாரணங்கள், உவமைகள், உருவகங்கள், சிலேடைகள், குறியீடுகள் முதலானவற்றைப் படிக்கின்ற போது இந்த இறை இலக்கியத்தின் அற்புதத்தை கண்குளிர, கல்புக் குளிர ரசிக்கலாம். அல்-குர் ஆனுடைய அற்புதம் அடிப்படையில் அதன் மொழிநடையிலும், மொழி வளத்திலும் தான் இருக்கிறது என்ற உண்மையை இங்கு ஈன்று குறிப்பிட்டாக வேண்டும்.
அல் -குர்ஆனின் அற்புதமான மொழி வளம் பற்றியும், மொழி நயம் பற்றியும் பேசுகின்ற பல நூறு நூல்களில் எகிப்து மண் ஈன்றெடுத்த இஸ்லாமிய இலக்கியவாதி ஷஹீத் ஸையித் குத்ப் அவர்களின் இரண்டு நூற்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

1-    التصوير الفني في القرآن (அத்தஸ்வீரு அல் பன்னீயு பில் குர்ஆன்)
2-    مشاهد القيامة (மஷாஹிதுல் கியாமா)

இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய உண்மை யாதெனில் அல் குர் ஆன் மொழியை, இலக்கியத்தை வெறுமனே படித்துச் சுவைப்பதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை, அவற்றுக்கூடாக உலகம், வாழ்வு, மனிதன் தொடர்பான உண்மைகளை எடுத்துச் சொல்லி இலட்சிய வாழ்வுக்கு வழி சொல்லிக் கொடுக்கவும் அது விரும்புகிறது. அல்குர்ஆனில் சொல்லப்பட்ட இயற்கைக் காட்சிகள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகவும், அருட்;கொடைகளாகவும் முன்வைக்கப்படுகின்றன. மறுமை தொடர்பான காட்சிகள், சுவனலோகத்தின் இன்பங்களை எடுத்துச் சொல்கின்றன. எனவே இஸ்லாமிய இலக்கியம் படைக்க விரும்பும் ஒருவர் அல் குர்ஆனைப் படிப்பது இன்றிமையாத தேவையாகும் என்ற கருத்தை இங்கு வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.  
அல்- குர்ஆனைப் போலவே சுன்னா என்றழைக்கப்படும் நபிவழியும் மிக உயர்ந்த முன்மாதிரியான இலக்கியமாகும். மனித சமூகத்திற்கு வழிகாட்ட வந்த நபியர்கள் தன் போதனைகளை அழகுணர்ச்சியோடு கூடியதாக அமைத்துக் கொண்டார்கள் என்ற உண்மையை நபிமொழிகளைப் பார்க்கின்ற போது உணரலாம். நபியவர்கள் செய்த பிரார்த்தனைகளே ஓர் உயர்ந்த இலக்கியமாக கருதப்பகின்றன. ஷேய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி எழுதிய 'فن الذكر والدعاء' 'பிரார்த்தனை இலக்கியம்'  என்ற நூல் நபியவர்களின் ஒவ்வொரு பிரார்த்தனையிலும் பொதிந்திருக்கும் இலக்கிய நயத்தை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. இந்த வகையில் ஒரு இஸ்லாமிய இலக்கியவாதி நபிமொழிகளையும் ஆழமாக கற்க வேண்டும்.

மேலும், இஸ்லாமிய இலக்கியவாதி இஸ்லாமிய உலகில் தோன்றிய இலட்சிய இஸ்லாமிய இலக்கியவாதிகளின் எழுத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும். இந்திய உபகண்டத்தில் உதித்த மிர்ஸா காலிப், அக்பர் அலகாபாதி, இக்பால் போன்றோரின் படைப்புக்களைப் பார்க்க வேண்டும.;; இஸ்லாமிய உலகம் தந்த ஜலாலுத்தீன் ரூமி, உமர் அல் அமீரி, அஹ்மத் ஷெளகி, நஜீப் அல் கைலானி போன்றோரின் இலக்கியங்களைப் படிக்க வேண்டும். இத்தகைய தூய இஸ்லாமிய இலட்சிய இலக்கியவாதிகளின் எழுத்துக்களைப் பார்க்கும் ஒருவர் மற்றுமோர் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். இஸ்லாமிய இலக்கிய வாதி தேசம், இனம், வர்க்கம் என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி மனித இன ஒருமைப் பாட்டில் நம்பிக்கை கொண்டவராக இருப்பார் என்ற உண்மையே அதுவாகும்.

