உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான சாதாரண தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்கள் வெளியிடும் பணி இறுதி நிலையில் உள்ளது.
இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் 19-ந் தேதி (நாளை) தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட உள்ளன. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடல் குறித்தான அறிவிப்புகள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்தான பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய படிவங்களில் தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் (வருவாய் கோட்டாட்சியர்) சமர்ப்பித்து உரிய ஆணைகள் வெளியிடப்பட்டவுடன், உள்ளாட்சி வாக்காளர் பட்டியலுக்கு உரிய துணை பட்டியல்கள் வெளியிடப்படும்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்வரை தொடர்புடைய, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்த பட்டியலில் உள்ள அனைவரும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் 2011-ல் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள். சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தங்களின்படி, தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதிகள், 1995-ன் விதி 21 மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள்,
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 2006-ன் விதி 19 ஆகியவற்றின்படி உரிய திருத்தங்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும். பொதுமக்கள் தேவைப்படின் திருத்தங்கள் குறித்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாணையத்திற்கு அனுப்புதல் கூடாது. நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தகுதியுள்ள எவரும் வாக்களிக்க இயலாத நிலை இருக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்