Breaking News
recent

இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகம் என தேசத் தலைவர் பெயராலும் நிறுவனர்கள் பெயரா லும் பல்கலைக்கழகங்கள் உள் ளன. ஆனால் நிறுவனரின் பெயரை அறியவாய்ப்பில்லாமல், அமைந்த இடத்தின் பெயரைக் கொண்டு விளங்குவது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். அலிகர் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பல்கலைக்கழகம் என்றால் அந்தச் சமுதாயத்தினருக்கென்றே அது நிறுவப்பட்டுள்ளது என்ற கருத்து உருவாகலாம். ஆனால் இந்தப் பல் கலைக்கழகம் அனைத்து சமயத் தினருக்கும் இடம் கொடுத்தது; கொடுக்கிறது. இதன் முதலாவது மாணவனும் ஒரு இந்து; பட்டதாரி யும் இந்து என்பது பலரும் அறியாத தகவலாகும். பின்னர் ஏன் இது முஸ்லிம் பல்கலைக்கழகம் எனப் பெயர் பெற்றது? அது ஒரு சுவா ரசியமான வரலாறு.

இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ஆங்கில மொழி யைக் கற்கலாமா? அது இஸ்லாத் திற்கு எதிரான கொள்கையல் லவா? என்ற ஐயம் எண்ணற்ற முஸ் லிம்களின் உள்ளத்தில் இருந்தது. மேற்கத்திய கல்வித்திணிப்பு தங் களைக் கிருத்தவர்களாக மாற்றவே என இஸ்லாமியர்கள் பயந்தனர்.

இதே போன்ற அச்சம் இந்து சமயத்தவருக்கும் இருந்தது. “எவர் தன் குழந்தைகளை மிஷனரி பள் ளிகளுக்கு அனுப்புகிறார்களோ அவர்கள் சாதியைவிட்டு ஒதுக்கப் படுவார்கள்” என்ற அறிவிப்பு அக் கால நாளிதழ்களில் வெளியிடப் பட்டன.

இத்தகைய நிலைமையை கவனத்தில் கொண்டு பரிசீலித்தால் தான் முஸ்லிம் பல்கலைக்கழ கத்தின் தேவையும் தன்மையும் விளங்கும். முஸ்லிம் சமுதாயத்தின ரின் அச்சமும் ஐயமும் கலந்த கேள் விகளுக்கு சர் சையது அகமது கான் என்பவர் அளித்த பதில் வித்தியாச மானது.

“ இஸ்லாமிய மதச் சட்டங்கள் பிறமொழிகளுக்கு எதிரியல்ல. நாம் எந்த மொழியையும் பயிலலாம். இஸ்லாத்தைச் சாராத பாரசீக மொழியை நாம் பலகாலமாக ஏற் கெனவே பயின்றுள்ளோம். எனவே ஆங்கில மொழி பயிலுதல் இஸ் லாத்தால் அனுமதிக்கப்பட்டதே” என்றார்.

அதேவேளையில் ஆங்கில மொழிக் கல்விக்கான வரம்பு என்ன என்பதிலும் அவர் தெளிவாக இருந் தார். “இந்தியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை மட்டுமே ஆங்கில அரசு கொடுத்து வருகிறது. இத்தகைய கல்வித்திட்டம், இந்தி யர்களை, நம்பிக்கையுள்ள அரசு வேலைக்காரர்களாக மட்டும் மாற் றுமே தவிர, அவர்களை அறிவாளி களாக வளர்க்காது. உண்மையான கல்வியின் பயனானது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்து அறி வையும் ஒழுக்கத்தையும் இணைத்து ஒழுக்கமான அறிவு ஜீவியாக மாற் றியமைப்பதாகும்” என்று மக்களி டம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சையது அகமதுகான்.

ஆங்கில வழி கல்வி குறித்து இவ்வளவு தெளிவான பார்வை கொண்டிருந்த சையது அகமதுகான் தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர். 1817 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று பிறந்த இவர் தன்னிடம் இருந்த பெருஞ் செல்வத்தால் இதை உருவாக்கி னாரில்லை.

1857 ஆம் ஆண்டு நடந்த சிப் பாய்க் கிளர்ச்சியின்போது அவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் எப்படி இருந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காணலாம். 

1857 - இல் ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின் சூரையாடப்பட்ட என் வீடோ சொத்தோ என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்னை நொடிய வைத்ததெல்லாம் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட, கொடுமையும் அழிவும்தான். இனி யும் நான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்றேன். அது தான் உண்மையும் கூட...!

