Breaking News
recent

முகம்மது இப்னு காசிம்

கி.பி.711 -
சிரியாவின் டமாஸ்கஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு கிலாஃபத்தை நடத்திய கலீஃபா வலீது இப்னு அப்துல் மலிக் தன் ஆலோசனை சபையைக் கூட்டியிருந்தார்.
அலீ (ரலி)க்குப் பின் மதீனாவில் முஆவியா (ரலி) கலீஃபா ஆனார். அதன்பின் யஸீது, மர்வான், அப்துல் மலிக் என உமையா வம்சத்தினரே கிலாஃபத்தை தம் கைக்குள் வைத்துக் கொண்டனர்.
இப்போதோ அப்துல் மலிக்குக்குப் பின் அவருடைய புதல்வர் வலீது. தலைநகர் மதீனாவுக்குப் பதில் டமாஸ்கஸ்.
வலீதின் ஆலோசனைக் கூட்டத்தில் அவருடைய தம்பியும் வருங்கால கலீஃபாவுமான சுலைமான் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். ஈராக் பஸ்ராவின் ஆளுநரும் கலீஃபாவின் நம்பிக்கைக்குரியவருமான ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்றவர்களோடு மாவீரன் எனப் பெயரெடுத்திருந்த முகம்மதிப்னு காசிமும் தென்பட்டார். அமைச்சர்கள், படைத்தளபதிகள் என மிக முக்கியமானோர் ஆலோசனை சபையில் காணப்பட்டனர்.
“நம் வசமாக இருக்கும் முக்ரான் எல்லையில் சிந்து நாட்டரசன் உதய வீரன் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முக்ரானைத் தாண்டி ஈரான், ஈராக்கென பாரசீகத்தையே வெல்லப்போவதாகக் கூறிக் கொண்டிருப்பதாக நம் ஒற்றர்கள் செய்தி அனுப்பியுள்ளனர்” என கலீஃபா கிலாஃபத் ஆட்சிக்குக் கிழக்கில் எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“இதற்கெல்லாம் மேலாக ஒன்று சிந்து நாட்டில் நடந்து வருகிறது. சிந்து மன்னன் உதய வீரன் கடற்கொள்ளைக்காரர்களோடு கூட்டு வைத்துள்ளான். சிந்து நதி அரபுக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள முக்கிய துறைமுகம் தேபல். தேபலைத் தொட்டே இந்துஸ்தான், சரந்தீப் முஸ்லிம்கள் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கும் சிந்து நாட்டரசன் தொல்லை கொடுத்து வருகிறான். அரபுக் கடலில் பயணிக்கும் கப்பல்களில் கொள்ளையிடும் பொருளின் பங்கு உதய வீரனுக்குப் போய்ச் சேருகிறது. எனவே, உடனே உதய வீரனை அடக்கிவைக்க வேண்டும்” என அமைச்சர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார்.
“என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொருவரும் சொல்லுங்கள்” என்றார் கலீஃபா.
பெரும்பாலானவர்கள் சிந்து நாட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்லாம் என்றனர். பஸ்ரா ஆளுநர் ஹஜ்ஜாஜ் “தற்போதுள்ள சூழலில் உதய வீரனை எச்சரிப்போம். அந்த எச்சரிக்கைக்கு அவன் தலைசாய்க்காவிட்டால் படையெடுத்துச் செல்வோம்” என்றார்.
“படையெடுத்துச் செல்லலாமென்றுதான் நானும் நினைத்தேன். தற்போதுள்ள சூழ்நிலையில் போதிய படை டமாஸ்கஸில் இல்லை. கிழக்கே ரஷ்ய துருக்கிஸ்தானை வென்ற நம்முடைய படை கிப்தியா இப்னு முஸ்லிமா தலைமையில் தற்போது சீனாவை நோக்சிச் சென்று கொண்டிருக்கிறது. மேற்கே ஆப்பிரிக்காவை வென்ற படை ஆளுநர் மூஸா இப்னு நுசைர் ஆலோசனையின்படி தளபதி தாரிக் தலைமையில் ஸ்பெயினில் இறங்கிவிட்டது. ஆயிரக்கணக்கில் அங்குமிங்கும் நம் படை புனிதப் போர் செய்துகொண்டிருக்க புதிதாக ஒரு படையை முக்ரான் நோக்கி அனுப்ப வாய்ப்பில்லை. எனவே ஹஜ்ஜாஜ் சொல்வதுபோல் ஒரு தூதுக் குழுவை சிந்து நாட்டுக்கு அனுப்புவோம்” என கலீஃபா கூற அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
***
உபைதுல்லாஹ் எனும் வீரர் தலைமையில் ஒரு தூதுக் குழு சிந்து நாட்டுக்குச் சென்றது.
