Breaking News
recent

அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க யாருக்கு வாக்களிக்க வேண்டும்?


சென்னை: ‘‘அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சி மன்ற அமைப்புகள் உடலின் நாடி நரம்புகளைப் போன்றவை. இதயத்தில் இருந்து ரத்தத்தையும், மூளையில் இருந்து கட்டளைகளையும் எப்படி உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் நாடி நரம்புகள் கொண்டு செல்கின்றனவோ, அதைப் போல அரசாங்கத்தின் திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் மக்களில் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளது.  
எனவே தான், ஓர் ஆரோக்கியமான ஜனநாயகம் வலுவான உள்ளாட்சி அமைப்புகளை கொண்டிருப்பது இன்றியமையாதது. அதிலும், திறமைசாலிகளும், மக்கள் தொண்டில் ஆர்வம் உடையவர்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, முறைகேடுகளை வெறுக்கும் நல்லெண்ணமும் கொண்டவர்கள் மக்களாட்சி அமைப்புகளில் பதவி வகிப்பது மிகவும் அவசியமாகும்.  
 தமிழகத்தில் சிறப்பான மக்களாட்சி மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாய் அமைந்த உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட செயல்பட வேண்டும் என்ற அக்கறையின் காரணமாகத் தான், ஆயிரம் பணிகள் இருந்தாலும் உங்களைத் தேடி 3 நாட்கள் ஓடோடி வந்தேன்.  
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடைய, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் இருந்ததைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலிலும் உங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும் என்பதோடு, அதைவிட அதிகமாகக் கூட இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.  
உள்ளாட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் தொடக்கப் பள்ளி. எனவே, இளைஞர்கள், இளம்பெண்கள், நகர்ப்புற வாக்காளர்கள், ஊராட்சிப் பகுதி வாக்காளர்கள் என்று எந்தப் பாகுபாடும் இன்றி, வாக்காளப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முன்வர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.