தொலைபேசி மூலம் காதலித்து வந்த பெண் அந்தக் காதலரைத் தேடி வீட்டை விட்டு ஓடி வந்தார். ஆனால் வந்து பார்த்தால், தான் இத்தனை நாட்களாக போனில் கொஞ்சிப் பேசிய நபர் 67 வயது முதியவர் என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணை போலீஸார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஒரு வருடமாக இந்த போன் காதல் தொடர்ந்துள்ளது. இந்தக் காதலில் ஈடுபட்டு வந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பொறியியல் கல்லூரி மாணவி. இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு ஏற்பட்டது.
இது நட்பாக மாறியது. அந்த நபரின் பேச்சால் கவரப்பட்ட மாணவி அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி கண்ணூர் வந்தார். கண்ணூ்ர் பஸ் நிலையம் வந்த அப்பெண் தனது பாய் பிரண்டுக்குப் போன் செய்தார். தான் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும், உடனே வருமாறும் கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாய் பிரண்ட் வரவில்லை.
இதனால் தவிப்புடன் அவர் பஸ் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வந்து அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று விசாரித்தனர். அவரும் விவரத்தைச் சொன்னார்.
இதையடுத்து அவர் கொடுத்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போலீஸார் உடனே காவல் நிலையம் வருமாறு கூறினார். அவரும் வந்தார். தனது பாய் பிரண்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த அந்த மாணவி, பெரும் எதிர்பார்ப்புடன் காதலரைப் பார்க்க ஓடினார். ஆனால் பார்த்த வேகத்தில் பேரதிர்ச்சி அடைந்தார்.
காரணம், வந்த நபருக்கு வயது 67. தலையெல்லாம் நரைத்துப் போன முதியவர். அவரைப் பார்த்த அதிர்ச்சியிலும், கடும் ஏமாற்றத்திலும் அப்பெண்ணுக்கு மயக்கமே வந்து விட்டது. உடனே போலீஸார் முகத்தில் தண்ணீர் ஊற்றி அந்தப் பெண்ணை சகஜநிலைக்குக் கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தினார். ஆனால் ஏமாற்றம் தாங்க முடியாமல் அப்பெண் அழத் தொடங்கினார். அவரை போலீஸார் அமைதிப்படுத்தினர்.
வந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தான் நட்பாக மட்டுமே பழகியதாகவும், காதலிக்கவில்லை என்றும், அப்படிப் பேசியதில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் அந்தப் பெண்ணின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து பெண்ணுக்கு அறிவுரைகளைக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்