Breaking News
recent

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.