நன்மையையும் நற்செயல்களையும் நோக்கிய எட்டுக்களின் ஆரம்பப் புள்ளியாக இவ் உபதேசம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கின்றேன்.
நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் றமழான் எங்களிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் எம்மிடம் இருக்க வேண்டும். எம்மிடம் பிரதானமாக இரண்டு தயார் நிலைகள் இருக்க வேண்டும்.
1. மனோ நிலை மற்றும் செயல் ரீதியான தயார் நிலை:
நாம் றமழானை அடைந்து கொள்ள இப்போதிலிருந்தே அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
ரமழானுக்கு முன்னால் எமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்:
எமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
"எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1, குர்ஆனை விளங்கி பலமுறை ஓதி முடித்தல்.
2, முந்தைய பாவங்களை விட்டும் நீங்கி விடுதல் என்ற உண்மையான எண்ணம்.
3, அதிக நன்மைகளைச் செய்தல்
4, நடத்தை மாற்றம்
5, இந்த மார்க்கத்துக்காக செயலாற்றுதல் போன்ற பல நல எண்ணங்கள் எமக்குள் இருக்க வேண்டும்.
செயல் சார்ந்த தயார் நிலைக்கு கீழ்வரும் சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
* றமழான் தொடர்பான சிறந்த நூல்களை வாசித்தல்.
* நோன்புடன் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கான தப்ஸீர் கற்றல்.
* ஈமானிய அமர்வுகளை நடாத்திக் கலந்துரையாடுதல்.
* "ஹகீபதுல் ஹைர்" (நன்மைகளுக்கான பொதி) என்னும் செயற்றிட்டத்தில் ஏழைகளுக்கு நோன்பு நோற்பதற்கான வசதி செய்து கொடுத்தல் போன்ற மனோ நிலை ரீதியான, செயல் ரீதியான தயார் நிலை எம்மிடத்தில் இருக்க வேண்டும்.
2. தஃவா ரீதியான தயார் நிலை
தஃவா ரீதியான அனைத்து செயற்பாடுகளுக்கும் ரமழான் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும்.
1. "ஹகீபதுத் தஃவா" (தஃவா பொதி) வழங்குதல்.
இது நோன்பாளியின் தஃவா ரீதியான அன்பளிப்பாகும். றமழான் சிறுகையேடு, புதிய ஒலி நாடா,உணர்வு ததும்பும் வார்த்தைகள் பொதிந்த ஆக்கம், மிஸ்வாக் ஆகியன உள்ளடங்கலாக அவ் அன்பளிப்புப் பொதி அமைய வேண்டும்.
2. குடும்பத்துக்கான நாளாந்த அல்லது வாராந்த தர்பியா.
3. ஈமானிய, தர்பியா ரீதியான சொற் பொழிவுகளை பள்ளியில் நிகழ்த்தல்.
4. மாணவர் செயற்பாடுகள்.
5. குடும்ப இப்தார்களும் பொது இப்தார்களும்
6. இஸ்லாமிய நிறுவனங்களுடன் தஃவா ரீதியான உதவிகளைப் பகிர்ந்துகொள்ளல் போன்ற பல தஃவா செயற்பாடுகளை நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
உண்மையில் வெற்றிகளை சாதித்தவர்களும், இலக்கைத் தொட்டவர்களும் முன் ஆயத்தங்களுடனும் திட்டமிடல்களுடனும் செயற்பட்டவர்களே. கல்வியாண்டு ஆரம்பிக்கும் முன்னரே அதற்காகத் தயாராகும் பண்பு, திறமை மாணவர்களிடத்திலேயே இருக்கும். முன் ஆயத்தங்கள் செய்வோரின் முயற்சிக்கும், தியாகத்துக்கும் ஏற்ப அவர்களது அடைவுகளும் வித்தியாசப்பட்டிருக்கும் என்பது நாம் அறிந்த விடயம். இவ்வாறிருக்கும் போது முன் ஆயத்தம் எதுமற்றவர்கள் எவ்வாறு வெற்றியொன்றைச் சாதிப்பார்கள்?