“முக்ரான் பகுதி சிந்து நாட்டைச் சேர்ந்தது. உங்கள் முக்ரான் ஆளுநர் ஹாரூன்தான் அடிக்கடி எங்கள் படையைக் கோபப்பட வைக்கிறார். கொள்ளைக்காரர்களோடு நாங்கள் கூட்டு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். அவர்களைப் பிடிக்க நாங்களுந்தான் முயன்று வருகிறோம். கொள்ளைக்காரர்கள் இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரியவில்லை. அவர்களின் சாமர்த்தியத்தைப் பார்க்கும்போது அவர்கள் ஏமனைச் சேர்ந்தவர்களாகவோ ஓமனைச் சேர்ந்தவர்களாகவோ தெரிகிறது. அரபகத்தின் தெற்கிலிருக்கும் அவர்கள் மிகப் பயங்கரமானவர்கள். அவர்கள்தான் மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்பவர்களையும் துன்புறுத்தி வருகிறார்கள்” என உதய வீரன் புதுப்புது கதைகளைச் சொன்னான்.
“மன்னர் பொய் சொல்லக்கூடாது. உங்கள் நாட்டுக்குத் தெற்கேயுள்ள மோடிஸ்தானுக்குச் சொந்தக்காரர்களே கொள்ளைக்காரர்கள் என்பது ஊரறிந்த சங்கதி” என உபைதுல்லாஹ் கூற உதய வீரனுக்குக் கோபம் வந்தது.
“கலீஃபா முக்ரான் பகுதியைத் தந்துவிட்டால் நமக்குள் பிரச்சினை இல்லை. இல்லையேல் நாங்கள் பாரசீகத்தைத் தாண்டியும் படை நடத்துவோம்” என உதய வீரன் திமிரோடு பேசினான். அரபு வரலாறுகள் இவனையே ‘தாஹிர்’ எனப் பேசுகின்றன.
***
உபைதுல்லாஹ்வின் தூதுக் குழு உதய வீரனின் திமிரான பேச்சை டமாஸ்கஸ் கொண்டுவந்து சேர்த்தது.
மீண்டும் ஆலோசனை. சிந்து நாட்டை நோக்கி முஸ்லிம்களின் படையை அனுப்பப் போவதாக கலீஃபா அறிவித்தார்.
படைத் தளபதி யார்?
கலீஃபாவின் தம்பி சுலைமான் சிந்து நாட்டைச் சிதற அடிக்கப்போகும் படைக்குத் தலைமைதாங்க விருப்பப்பட்டான்.
கலீஃபாவோ முகமதிப்னு காசிம்தான் சிந்து படையெடுப்புக்குத் தளபதி என அறிவித்தார்.
யாரிந்த முகமதிப்னு காசிம்?
கிலாஃபத் ஆட்சியின் கிழக்குப் பிராந்தியத் தலைநகர் பஸ்ராவின் ஆட்சிப் பிரதிநிதி ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் தகபீயின் சகோதரர் காசிமின் புதல்வர். தகபீ வம்சத்தின் குலக் கொழுந்து, பதினெட்டே வயதென்றாலும் மாமல்லனைப் போன்ற தோற்றம். குதிரையேற்றம், வாள்வீச்சு, வில்வித்தை எனப் போர்க்கலையின் எல்லாவகைகளையும் அறிந்த அனுபவம். மத்திய ஆசியாவின் பல்கு, ஸமர்கந்து முதலிய மாபெரும் கோட்டைகளைத் தகர்த்தெறிந்தவர். சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மாவீரர் கிப்தியா இப்னு முஸ்லிமாவுக்கு துணையாக நின்றவர். தற்போது டமாஸ்கஸில் நடந்த போர்ப்படை விளையாட்டுக்கு வந்து எல்லாப் போட்டிகளிலும் வென்றவர்.
“கலீஃபா, ஹஜ்ஜாஜின் குரலாகவே ஒலிக்கிறார். ஹஜ்ஜாஜுக்காகவே அவருடைய இளவலைத் தற்போது தளபதியாக்கிவிட்டார்” என வருங்கால கலீஃபா சுலைமான் முணுமுணுத்தார்.
“சீனப் போரிலிருந்துதானே இப்னு காசிம் டமாஸ்கஸ் வந்தார். அவரைத் திரும்ப சீனாவுக்கு அனுப்பாமல் கலீஃபா ஏன் சிந்துவுக்கு அனுப்புகிறார்? என்ன இருந்தாலும்இப்னு காசிம் அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்தானே!” என சுலைமானுக்கு அருகிலிருந்த ஒருவர் வெறும் வாயை மென்றார்.
மூச்சிரைக்க ஓடும் குதிரைப்படைக்கு மிக இளவயது தளபதி தலைமையேற்ற வரலாறு அண்ணலாரின் காலத்திலேயே உண்டு. இரண்டாவது மூத்தா போருக்கு இளைஞர் உஸாமா இப்னு ஜைதுதானே தலைமையேற்றார்.