அல்லாமா இக்பால் ஒரு மானுடக் கவி;. அவரையோர்  இஸ்லாமியக் கவிஞராகப் பார்ப்பது குறுகிய பார்வையாகும் என்று சொல்பவர்கள்; இருக்கிறார்கள். ஆனால் இக்பாலோ ஒரு தூய இஸ்லாமிய இலட்சியக் ;கவிஞர் என்பதே உண்மையாகும்.  இக்பாலின் சிந்தனைகளின் மூல ஊற்றாக குர்ஆனும்இ சுன்னாவும் இஸ்லாமிய பாரம்பரியமுமே விளங்கியது. அதன் காரணத்தினால் தான் அவர் மானுடக் கவிஞராக விளங்கினார். இக்பாலின் சர்வதேசப் பார்வையும் மானுட நோக்கும் இஸ்லாமிய கோட்பாட்டின் அடியாகப் பிறந்தது என்பதற்கு பின்வரும் கவிதையடிகள் சாட்சி சொல்கின்றன.
'முஹம்மதின் கோட்பாடு தேசம், இனம் என்ற தடைச் சுவர்களை உடைத்தெறிந்து விட்டது. உயர்ந்தோர், தாழ்ந்தோர் அனைவரும் சமம் எனப் போதிக்கும் அவர் அடிமைகளுடன் சமமாக உணவருந்துகின்றார். அரபுகளின் குலப் பெருமையை மதிக்காத அவர் கறுப்பு நிற நீக்ரோக்களைத் தனது நண்பராக்கிக்  கொள்கின்றார்.'

'மேற்கத்தேய பிரபுக்கள் தேசம், இனம் ஆகியவற்றைப் பூஜிக்கும் தேசிய வாதத்தைக் கற்றுக் கொடுத்தனர். மனிதனே! நீ கழுகு போன்ற தீட்சண்யப் பார்வை படைத்தவன்; நீ வான் வெளியே பறக்கும் பரந்த களம். உனது இறக்கைகளை விரிப்பாயாக. முழுப் பிரபஞ்சமும் இறைவனுக்கே உரியது.'

முஸ்லிம் இலக்கியவாதிகளாகிய நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய மற்றும் சில முக்கியமான அம்சங்களை இப்போது நினைவு படுத்த விரும்புகின்றேன்.

எழுத்தாற்றல் - ஓர் அருள், அமானிதம், ஆயுதம்

எழுத்தாற்றல் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப் பெரியதோர் அருட் கொடையாகும். மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தும் பிரதான அம்சங்களில் ஒன்றாக அவன் பெற்றிருக்கும் எழுத்தாற்றல் விளங்குகிறது.
அல் குர்ஆனில இறைவன் எழுத்தின் மீதும் பேனாவின் மீதும் புத்தகங்கள் மீதும் சத்தியம் செய்கின்றான்.