இந்த மனச் சோர்வு என்னை முதியவனாக்கித் தலை முடியை வெளுக்கச் செய்தது. முராதாபாத் அடைந்த போது, எங்கும் அழிவின் சின்னங்களே காணப்பட்டன. பசியும் பட்டினியுமாய் அலையும் மக்கள் மட்டுமே தென்பட்டனர். எல்லோர் முகத்திலும் கவலையின் கோடுகள்;

வர்ணிக்க இயலாத இந்தக் கோரக் காட்சிகள் என்னை உலுக் கின. ‘எங்கே போகப் போகிறாய்’ ‘எங்கு சென்று ஒளிந்து கொள்ளப் போகிறாய்’ என மனம் என் உயிரைப் பிழிந்தது. ‘இல்லை நான் போக மாட்டேன்’ எங்கும் போகமாட்டேன். வாழ்விழந்த என் மக்களின் மன தைச் சிறுகசிறுகத் தேற்றப் போகி றேன்’ என என் மனசாட்சி பலம் கொண்ட மட்டும் கதறியது. இதனால் இந்தியாவைவிட்டு வேற்று நாட்டில் குடியேறும் எண்ணத்தை நான் கைவிட்டேன். ‘இந்த மண்ணிலே தான் ஆயுள் முழுவதும் வாழ்ந்து மீளா நித்திரைக்குச் செல்வேன்’ என்று மனதின் மூலையில் ஒர் அசுர பலத்துடன் நம்பிக்கை குரல் ஒலித் தது. நான் நிமிர்ந்து நின்றேன். 

இப்படி நிமிர்ந்து நின்றவர்தான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென ஒருபல் கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். இதற்காக ஊரெங்கும் அலைந்து திரிந்து நிதி திரட்டி னார். “எனது நண்பர்களும் நான் அவர் களைச் சந்திப்பதைத் தவிர்க்கின் றனர். காரணம், அவர்களை நிதி உதவச்சொல்லி தொடர்ந்து கேட்ப தால் என் முகமே ஒரு அமைதியான பிச்சைப் பாத்திரமாகிவிட்டது” எனும் அளவுக்கு அவரது நிதி திரட் டல் இருந்தது.

பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்றார் ஒளவையார். பிச்சைப் புகினும் கற்பித்தல் நன்றே என்பது சையது அகமது கானின் கொள் கையாக இருந்தது.

இப்படி திரட்டப்பட்ட நிதியில் இருந்துதான் மொகமதன் ஆங் கிலோ ஒரியண்டல் (எம் ஒ ஏ) கல் லூரி 1875 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதிஅலிகரில் நிறுவப் பட்டது. இந்திய முஸ்லிம்களின் முதல் நவீனக் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இந்தக் கல்லூரி தான் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழகமாக மாறியது.

ஆங்கிலம் வழி கல்வி கற்கலாம் என்று இதன் நிறுவனர் சையத் அகமது கான் கூறினாலும் தாய் மொழிக் கல்வியே சரியானது என் பதில் உறுதியாக இருந்தார். இதற் காக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்ய ஊக்கமளித்தார்.

முஸ்லிம் பல்கலைக்கழகத்திற் கென்று சில விதிமுறைகளையும் ஏற்படுத்தினார். சன்னி - ஷியா என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே இடத்தில் தொழுகை நடத்த வேண்டும்; சமய வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் ஒரே விடுதியில்தான் தங்கியுள்ளனர். எல்லாத்துறையில் பயிலும் மாண வர்களுக்கும் உலக நாகரிக வர லாறு கட்டாயப்பாடமாக இருக்க வேண்டும் என்பது போன்ற நடை முறைகள் இப்போதும் பின்பற்றப் படுகின்றன.

இந்தியாவிலேயே இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஒரே நூலகமாக விளங்குகிறது இங் குள்ள மௌலானா ஆசாத் நூல கம் என்பது வியப்புக்குரிய தகவல் அல்லவா?

இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தனியாக இயங்குவது சிறப்புக்குரியது.

இஸ்லாமிய சமூகத்து இளைய தலைமுறையை நவீன காலத்துக் குத் தயார்படுத்த பல்கலைக் கழ கக்கனவுடன் கல்லூரியைத் தொடங் கிய சையது அகமது கான் 1898 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று மறைந்தார்.

அவர் செய்து முடிக்க எண்ணியப் பணிகள் ஏராளம், என்றாலும் எதார்த்தம் என்ன என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். “மறையும் சூரியனின் கதிர்களை இழுத்துப் பிடித்துப் பகலை நீட்டிக்கவும் காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்களைக் கட்டிப்போட்டு இரவை நீட்டிக்கவும் இயலாதவனாய் நான் உள்ளேன்” என்று வாழ் நாளின் போதாமையை அவர் நாசூக்காகத் தெரிவித்தார். காலம் அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டது.

ஆனாலும் அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட கல்லூரி என்பது பல்கலைக்கழகமாகி தற்போது 30 ஆயிரம் மாணவர்கள் 1700 ஆசிரி யர்களுடன் (இவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்) செயல் படுவது முயற்சிக்குக்கிடைத்த வெற்றியின் அடையாளம் எனலாம்.

இது போன்று சர் சையத் அகமது கானின் வாழ்க்கை லட்சியங்கள் உள்ளிட்ட பல தகவல்களை டாக்டர்.எஸ். சாந்தினி பீ எழுதி விடி யல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு நூல் பதிவு செய்துள்ளது.
நன்றி: தீக்கதிர்

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.