குர்ஆனிய மாதம் றமழானை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இம் மாதத்தில் போதிய பயிற்சிகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஸலபுகளின் வாழ்வு முழுவதும் றமழானை மையமாகக் கொண்டமைந்திருந்தது என்று கூற முடியும். ஆறு மாத எதிர்பார்ப்பும், ஆறு மாதப் பிரார்த்தனையும் றமழான் பற்றிய அவர்களது பிரக்ஞையை எமக்குத் தெளிவுபடுத்துகிறது. றமழானை அடைந்து கொள்ள முன் ஒரு எல்லையை நோக்கியே மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறது. நல்லெண்ணம் வையுங்கள். இறுதி மூச்சின் போது அதற்கான கூலியும் எம் நன்மை ஏட்டில் இடம்பிடிக்கும் இன்ஷா அல்லாஹ்!
ஒவ்வொரு நிமிடமும் றமழானின் மீதான தாகத்தை உங்களுக்குள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனவே, கீழே சில முக்கியமான குறிப்புகளைத் தருகிறோம்.
1. வீட்டை அழகுபடுத்தும் முன்னர் சுத்தப்படுத்துங்கள். எதிர்பார்த்திருக்கும் விருந்தாளியின் வருகைக்காக உங்கள் உள்ளங்களைச் சுத்தப்படுத்தி வையுங்கள்.
2. நோன்பின் சட்டங்களைக் கற்றறிந்து கொள்ளுங்கள்.
3. உள்ளத்தை இறையசத்துக்குப் பழக்குங்கள், றமழான் இறையச்சம் கொண்டவர்களின் பாசறையாகும்.
4. முறிந்து போன உறவுகளைச் சந்தித்துச் சேர்ந்து கொள்ளுங்கள்.
5. தப்பெண்ணமில்லாத உள்ளத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இணைய தள பாவனையில் அதிக நேரம் கழித்து விடாது றமழானை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இமாம் மாலிக் பின் அனஸ் அவர்கள் ஹதீஸ் துறையில் ஈடுபடுவதை விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். றமழான் என்றும் உங்களை எதிர்பார்த்திருக்கிறது.
7. கடந்த றமழானில் விட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளுதல்.
8. ஷஃபானில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜுஸ்உ குர்ஆன் ஓத முயற்சி செய்யுங்கள். பின்னர் இரண்டு, மூன்று ஜுஸ்உக்களை நாளாந்தம் ஓதுகின்ற நிலைக்கு மாற வேண்டும். பின்னர் 10நாட்களுக்கு ஒரு முறை ஒரு குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும்.
9. உங்களது உடலை நீண்ட ருகூஉக்கும் ஸுஜூதுக்கும் பழக்குங்கள். றமழானின் இரவுகள் எமது நீணட நேர தொழுகைகளால் உயிர் பெற வேண்டியிருக்கின்றது.
10. பள்ளியில் நீண்ட நேரம் தரித்திருக்கப் பழகுங்கள்.
11. சந்தர்ப்ப துஆக்கள் பலதை மனனமிட்டுக் கொள்ளுங்கள்.
12. ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பியுங்கள்.
13. உண்ணும் உணவின் அளவை இப்போதிருந்தே குறைத்துக் கொள்ளுங்கள்.
14. இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம். சுபஹுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே விழித்திருந்து அமலில் ஈடுபட உங்களைப் பழக்குங்கள்.
15. வழமையை விட குறைவாகத் தூங்கப் பழகுங்கள்.
16. தினமும் 1000 வசனங்களை ஓதி கியாமுல் லைல் தொழப் பழகுங்கள்.
17. பொது வேலைகளில் ஈடுபடல்.
18. போதை வஸ்துக்கு அடிமையானோர் அவற்றை விட்டுவிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
19. இறைவனை திக்ர் செய்வதில் நாவு திளைத்திருக்க வேண்டும்.
20. குர்ஆனை இப்போதிருந்தே மனனமிட ஆரம்பியுங்கள்.
21. பெருநாளைக்கான ஆடைகளை முன்னரே வாங்கி விடுங்கள். றமழானில் சந்தைகளில் அலைய வேண்டாம்.
22. திட்டமிட்ட நேர அட்டவணை ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
23. உங்கள் சூழலிலுள்ள சிறார்களுக்கும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள்
மேற்சொன்னவை சில வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் மேலதிக திட்டமிடல்களுடன் எதிர்வரும் றமழானுக்காக தயாராகுங்கள்.
நன்றி: காலித் தர்வீஷ் அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கம்
அஷ்ஷெய்க் எம்.எப்.எம் நௌஷாத் (நளீமி)
நன்றி:மீள்பார்வை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்