ن، والقلم وما يسطرون

'நூன்' என்ற எழுத்தின் மீது சத்தியமாக! பேனாவின் மீது சத்தியமாக! அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக!.'
இந்த வசனத்தில் வரும் 'ن' )நூன்) என்பதற்கு 'மைக் குப்பி' என்றொரு விளக்கம் சொல்லப்படுகிறது. படைத்த இறைவன் எழுத்தின் மீது சத்தியம் செய்யும் அளவிற்கு எழுத்து புனிதமானது; எழுதுகோல் மீது சத்தியம் செய்யும் அளவிற்கு  எழுதுகோல் முக்கியமானது. எழுதப்படுபவை மீது சத்தியம் செய்யும் அளவிற்கு நூல்கள் சிறப்புக் குரியவையாகும்.
எழுத்தாற்றல் என்பது ஓர் அருளாக இருப்பது போலவே அது ஓர் அமானிதம்; என்பதை மறக்கலாகாது. உண்மையில் அருளாக அமையும் ஒவ்வொன்றும் அமானிதமாகும்; பொறுப்பாகும், எனவே எழுதுபவர்கள் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், அது பற்றி அவர்கள் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள., மறுமையிலே, மஹ்ஷர் வெளியிலே, நிழலேயில்லாத அந்த திடலிலே ஒவ்வொரு மனிதனும் நான்கு பெரும் வினாக்களுக்கு விடை சொல்லியாக வேண்டும். அவ்வினாக்களுக்கு விடை சொல்லாத வரை ஒருவரால் அவ்விடத்தைவிட்டு அசைய முடியாது. ஒருவர் பெற்றிருந்த அறிவையும், ஆற்றலையும் வைத்து அவர் என்ன சாதித்தார் என்பது அவ்வினாக்களில் ஒன்றாகும். இதற்குப் பதில் சொல்லும் வகையில் எமது எழுத்துப் பணியை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
எழுத்தாற்றல் என்பது ஓர் அருளாகவும் அமானிதமாகவும் இருப்பது போலவே அது ஓர் ஆயுதமாகும், சக்திவாய்ந்த ஆயுதமாகும். துப்பாக்கிகள், தோட்டாக்கள், பீரங்கிகள் முதலானவற்றால் சாதிக்க முடியாததை எழுத்தால் சாதிக்கலாம் என்பது மிகப்பெரியதோர் உண்மையாகும்.
இன்றைய உலகில் இடம்பெற்று வரும் கத்தியில்லாதஇ இரத்தமில்லாத யுத்தத்திலே எழுத்தே மிகப் பெரும் ஆயுதமாகும் என்பதையுணர்ந்து நாம் செயற்பட வேண்டும். இன்றைய அறபு, இஸ்லாமிய உலக மக்கள் எழுச்சிக்குப் பக்கபலமாக  இருக்கும்  மிகப்பெரும் சக்தியாக எழுத்து காணப்படுகிறது என்ற உண்மையை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்ற தேவை இருக்காது என்று நம்புகிறேன். அறிஞர்களின் பேனா மை - ஷஹீதுகளின் இரத்தத்திற்கு சமமனானது என்ற இஸ்லாமிய கருத்து எவ்வளவு அர்த்தமுள்ளது?!.

இலக்கியவாதிகள் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள் அல்லர். மாறாக நிஜ உலகின் நிகழ்வுகளோடு வாழவேண்டியவர்கள். இன்றைய உலகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அவற்றுள் பல மனித இனத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. உலகின் பல நாடுகளை சீரழித்து சின்னாபின்னமாக்கி வரும் அரசியல் நெருக்கடிகள், மனித வாழ்விற்கே சவால்விடும் சுழல் சுற்றாடல் பிரச்சினைகள், மனித உயிருக்கு உலை வைத்து வரும் சுகாதாரப் பிரச்சினைகள் , பலகோடி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துள்ள பொருளாதார நெருக்கடி முதலானவை இன்றைய உலகம் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகள் யாவற்றிற்கும் தீர்வு சொல்லும் கடப்பாடு அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி அறிஞர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் ஆகியோருக்கும் உண்டு. உலகில் நிலவும் அரசியல் அராஜகங்களுக்குக்கெதிராகவும், பொருளாதார அநீதிகளுக்குக்கெதிராகவும் சமூக விரோத செயல்களுக்கும், தீமைகளுக்கும் எதிராகவும் குரல் எழுப்பும் கடப்பாடும், மக்களை விழிப்பூட்டும் பொறுப்பும் முஸ்லிம் இலக்கியவாதிகளுக்கு உண்டு.

