தஞ்சை மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை தேர்தல் பார்வையாளர் வள்ளலார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரும் 17,19 தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பணிகளை பார்வையிடும் வகையில் தொழில் மற்றும் கூடுதல் வணிக வரித்துறை கமிஷனர் வள்ளலார், மாவட்ட தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் பார்வையாளர் வள்ளலார், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கரன் ஆகியோர் நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊரக பகுதியில் நடக்க உள்ள தேர்தல் பணிகளை பார்வையிட்டனர்.
கரந்தை ஐந்தாவது வார்டு ஒத்த தெருவில் நகராட்சி மூலம் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதா என்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்த வள்ளலார், தஞ்சை சரபோஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு, முகவர்களுக்கான இருப்பிட வசதி போன்றவற்றை ஆய்வு செய்தார்.வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியில் மொத்தம் ஆயிரத்து 900 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று நகராட்சிகளில் 325 பணியாளர்களும், 22 டவுன் பஞ்சாயத்துகளில் 125 பணியாளர்களும், 14 பஞ்சாயத்து யூனியன்களில் ஆயிரத்து 400 பணியாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. பணிகளை பார்வையிட்ட பார்வையாளர் வள்ளலார், தஞ்சை புதிய சுற்றுலா மாளிகை அறை எண்- 6 ல் தங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பினால் 9487633814 என்ற தொலைபேசி எண்ணில் பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம்.மனு அளிக்க விரும்புவோர் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை பார்வையாளரை நேரில் சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்