Breaking News
recent

காதலியுங்கள்

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள்(தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.[அல் - குரான் 4;34]


அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187). திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான். உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! . அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள். நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான். உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி. உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.


ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்! கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்! “அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (அல் - குரான்2:187). எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன.


அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான். இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது. மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (அல் - குரான்16:72) அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்: மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).


ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும். நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும். பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும். நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:   அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும் உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள். ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?
அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள். எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர்” என்று பெயர் எடுப்பவர்தான். இறுதியாக, தம்பதியர் இணங்கி இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும். விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள். அல்-குரான் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்: நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள். இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.


தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள். அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு என்பதை புரிந்து வாழ்வோமாக.


தாம்பத்திய உறவில் தடுக்கப்பட்டவை:

மாதவிலக்குக் காலத்தில் மனைவியுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது - (அல்குர்ஆன், 002:222) நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்று பதிலளித்தார்கள். (தாரிமீ) மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்ளக்கூடாது. மலப்பாதையில் உறவு கொள்வது ஓரினப் புணர்ச்சிக்கு ஒப்பானதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டைத் தவிர இல்லறத்தில் ஈடுபடும் முறை பற்றி வேறு எந்தத் தடையும் இல்லை!


தாம்பத்திய உறவில் ஆகுமாக்கப் பட்டவை:

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக (நற்செயல்களின் பலனை) அனுப்புவதில் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன், 002:223)


குடும்பக் கட்டுப்பாடு:

தற்காலிகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அனுதித்துள்ளது. நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனைவியின் கருப்பை வலுவிழந்த நிலையில் இருந்து குழந்தை பேற்றைப் பெற்றால் அதனால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தால் நிரந்தரமாகக் குழந்தைப் பிறப்பைத் தடை செய்து கொள்ளலாம். ''எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படமாட்டாது'' (அல்குர்ஆன், 002:233. 023:062) 


பொதுவாகத் தடை செய்யப்பட்டவை:

கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அந்தரங்கங்களை அறிந்து கொண்டு பின்னர் அதை வெளியில் பரப்பித் திரிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய அந்தரங்க) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானாவன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்).
இனிய இல்லறம் காணவிருக்கும் உங்களுக்கு எங்களது உளங்கனிந்த நபிவழி வாழ்த்துக்கள்!


நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும்போது ''பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கய்ர்'' என்று கூறுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத்) பொருள்: ''அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக'' மண வாழ்வில் இணையும் கணவன், மனைவி இருவருக்கும் இஸ்லாம் அழகிய உபதேசங்களை வழங்கியுள்ளது. அதில் சிலவற்றை இங்குத் தந்திருக்கிறோம். கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, பிறரின் மனம் நோகாமல் நடந்து கொண்டால் இல்லறம் இனிதாகும்.குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. ஆண்கள் தங்கள் மனைவிகளிடம்அதிகம் விரும்புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக்கும் ஆர்வம் கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் இல்லை எனவும் வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தினர்.ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்ய பட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவு களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.