மேலே நாம் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமாகவுள்ள ஒரு பிரச்சினை உண்டு. அதுதான் ஆன்மீக, தார்மீக ஒழுக்கப் பண்பாட்டுத் துறைகளில் காணப்படும் வீழ்ச்சியாகும். உண்மையில் சமகால உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது எல்லா மட்டங்களிலும் எல்லா தரப்பினர் மத்தியிலும் நிலவுகின்ற ஆன்மீக வறுமையும், வெறுமையும், அதன் அடியாக தோன்றிய ஒழுக்க பண்பாட்டு வீழ்ச்சியுமாகும். எனவே, இன்றைய உலகையும் மனித சமுகத்தையும் காப்பாற்றுவதற்கு ஓர் ஆன்மீகப் புரட்சி, ஒழுக்க பண்பாட்டு எழுச்சி தேவைப்படுகின்றது. இதற்காக முஸ்லிம் இலக்கியவாதிகளின் பேனாமுனை வீரியத்துடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். அகத்திற்கும் புறத்திற்குமிடையில், ஆன்மீகத்திற்கும் லௌகீகத்திற்குமிடையில்,  அறிவிற்கும் ஆன்மாவிற்குமிடையில், உடலுக்கும் உள்ளத்திற்கும்pடையில் சமனிலையைப் பேணும் இஸ்லாமிய நோக்கு இன்றைய உலகிற்குத் தேவைப்படுகிறது. இதனை வழங்கும் இன்றியமையாத பணியை இஸ்லாமிய இலக்கியவாதிகள் செய்தாக வேண்டும்.

இன்றைய உலகம் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டு அதன் விளைவாக பௌதீக வாழ்கையில் புரட்சிகரமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. உலகமே பூகோள கிராமமாக இல்லை பூகோளக் குடும்பமாக மாறியிருக்கின்றது. ஆனால் உலகில் வாழும் மனிதர்கள் எந்தளவு தூரம் உள்ளங்களால் இணைந்திருக்கின்றார்கள், நெருங்கி வாழ்கின்றார்கள், பூகோள குடும்பமாக மாறியிருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும். உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் மனித இனத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் உழைக்கின்ற போரளிகளாக முஸ்லிம் இலக்கியவாதிகள் இருக்கவேண்டும். இஸ்லாத்தின் சமாதானத் தூதை உலகெங்கும் பரப்பும் இஸ்லாத்தின் அழைப்பாளர்களாக இருக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடும் முஸ்லிம் இலக்கியவாதிகளுக்குண்டு.

இஸ்லாமிய இலக்கியவாதிகளும் சில நெறிமுறைகளும்

இறுதியாக எழுத்துத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் பேண வேண்டிய இஸ்லாம் சொல்லும் தர்மங்களில் முக்கியமானவற்றை இங்கு சுருக்கமாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வாய்மையைக் கைக்கொள்ளல், நம்பகத் தன்மையைப் பேணுதல், பண்பாடு பேணுதல், பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளல் முதலான அடிப்படை இஸ்லாமிய பண்புகளை நாம் பேண கடமைப் பட்டிருக்கிறோம். பக்கச்சார்பு, மிகைப்படுத்தல், குறைமதிப்பீடு செய்தல், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்தல், சுயம் குறிக்கீடு செய்தல் முதலான இஸ்லாம் விரோத கெட்ட குணங்களை எம்மைவிட்டுக் களைவதும் எமது எழுத்துக்களில் ஏசுதல், தூற்றுதல், இழிவுபடுத்துதல், அவதூறு சொல்லல், அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்தல் முதலான தரக்குறைவான செயல்களை முற்றாக தவிர்ப்பதும் எம்மீதுள்ள தார்மீகக் கடப்பாடுகளாகும். அப்போது தான் இஸ்லாமிய இலக்கியவாதிகள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுடையராக நாம் இருக்க முடியும். மேலும் அப்போது தான் எமது ஆக்கங்களும் படைப்புக்களும் இஸ்லாமிய இலக்கியங்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி படைத்தவையாக இருக்கும்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.