Breaking News
recent

முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் !


தஞ்சை தீர்க்கசுமங்கலி திருமண மண்டபத்தில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் 1 ஆண்டுக்கு மேலாக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 28 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் 1,016 நோய் சிகிச்சைகளும், 23 நோய் பரிசோதனைகளும் அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற முடியாது. உயரிய சிகிச்சைகளான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்கு பின்பும் எடுக்கப்படும் பரிசோதனைகள், தொடர் சிகிச்சைகளுக்கு தேவைப்படும் செலவுகளும் இந்த திட்டத்தில் உள்ளடக்கி உள்ளன. போக்குவரத்து செலவும் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டு போன்று வழங்கப்படும் அடையாள அட்டைகளை கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
எங்கு வேண்டுமானாலும்...
தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயரிய சிகிச்சைகளை பெறலாம். இந்த திட்டம் பற்றி பொதுமக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் யார், யார் பயன்பெறலாம். எந்தந்த நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். எந்தந்த மருத்துவமனைகளில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்து வைத்துக் கொள்வதுடன், மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
மேலும் பஞ்சாயத்து அலுவலகங்களில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தகவல்களை விளம்பர பலகையாக வைக்க வேண்டும். மேலும் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எந்தந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற விவரங்களையும், அந்த மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களையும் துண்டு நோட்டீசாக அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக அரசே யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரிமியத்தொகையை செலுத்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவிர...
இந்த திட்டத்தில் புதிதாக 1,800 குடும்ப அட்டைதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதி இருந்தும் இதுவரை விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக் கொண்டு, குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் வந்தால் புகைப்படும் எடுத்துக் கொள்வதுடன், மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் பெற்று செல்லலாம். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக 500–வது நம்பர் கொண்டு வார்டு தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்டில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 778 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடியே 69 லட்சத்திற்கு மருத்துவ செலவு ஆகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 24 தனியார் மருத்துவமனைகளிலும், பிற அரசு மருத்துவமனைகளிலும் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 4 ஆயிரத்து 360 சிகிச்சைகள் ரூ.8 கோடியே 87 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.