Breaking News
recent

பந்த் போராட்டம்:அதிரையில் வெற்றி!


காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெற வில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி நேற்று இரவு 11 மணி முதல் கர்நாடக அரசு காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது.

ஆனாலும் இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட மறுத்ததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகத்தை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர்7) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது.

இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. பா.ம.க., தஞ்சை மாவட்ட காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருந்தன. தஞ்சையில் தனியார் பள்ளிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அறிவித்தபடி பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிமுதல் தொடங்கியது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முழு அடைப்பு காரணமாக தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் பல ஆட்டோக்கள் ஓடவில்லை,பள்ளி,கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. சில கடைகளைத்தவிர பல கடைகள், தேணீர் விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. அதிரையைப் பொறுத்தவரை இந்த பந்த் வெற்றி என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.