***
முகமதிப்னு காசிம் தலைமையில் ஆறாயிரம் பேரடங்கிய குதிரைப்படை புறப்பட்டது.அப்படை புஸ்ராவை அடைந்தபோது ஹஜ்ஜாஜின் ஏற்பாட்டின்படி மூவாயிரம் ஒட்டகங்களைக் கொண்ட பெரும்படை இணைந்தது. அது ஷீராஜ், முக்ரான் நகரங்களைக் கடக்கும்போது பனிரெண்டாயிரம் ஆகியிருந்தது.
பாரசீக வளைகுடாவை ஒட்டியே பயணம் செய்த புனிதப் படை ஓமன் வளைகுடாவைத் தெற்கில் தள்ளி சிந்து நாட்டின் தேபல் துறை முகத்தை நோக்கிச் சென்றது.
அதே சமயம் ஷீராஜிலிருந்து பாரசீக வளைகுடா வந்த கப்பல்படை அரபுக் கடலை அடைந்து தேபலில் போர்மேகம் சூழவைத்தது.
தேபல் கோட்டையில் மிகப் பெரிய கொடி ஆடி அசைந்து ராட்சச கழுகின் சிறகுகள் போல் காட்சி தந்தது. கோட்டையில் வேறு அசைவேதும் தெரியவில்லை.
கப்பல்களில் வந்த ஐநூறு அரபு வீரர்கள் ‘மஞ்சனீக்’ எனும் ஏவுகணைகளை அமைப்பதில் ஈடுபட்டனர். அவை தேபல் கோட்டை மீது கற்களை வீசின.
கப்பல்படையும் குதிரைப்படையும் தேபல் கோட்டையைத் தம் வசம் கொண்டுவந்தன. அடுத்து நேருன் பிரதேசத்தை சரணடையச் செய்தனர். தொடர்ந்து அர்மாயீல் கோட்டை, பிராமணபுரிக் கோட்டை, ராவட் கோட்டை என எல்லாக் கோட்டைகளும் வீழ்ந்தன.
பாரசீகத்தையே வென்றுவிட எண்ணிய சிந்து மன்னன் உதய வீரன் கொல்லப்பட்டான்.
***
கி.பி. 712 -
சிந்து நாட்டில் முகம்மதிப்னு காசிம் ஆட்சியாளர். மூன்றரை ஆண்டுகாலம் மிகச் சிறப்பான ஆட்சியதிகாரத்தை சிந்து சுவைத்தது.
கலீஃபா வலீது இப்னு அப்துல் மலிக் மரணிக்க சுலைமான் கலீஃபா ஆனார்.சுலைமானின் காதுகளுக்கு எட்டிய இப்னு காசிமின் புகழ் எட்டிக்காயாய் கசந்தது. ‘உமையாக்களை புகழில் தகீபி வென்றுவிட அனுமதிக்கமாட்டேன். இளமையிலேயே எனக்குப் போட்டியாளனாக இருந்த இப்னு காசிமை இல்லாமல் செய்வேன்’ எனக் கருவிய சுலைமான் காய்களை நகர்த்தினார்.
இப்னு காசிம் மீது ஏதேதோ குற்றச்சாட்டுகளைக் கூறிய சுலைமான் ஆளுநர் பதவியைப் பறித்தார். யஜீத் இப்னு அபீகப்ஷா என்பாரை புதிய ஆட்சியாளராய் நியமித்தார்.
இப்னு காசிம் டமாஸ்கஸ் புறப்பட்டார்; சிந்து நாடே அழுதது.
டமாஸ்கஸ் சென்ற இப்னு காசிம் வஞ்சகமாய்க் கொல்லப்பட்டார். இருபத்திரண்டு வயது நிறைவதற்கு முன்பே ஓர் இலட்சிய வேங்கையின் வாழ்க்கையை முடித்துவிட்டனர்.
***
ஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட இப்னு காசிம் சிந்துவை தனியரசாக்கியிருக்க முடியும். ஒரு மகத்தான நல்லாட்சியைத் தந்திருந்ததால் இப்னு காசிமுக்கு சிலையெடுத்துக் கொண்டாடும் நிலைக்கு வந்திருந்த சிந்து மக்கள் ஆளுநருக்கு ஆதரவாகத் திரண்டிருப்பர். டமாஸ்கஸுக்கு எதிராக தன் கீழிருந்த பெரும் படையையும் திருப்பியிருக்க முடியும்.
சிந்து நாட்டை இப்னு காசிம் தொடர்ந்து ஆட்சி புரிந்திருந்தால் இஸ்லாதின் தாக்கம் இந்துஸ்தானத்திலும் எதிரொலித்திருக்கும்!
காலச்சக்கரம் உருண்டது.
இன்றுவரை இப்னு காசிம் போன்றவர் தோன்றவில்லை!
***
ஆக்கம்: தாழை மதியவன்.
adirai post

adirai post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.