Breaking News
recent

குடும்ப அட்டைகள் கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு!

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் கால அவகாசத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க காலதாமதம் ஆகும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் 31.12.2011 அன்றுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் குடும்ப அட்டையில் தன் பெயரை பதிவு செய்திருந்தால், அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை. இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்ற நிலையும் உள்ளது.

உடற்கூறு பதிவு முறை

இத்தகைய குறைபாடுகளைக் களைய, தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மேற்படி தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் பல குடும்ப அட்டைகளில் தன் பெயரை பதிவு செய்வதும், போலி குடும்ப அட்டைகளும், நியாயவிலைக் கடைகளில் போலி பட்டியலிடுவதும் களையப்படும்.

மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு

தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சில காலம் ஆகும் என்ற காரணத்தினால், தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 31.12.2012 வரை நீட்டிக்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.